Breaking News

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மூன்றாம் கூட்டணி அமைக்கும் முயற்சியில் மஹிந்த அணி



சித்திரைப் புத்தாண்டுக்கு முன்னர் நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மஹிந்த ஆதரவு அணியுடன் இணைந்து களமிறங்குவதற்கு இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, சமசமாஜக் கட்சி ஆகியன தீர்மானித்துள்ளன.

அத்துடன், கடும்போக்குடைய சிங்கள தேசியவாத அமைப்புகளும் மஹிந்த அணியுடன் கைகோக்கவுள்ளன.

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு இன்னும் காலமிருக்கின்ற நிலையில், தற்போதிருந்தே அரசியல் கட்சிகள் அதை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்குரிய தயார்படுத்தல் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன.வேட்பாளர், கூட்டணி அமைத்தல் உட்பட பூர்வாங்கப் பணிகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.

அவ்வகையில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைப் பலப்படுத்துவதற்கு தம்முடன் இணையுமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விடுத்துள்ள கோரிக்கையை இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, சமசமாஜக் கட்சி ஆகிய இடதுசாரிக் கட்சிகள் நிராகரித்துள்ளன.

பொது எதிரணி எனத் தம்மை அடையாளப்படுத்திக்கொள்ளும் மஹிந்த ஆதரவு அணியில் விமல் வீரவன்ஸ தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி, தினேஷ் குணவர்தன தலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னணி, வாசுதேவ நாணயக்கார தலைமையிலான ஜனநாயக இடதுசாரி முன்னணி, உதய கம்மன்பிலவின் தூய ஹெல உறுமய ஆகிய கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.

மேற்படி கட்சிகளுடன் கூட்டணி வைத்துக்கொண்டால் சிக்கல் நிலை உருவாகும் என சுதந்திரக் கட்சி கருதுகின்றது. அத்துடன், இனவாத, மதவாத கட்சிகளுடன் இனிமேல் கூட்டணி கிடையாது என்றும் அது அறிவித்துள்ளது. அதேபோல், மைத்திரி தலைமையிலான சுதந்திரக் கட்சியுடன் இணைந்து களமிறங்க மஹிந்த ஆதரவு அணியும் தயாரில்லை.

எனவே, மூன்றாம் கூட்டணி அமைக்கும் முயற்சியில் மஹிந்த அணி இறங்கியுள்ளது. இதைப் பலப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இன்னும், மறுபுறத்தில் இந்தக் கூட்டணி பலமடையாமல் இருப்பதற்குரிய நடவடிக்கையில் சுதந்திரக் கட்சியின் உயர்பீடம் இறங்கியுள்ளது. இதன் ஓர் அங்கமாகத்தான் இடதுசாரிக் கட்சிகளை வளைத்துப்போடும் முயற்சி முன்னெடுக்கப்பட்டது. ஆனால், அது தோல்வியடைந்துள்ளது.

அதேவேளை, உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கூட்டணி அமைத்து யானை சின்னத்தில் களமிறங்கும் நிலைப்பாட்டிலேயே ஐக்கிய தேசியக் கட்சி இருக்கிறது. தமிழ் முற்போக்கு கூட்டணி உள்ளிட்ட சிறு கட்சிகளும் ஐ.தே.கவுடன் இணைந்து போட்டியிடவுள்ளன.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஒரு சில தொகுதிகளில் தனித்தும் ஏனைய தொகுதிகளில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்தும் போட்டியிடவுள்ளது.