மஹிந்தவின் சிறைச்சாலை விஜயங்களை தடுக்குமாறு அசாத்சாலி கோரிக்கை
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ சிறைச்சாலைக்கு மேற்கொள்ளும் விஜயங்களை அரசாங்கம் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவை கடத்தியதாக சந்தேகிக்கப்பட்டு, கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள 5 இராணுவ வீரர்களையும் வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்று நேற்று செவ்வாய்க்கிழமை பார்வையிட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, அரசியல் கைதிகளாக அவர்களை தடுத்து வைத்துள்ளதாக ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
இதனால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ சிறைச்சாலைக்கு மேற்கொள்ளும் விஜயங்களை அரசாங்கம் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என அசாத் சாலி கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்துடன் குறித்த இராணுவ வீரர்களை எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர் விடுதலை செய்ய வேண்டும் என கூட்டு எதிர்கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில் பௌத்த மதகுரு ஒருவரும் சட்டத்தரணி ஒருவரும் தெரிவித்தமை குறித்து அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.