விசாரணைப் பொறிமுறை குறித்து தீவிர ஆலோசனை – இலங்கை அதிகாரி தகவல்
ஐ.நா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைய, முன்னெடுக்கப்படவுள்ள உள்ளக விசாரணை பொறிமுறை கட்டமைப்பு தொடர்பாக பல்வேறு மட்டங்களில் கலந்துரையாடல்களும் ஆலோசனைகளும் இடம்பெற்று வருவதாக வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
“ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பாக தேவையான நடவடிக்கைகள் சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்றன. இவற்றை பல்வேறு கட்டங்களாகவே முன்னெடுக்க வேண்டிய தேவை காணப்படுகிறது.
இலங்கை அரசாங்கம் மிகவும் உயர்ந்த மட்டத்தில் இந்த விடயம் குறித்து நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.வரும் ஜனவரி மாதம் இந்த விடயம் குறித்த இறுதி தீர்மானம் எடுக்கும் வகையில் தற்போது ஆலோசனைகளும் கலந்துரையாடல்களும் இடம்பெற்று வருகின்றன.
குறிப்பாக உள்ளக விசாரணை பொறிமுறை கட்டமைப்பை முன்னெடுப்பது குறித்து அரசாங்கம் ஏற்கனவே ஒரு அடிப்படை திட்டத்தை முன்வைத்துள்ளது. அந்தத் திட்டத்தின் படி பொது மக்கள் மத்தியில் கலந்துரையாடல்களை நடத்த இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
முதற்தடவையாக இலங்கை அரசாங்கம் இந்த விடயம் குறித்து விரிவான முறையில் வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.அத்துடன் இராஜதந்திர ரீதியிலும் அரசாங்கம் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துவருகின்றது.
விரைவில் இந்த விடயத்தில் இறுதி இணக்கப்பாட்டுக்கு வர முடியும். அதன் பின்னர் உள்ளக விசாரணை கட்டமைப்பை முன்னெடுக்க முடியும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.