இனவாத கருத்துக்களை தடை செய்யும் சட்டமூலம் - மனித உரிமைகள் ஆணைக்குழு அரசாங்கத்துக்கு அறிவுரை
குரோதப் பேச்சுக்களைத் தடைசெய்யும் சட்டமூலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழு அரசாங்கத்துக்கு அறிவுரை வழங்கியுள்ளது.
இனவாத, மதவாத கருத்துக்கள் மூலம் எந்தவொரு இன, மதப்பிரிவினருக்கும் எதிரான கருத்துக்களை வெளியிடுவதை தடைசெய்வதற்கான சட்டமூலம் ஒன்று அண்மையில் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.
எனினும் பொதுபல சேனா உள்ளிட்ட அடிப்படைவாத அமைப்புகளின் அழுத்தம் காரணமாக பின்னர் அந்தச் சட்டமூலம் வாபஸ் பெறப்பட்டது.
இந்நிலையில் குறித்த சட்டமூலத்தை சர்வதேச பிரமாணங்கள் மற்றும் மனித உரிமைகள் பிரகடனங்களுக்கு அமைவாக திருத்தம் செய்து மீண்டும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு அரசாங்கத்துக்கு அறிவுரை வழங்கியுள்ளது.
இன்னும் குறித்த சட்டமூலத்தில் எந்தவொரு நபருக்கு எதிராகவும் பகைமையைத் தூண்டவோ, வன்முறை மற்றும் மத துவேசத்தை விதைக்கும் வகையில் தூண்டுதல்களை மேற்கொள்ளவோ, தேசிய மற்றும் இனவாத செயற்பாடுகளை மேற்கொள்ளவோ, யுத்தத்தை ஊக்குவிப்பதோ தடை செய்யப்பட வேண்டும் என்ற சரத்தையும் புதிதாக குறித்த சட்டமூலத்தில் சேர்த்துக் கொள்ளுமாறும் மனித உரிமைகள் ஆணைக்குழு மேலும் பரிந்துரைத்துள்ளது.
இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில் போதிய சாட்சியங்கள் இருக்கும் பட்சத்தில் அதற்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் வகையிலான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.