கண்ணை மூடிக்கொண்டு கையெழுத்திடமாட்டோம் – ஹர்ஷ டி சில்வா
இந்தியா உள்ளிட்ட எந்தவொரு நாட்டுடனும், கண்ணை மூடிக் கொண்டு உடன்பாடுகளில் கையெழுத்திட அரசாங்கம் தயாராக இல்லை என்று, பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், ”இந்தியா போன்ற நாடுகளுடன் இருதரப்பு வர்த்தக உடன்பாடுகளை இலங்கை செய்து கொள்ள வேண்டும்.
ஆனால், அவர்களுக்கு நன்மையளிக்கும் வகையிலான உடன்பாடுகளில் கண்ணை மூடிக்கொண்டு கையெழுத்திடக் கூடாது. எமது அனுபவங்களில் இருந்து விரிவாக ஆராய வேண்டும்.
இந்தியாவுடன் விரிவான பொருளாதார கூட்டு உடன்பாட்டில் கையெழுத்திட்டால், துறைசார் வல்லுனர்கள் உள்ளிட்ட இந்திய தொழிலாளர்கள் இலங்கைக்குள் நுழைவதற்கு வாய்ப்பாகும் என்றும், அது உள்ளூரில் வேலைவாய்ப்பு பிரச்சினையை ஏற்படுத்தும் என்றும் சிலர் அஞ்சுகின்றனர்.
இந்தியாவுடன் அல்லது சீனாவுடனான உடன்பாடுகளுக்கு ஆம் என்றோ இல்லையென்றே கூறமாட்டோம்.நாம் ஒரு சிறிய நாடு, எமது நலன்களுக்கு முக்கியத்துவம் அளிக்கின்ற இருதரப்பு உடன்பாடுகள் அவசியமானவை.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.