பட்ஜட் மீதான வாக்கெடுப்பு இன்று
2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெறவுள்ளது. மாலை 5 மணிக்கு பாராளு மன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து ஏற்படுத்தியிருக்கும் அரசாங்கத்தின் கன்னி வரவு செலவுத் திட்டம் கடந்த நவம்பர் மாதம் 20ம் திகதி நியதிமைச்சர் ரவி கருணா நாயக்கவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் 21ம் திகதி ஆரம்பமானது. பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், இரண்டாவது வாசிப்பு மீதான விவாதத்தை ஆரம்பித்து வைத்தார். இதனைத் தொடர்ந்து இன்று வரை ஒன்பது நாட்கள் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதத்துக்கு நாட்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.
இவ்விவாதத்தில் ஆளும் கட்சி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு வரவு செலவுத் திட்டம் தொடர்பான கருத்துக்களைத் தெரிவித்திருந்தனர்.
இன்று பிற்பகல் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க பதிலளித்து உரையாற்றுவார். அதன் பின்னர் மாலை 5 மணியளவில் இரண்டாவது வாசிப்பு வாக்கெடுப்புக்கு விடப்படும்.
எதிர்க்கட்சியில் உள்ள ஐ.ம.சு.மு. உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்தை கடுமையாக விமர்சித்தி ருந்ததுடன், மக்களுக்கு நிவாரணங்கள் எதனையும் வழங்காத வரவு செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களிக்கப் போவதாக கூறியிருந்தனர்.
இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பின் பின்னர் நாளை 3 ம் திகதி முதல் 19 ம் திகதி வரை குழு நிலை விவாதம் நடைபெறும். குழு நிலை விவாதத்தின் போது வரவு செலவுத் திட்டத்தில் அமைச்சு க்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் விவாதம் நடைபெறும்.