கம்மன்பில, வீரவங்சவை விலக்கிவிட்டு தமிழ், முஸ்லிம் கட்சிகளை இணைப்போம்!
சிறிலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியானது உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவங்ச போன்றவர்களை முன்னணியிலிருந்து நீக்கிவிட்டு முற்போக்கு சிந்தனைகொண்ட தமிழ் மற் றும் முஸ்லிம் கட்சிகளை இணைத்துக்கொள்ளும் என்று இராஜாங்க அமைச்சர் டிலான் பெரெரா தெரிவித்தார்.
முற்போக்கு சிந்தனை கொண்ட அரசியல்வாதியான டலஸ் அழகப்பெருமவும் இந்தக் கூட்டணியிலிருந்து விலகி எம்முடன் இணைந்துகொள்ளவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டின் அரசியல் நிலைமை மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நிலை என்பன குறித்து விபரிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அமைச்சர் இந்த விடயம் குறித்து மேலும் குறிப்பிடுகையில்
வரலாற்றில் மிகவும் முக்கியமான கட்டத்திலேயே சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசிய கட்சியும் இணைந்து தேசிய அரசாங்கத்த அமைத்துள்ளன.பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அடுத்த வரவு செலவுத்திட்டத்தின்போது பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சம்பவங்களும் கட்சியின் நிலைப்பாடும் எமக்கு சிறந்த சமிக்ஞையை வெளிக்காட்டியுள்ளன.
இதேவேளை கடந்த பாராளுமன்றத் தேர்தலில் நான் மஹிந்த ராஜபக்ஷவும் மைத்திரிபால சிறிசேனவும் இணைந்த அரசாங்கம் அமையவேண்டும் என்று செயற்பட்டேன். ஆனால் மக்கள் அதனை விரும்பவில்லை. நாட்டு மக்கள் மைத்திரி ரணில் அரசாங்கம் அமையவேண்டும் என்று ஆணை வழங்கினர். எனவே ஒருபோதும் மக்களின் ஆணையை மீறி நாம் செயற்பட முடியாது.
ஆனால் மறுபுறம் மக்கள் ஐக்கிய தேசிய கட்சி தனித்து ஆட்சியமைக்க ஆணை வழங்கவில்லை. எனவேதான் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசிய கட்சியும் இணைந்து தேசிய அரசாங்கத்த அமைத்துள்ளன. கடந்த பாராளுமன்றத் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு தமிழ் முஸ்லிம் மக்களின் வாக்குகள் அதிகமாக கிடைக்கவில்லை.
ஆனால் எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி தனித்து களமிறங்கவுள்ளது. அதில் நாங்கள் அதிகளவாக தமிழ் முஸ்லிம் வாக்குகளை பெறுவோம் என்று நம்புகின்றோம்.
குறிப்பாக சிறிலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியானது உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவசங்ச போன்றவர்களை முன்னணியிலிருந்து நீக்கிவிட்டு முற்போக்கு சிந்தனைகொண்ட தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளை இணைத்துக்கொள்ளும். இதன்மூலமே நாங்கள் இந்த செயற்பாடுகளை மேற்கொள்வோம் என்றார்.