Breaking News

ஹிருணிகாவினால் மிரட்டப்பட்டேன் – கடத்தப்பட்ட இளைஞன் வாக்குமூலம்

ஹிருணிகா பிரேமச்சந்திரவின் ஆதரவாளர்களால் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் இளைஞன், ஹிருணிகாவால் நேரடியாகவே மிரட்டப்பட்டதாகத் தெரிவித்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

டிபென்டர் வாகனத்தில் வைத்து, ஹிருணிகாவின் ஆதரவாளர்கள் அறுவரால் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் இவ்விளைஞன், 26 வயதான யு. பிரியங்கர எனவும் ஆடைத்தொழிற்சாலையொன்றின் ஊழியர் எனவும் அடையாளங் காணப்பட்டுள்ளார்.

இவ்விளைஞன், திங்கட்கிழமை இரவு 10 மணியளவில், தெமட்டகொடை பொலிஸ் நிலையத்துக்கு, வெளிக்காயங்களுடன் சென்றுள்ளார். கடத்தப்பட்ட தான், அடையாளந்தெரியாத இடமொன்றுக்கு கொண்டுசெல்லப்பட்டதாகவும், அங்குவைத்து ஹிருணிகாவால் மிரட்டப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தனது நெருங்கிய ஆதரவாளரொருவரின் மனைவியோடு கொண்டுள்ள உறவை நிறுத்துமாறே, அவர் மிரட்டியதாக, அவ்விளைஞன் தெரிவித்துள்ளார். எனினும், ஹிருணிகாவைச் சந்திப்பதற்கு முன்னதாகவா அல்லது அதன் பின்னரா, அவ்விளைஞன் தாக்கப்பட்டான் என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை என பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் 62-1859 என்ற இலக்கத்தைக்கொண்ட டிபெண்டர் ரக வாகனத்தை, பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். தாக்குதலுக்கு உள்ளான இளைஞன், ஆபத்தான நிலையில் இல்லை என்றும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு சொந்தமான டிபெண்டர் ரக வாகனத்தில் வந்து ஆறுபேர் கொண்ட குழுவினரே, தெமட்டகொடையில் வைத்து, திங்கட்கிழமை பிற்பகல் 2.30க்கு அவ்விளைஞனைக் கடத்தியுள்ளனர்.

அவ்விளைஞன், செவனகல பகுதியைச் சேர்ந்தவன் என்பதுடன் தொழில் நிமிர்த்தமாக அவர், கொலன்னாவை பகுதியில் தற்காலிகமாக தங்கியுள்ளார். கைது செய்யப்பட்ட ஆறு பேரையும் இன்று(23) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இரகசியப் பொலிஸார் தெரிவித்தனர்.