யுத்த வெற்றியுடன் தமிழர்களை மறந்தார் மஹிந்த - கயந்த
யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் மஹிந்த அரசாங்கம் தமிழ் இனம் இலங்கையில் இருப்பதை மறந்து விட்டதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான கயந்த கருணாதிலக தெரிவித்தார்.
வடக்கிலும் கிழக்கிலும் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைநதுள்ளது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அது குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்துகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்,‘வடக்கிலும் கிழக்கிலும் அரசாங்கம் மேற்கொண்டு வரும் செயற்பாடுகளை அனைவரும் வரவேற்கின்ற அதேவேளை, ஒரு அணியினர் அதனை விமர்சிக்கின்றனர்.
கடந்த காலத்தில் அரசாங்கம் தமிழ்ப் பிரதேசங்களை சரியாக கவனத்திற் கொள்ளாத நிலையிலேயே இன்று ஜனாதிபதியும் பிரதமரும் ஜனநாயக செயற்பாடுகளைச் சரியாக கையாண்டு வருகின்றனர்.
மஹிந்த ஆட்சியில், அதவாது யுத்தத்தின் பின்னர் வடக்கையும் கிழக்கையும் கவனத்திற் கொண்டு அப்பகுதி மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைக் பூர்த்தி செய்திருந்தால் இன்று எமக்கு அவர்களை விசேடமாக கவனிக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது.
ஆனால் யுத்தம் முடிவிற்கு வந்தவுடன் இலங்கையில் தமிழர்கள் வாழ்கின்றனர் என்பதையே மஹிந்த அரசாங்கம் மறந்துவிட்டிருந்த நிலையில், இன்று தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை தீர்க்க வேண்டிய மிகப் பெரிய தேவை ஏற்பட்டுள்ளது.
பொது மக்களிடம் இருந்து அபகரித்த நிலங்களை மீண்டும் அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். அவர்களுக்கான தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். வடக்கிலும் கிழக்கிலும் பாடசாலைகளை சீரமைத்துக் கொடுக்க வேண்டும்.
அதேபோல் அவர்கள் உரிமைகளை பெற்றுக் கொடுப்பது அரசாங்கத்தின் மிக முக்கிய செயற்பாடாகும். அன்று அரசாங்கம் ந்த விடயங்களைச் செய்யத் தவறியமையே இன்றுவரை நாம் சர்வதேச நாடுகளுக்கு பதில் கூற வேண்டிய நிலைமையை ஏற்படுத்தியுள்ளது.
ஆகவே இப்போது அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை விமர்சிக்கும் நபர்கள் தான் இன்று நாடு சிக்கலை எதிர்கொள்ள காரணமானவர்கள் என்பதை மறந்துவிடக் கூடாது.
அதேபோல் இனவாதத்தில் அரசியல் செய்பவர்களுக்கு ஜனநாயகம் என்ற பாதை கடினமானதாகவே இருக்கும். ஆகவே மஹிந்த அணியினர் இன்னும் தமது நிலைப்பாட்டில் இருந்து மாறாது செயற்பட்டு வருகின்றனர்.
இப்போதும் இனவாதம் பேசி மக்களின் ஒற்றுமையினை சீர்குலைத்துவிட வேண்டாம் என்பதையே இவர்களுக்கு கூற விரும்புகின்றோம். இந்த அரசாங்கம் இனவாதம் இல்லாது மூவின மக்களையும் ஒன்றிணைத்தே பயணிக்கின்றது’ என்றும் கூறினார்.