வன்னி மாவட்ட பாடசாலைகளை புறக்கணிக்கிறது கல்வி அமைச்சு
கல்வி அமைச்சின் அண்மையில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்தினூடாக ஒவ்வெரு பிரதேச செயலகங்களிலிருந்தும் இரண்டு பாடசாலைகளை அபிவிருத்தி திட்டங்களில் வன்னிப்பிரதேச பல பாடசாலைகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்காந்தராசா விடுத்துள்ள அறிக்கையில் இந்த விட்யம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கல்வி அமைச்சின் அண்மையில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்தினூடாக வன்னி பிரதேசத்தில் காணப்படுகின்ற 15 பிரதேச செயலக பிரிவுகளிலும் உள்ள 30 பாடசாலைகள் பரிந்துரைக்கப்பட்டிருந்த போதிலும் மேற்படி திட்டத்தினூடாக 18 பாடாசாலைகளே தெரிவு செய்யப்பட்டுள்ளன.
வவுனியாவில் 8 பாடசாலைகளில் 7 பாடசாலைகளும், மன்னாரில் 10 பாடசாலைகளில் 5 பாடசாலைகளும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 12 பாடசாலைகளில் 6 பாடசாலைகளுமே தெரிவு செய்யப்பட்டுள்ளன.
இதன்காரணமாக வன்னி பிரதேசத்தில் 12 பாடசாலைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.30 ஆண்டுகாலப்போராட்ட காலத்தில் எமது கல்வி வளங்கள் மற்றும் உட்கட்டுமான வசதிகள் என்பன அழிவடைந்த நிலையில் எமது கல்விசார் அபிவிருத்திகளை முன்னெடுப்பது கட்டாயமான பணியாக மாறியுள்ளது.
இந்நிலையில் அண்மையில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்தினூடாக பரிந்துரைக்கப்பட்ட பல பாடசாலைகள் நிராகரிக்கப்பட்டமையானது எமது மாணவர்களுக்கான கல்வி உரிமையினை மீறும் செயலாகும்.
வன்னிப்பிரதேச கல்வி அபிவிருத்தியினை முன்னேற்றுவதற்கு மிகப்பெரிய வாய்ப்பாக அடையக்கூடிய இத்திட்டத்தினை கல்வி அமைச்சு எமது நிராகரிக்கப்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் வழங்குதல் வேண்டும்.
எமது மாணவர் சமுதாயம் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியிலும் அடிப்படை வசதிகளற்ற நிலையிலும் தமது கல்வியை இடைவிடாது தொடர்ந்த மனோதைரியம் மிக்க சமூகமாகும்.
மீள்குடியேற்றத்தின் பின்னரான காலத்தில் கல்வி சார் உட்கட்டுமான அபிவிருத்திகள் தேவையாக உள்ளது எமது மாணவர்களும் நவீன உலக கல்வி முறைமைகளுள் உள்வாங்கப்படவேண்டும் அவர்களது திறமைக்கு களம் அமைத்துக்கொடுக்க வேண்டியது கல்வி அமைச்சின் பொறுப்பாகும்.
எனவே வன்னிப்பிரதேசத்தில் இருந்து பரிந்துரைக்கப்பட்ட அனைத்து பாடசாலைகளையும் மேற்படி திட்டத்தினுள் உள்வாங்கி எமது வன்னி பிரதேச கல்வி அபிவிருத்தியை இத்திட்டத்தினூடாக மேம்மபடுத்த வேண்டியது கல்வி அமைச்சின் கடமையாகும் – என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.