முதன்முறையாக தமிழர்களின் பங்கேற்போடு புதிய அரசியல் யாப்பு உருவாக்கம்!
ஸ்ரீலங்கா சுதந்திரம் அடைந்ததன் பின்னர் முதன்முறையாக தமிழ் அரசியல் கட்சிகளும் பொது அமைப்புகளும் நாட்டுக்கான அரசியல் யாப்பை உருவாக்குவதில் பங்கெடுத்துள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
1972 மற்றும் 1978 ஆகிய அரசியல் அமைப்பு சீர்திருத்தங்களின்போது தமிழர்களின் பங்கேற்பு இருக்கவில்லை என்பதோடு 1972ஆம் ஆண்டு முதலாம் குடியரசு யாப்பில் உத்தியோகபூர்வ மொழி என்ற அடிப்படைத் தீர்மானத்தை மாற்றுவதற்கு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.
எனினும் 1978ஆம் ஆண்டு இரண்டாம் குடியரசு அரசியல் யாப்பில் ஜே.ஆர் ஜெயவர்தன அதனை நீக்கியபோதிலும் தமிழர்களின் பங்களிப்பு இருக்கவில்லை. இந்தநிலையிலேயே தமக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்ற நிலையில் தமிழீழம் அல்லது தனிநாட்டு கோரிக்கையை தமிழர்கள் முன்வைத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா அரசாங்கம் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 9ஆம் திகதி புதிய அரசியலமைப்பினை உருவாக்கும் பணிகளை ஆரம்பிக்கவுள்ளது.இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதிய சட்டமூலம் ஒன்றையும் நாடாளுமன்றில் முன்வைக்கவுள்ளார்.
இந்த யாப்பில் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயங்கள் இணைக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, தமிழ் மக்கள் பேரவை ஜனவரி 2ஆம் திகதி அதிகாரப்பரவலாக்கல் தொடர்பில் உப குழுவை அமைக்கவுள்ளதாக அதன் இணைத்தலைவர்களில் ஒருவரான வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், புதிய அரசியலமைப்பை தயாரிக்கும் தேசிய செயற்பாட்டில் வடகிழக்கு மாகாணங்களுக்கு வெளியே வாழும் பதினாறு இலட்சம் தமிழ் மக்கள் தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி பொறுப்புணர்வுடன் செயற்பட்டு கொண்டிருப்பதாக தெரிவிக்கின்றது.
கடந்த காலங்களின் தூரநோக்கற்ற அரசியல் அக்கறையீனம் காரணமாக தேசிய முக்கியத்துவம் வாய்ந்த சந்தர்ப்பங்களில் மலையக தமிழ் மக்கள் உதாசீனப்படுத்தப்பட்ட வரலாற்றில் இருந்து மாறுபட்ட புதிய வரலாறு உருவாகுமென அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இதேவளை, அரசியல் நிர்ணய சபையின் ஆலோசனைக் குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளடக்கப்பட்டுள்ளார். எனினும் தற்போதைய அரசாங்கம் பதவி கவிழ்க்கப்பட்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பதவிக்கு வரும் சந்தர்ப்பத்தில், தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுக்கொள்வதற்கு முடியாமல் போகும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.