Breaking News

தமிழ் மக்கள் பேரவையின் உருவாக்கத்தை வரவேற்கும் தமிழ் சிவில் சமூக அமையம்

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தமிழ் மக்கள் பேரவையின் உருவாக்கத்தை தமிழ் சிவில் சமூக அமையம் மகிழ்ச்சியுடன் வரவேற்பதாக அவ்வமையத்தின் இணைப்பேச்சாளர்களான எழில்ராஜன், கு.குருபரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

தமிழ் மக்கள் பேரவையின் உருவாக்கம் தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) சிவில் சமூக அமையத்தால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை தொடர்ச்சியாக வழி நடத்தும் பொருட்டும் அதனை மக்கள் மயப்படுத்தும் பொருட்டும் சிவில் சமூகக்குழுக்கள், அரசியற் கட்சிகள், தொழிற்சங்கங்கள் ஆகியவற்றை உள்ளடக்கி கடந்த 19 டிசம்பர் 2015 அன்று உருவாக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் பேரவையின் உருவாக்கத்தை தமிழ் சிவில் சமூக அமையம் வரவேற்பதோடு இவ்வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முயற்சியில் பங்கெடுப்பதிலும் பெரு மகிழ்ச்சி கொள்கிறோம்.

தமிழர்களின் அரசியல் போராட்டம் தனி நபர், கட்சி மற்றும் தேர்தல் அரசியலை கடந்து சிவில் சமூக மற்றும் அரசியல் வெளிகளை உள்ளடக்கி மக்கள் அரசியலாக பரிணாமம் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த 6 வருடங்களாக தமிழர்கள் மத்தியில் சிவில் சமூக வெளியை பலப்படுத்தும் முயற்சியில் தமிழ் சிவில் சமூக அமையம் தன்னாலான பணிகளை செய்து வருகிறது.

தொடர்ந்து சிவில் சமூக வெளியூடாக தமிழ் மக்களின் அபிலாசைகளை வெளிப்படுத்தும் பணிகளை தமிழ் சிவில் சமூக அமையம் தொடரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். அதேவேளை சமாந்திரமாக சிவில் சமூக மற்றும் அரசியல் வெளியை ஒன்றிணைக்கும் தமிழ் மக்கள் பேரவையின் முயற்சிக்கும் நாம் பங்களிப்போம்.

தமிழ் மக்கள் பேரவையானது தமிழ்த் தேசிய அரசியலில் ஆத்மார்த்தமாக செயற்படும் அனைத்து தரப்பினரையும் உள்வாங்க வேண்டும் என நாம் கருதுகிறோம். குறிப்பாகப் பெண்களினதும் இளைஞர்களினதும் பிரதிநித்துவம் பேரவையில் உள்வாங்கப்பட வேண்டும் என்பதில் நாம் ஆத்மார்த்தமாக வேலை செய்வோம்.

நலிவடைந்த சமூகங்களினதும், பாதிக்கப்பட்ட மக்களினதும் பிரதிநித்துவம் தமிழ் மக்கள் பேரவையில் உள்ளடக்கப்படுவதிலும் அது உண்மையான மக்கள் இயக்கமாக பரிமாணிப்பதிலும் நாம் முழு மூச்சுடன் செயற்படுவோம்.

மக்கள் பங்குபற்றலை தமிழர் அரசியலில் சாத்தியப்படுத்தலே தமிழ் மக்கள் பேரவையின் தலையாய குறிக்கோளாக இருக்க நாம் எமது பங்களிப்பை நெறிப்படுத்துவோம். எமது கூட்டு அனுபவத்தையும் அறிவையும் ஒன்று சேர்த்து புதிய சிந்தனைகளுக்கான களமாக தமிழ் மக்கள் பேரவை அமைய நாம் எமது பங்களிப்பை வழங்குவோம்.

நல்லாட்சி என்ற பெயரால் மூடிய கதவுகளின் பின்னால் எமது அரசியல் எதிர்காலம் தீர்மனிக்கப்படுவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. எமது மக்களுக்கான தீர்வு மக்கள் மன்றத்தில் வைத்து விவாதிக்கப்பட்டு அதன் பின்னரே எமது மக்களின் முன் மொழிவாக முன் வைக்கப்பட வேண்டும். அரசியல் தீர்வுக்கான தேடலில் தமிழ் மக்களின் பங்குபற்றலை ஏதுப்படுத்துதல் தமிழ் மக்கள் பேரவையின் உடனடி வேலைத் திட்டங்களில் ஒன்றாக இருக்க வேண்டும்.

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வரும் அனைத்து தரப்பினரையும் உள்வாங்கும் எண்ணத்துடன் உருவாக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் பேரவையை கட்சி அரசியல் நோக்கம் கொண்டதென காட்டும் முயற்சிகளையிட்டு நாம் கவலையடைகின்றோம்.

எதனையும் தேர்தல் அரசியலாகவும் கதிரைப் போட்டிக்கான அரசியலாகவும் பார்க்கும் அரசியல் தலைமைகள் தொடர்ந்து சிவில் சமூக வெளியை தமக்கு எதிரானதாகக் கருதி வந்துள்ளதோடு மக்கள் மயப்பட்ட அரசியலை விரும்பாதவர்களாகவும் இருந்து வந்துள்ளனர். தேர்தலில் மக்களின் வாக்குகளை பெற்றுக் கொள்வதோடு இவர்களினது சனநாயகம் தொடர்பான விளங்கிக் கொள்ளல்கள் முற்றுப் பெறுவது எமது அரசியலின் சனநாயக போதாத்தன்மையை வெளிப்படுத்தி நிற்கின்றது.

இவர்களது எதிர்ப்பையும் அரசியல் சுயலாபங்களையும் கடந்து தமிழ் மக்கள் பேரவையின் நோக்கங்கள் ஈடேற அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டுமென வேண்டுகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.