Breaking News

ஸ்ரீ.சு.க வின் தலையில் சிலர் சுட முற்படுகின்றனர் - அமைச்சர் டிலான்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலையிலும் மார்பிலும் துப்பாக்கிச்சூடு நடாத்துவதற்கு சிலர் முற்படுவதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

துப்பாக்கி ரவைகள் தாக்காதவாறு சிலர் இருப்பதாகவும் கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை முன்னிலைப்படுத்திய கூட்டமைப்பினால், தவறுகளை திருத்திக்கொள்ள முடியாதமையால் இரண்டு தேர்தல்களில் தோல்வியடைந்ததாகவும் இதை வைத்து குறைத்து மதிப்பிட முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக்கு வராமல் இருந்தால் யுத்தம் தொடர்ந்தும் நடைபெற்றுக்கொண்டிருக்கும் எனவும் அவர் யுத்தத்தை முன்னெடுத்த அதேவேளை அரசாங்கத்தை வளப்படுத்தியதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கட்சியின் பொதுச் செயலாளராக மைத்திரிபால சிறிசேன பாரிய சேவைகளை முன்னெடுத்துள்ளதோடு, அவர் இல்லாவிட்டால் இந்த மாற்றம் ஏற்பட்டிருக்காது என அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

இணைந்த அரசாங்கம் இல்லாவிட்டால் ஐக்கிய தேசியக் கட்சியின் வரவு செலவுத்திட்டம் படுமோசமாக அமைந்திருக்கும் என்று தெரிவித்த அமைச்சர் இரு தரப்பினரும் கலந்துரையாடி செயற்பட வேண்டும் அவர் தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஸ வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக இருந்தார் என்பதற்காக நாட்டின் கொள்கைக்கு முரணானவர் என கருத முடியாது என்றும் இணைந்த அரசாங்கத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹாஷிம் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸவின் ஆதரவு கிடைக்கும் என்பதோடு தற்போதும் பெரும்பாலான உள்ளூராட்சி மன்றங்கள் அவருடனே இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தில் குற்றவாளியாக தீர்ப்பளிக்காத வேட்பாளர்களுக்கு வேட்புமனு வழங்கமுடியும் என்றும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட பட்சத்தில் அவர்கள் குற்றவாளியாக கருதப்படமாட்டார்கள் என்றும் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.