Breaking News

அடுத்த ஆண்டு முதல் நீதித் துறையில் மாற்றங்கள்

வழக்குகள் தாமதமாவதை தடுப்பதற்கு அடுத்த ஆண்டு நீதித் துறையில் பாரிய மாற்றங்களை செய்யப் போவதாக நீதியமைச்சு தெரிவித்துள்ளது. 

அதில் முதல் கட்டமாக இணக்கப்படுத்தல் சபைக்கு வரக்கூடிய வழக்குகளின் நிதிப் பெறுமதியை 5 இலட்சம் ரூபா வரை அதிகரிக்க நடவடிக்கை எடுத்திருப்பதாக நீதியமைச்சர் விஜேயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார். 

தற்போது 250,000 ரூபாவாக இருக்கும் குறித்த நிதிப் பெறுமதியை 5 இலட்சம் ரூபா வரை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 

கடந்த 5 வருட காலப் பகுதியில் இணக்கப்படுத்தல் சபைக்கு வந்த வழக்குகளில் 51 வீதமானவை தீர்க்கப்பட்டுள்ளதாகவும், அது வழக்குகள் தாமதமாவதை தடுப்பதற்கு பாரிய பங்காற்றியுள்ளதாகவும் நீதியமைச்சர் சுட்டிக் காட்டியுள்ளார். 

மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் அதிக வழக்குகள் காணப்படுவதனால் அந்த திணைக்களத்துடன் பேசி குறித்த தவறுகளுக்காக அபராதம் விதிப்பதினூடாக மாத்திரம் தீர்வுகளை பெற்றுக் கொடுக்கும் நடைமுறை ஒன்றை செயல்படுத்த நீதியமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. 

அத்துடன் சிவில் மற்றும் குற்றவியல் வழக்கு ஏற்பாடுகளில் திருத்தம் செய்வதற்கு எதிர்பார்ப்பதாகவும் நீதியமைச்சர் விஜேயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.