காணாமல் போனவர்க்கும் தமக்கும் தொடர்பில்லை என்கிறார் டக்ளஸ்
காணாமற்போனவர்கள் தொடர்பான சம்பவத்திற்கு அரசாங்கமே பொறுப்புக் கூற வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஊடக அமையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
காணாமற் போனோர் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு, சொல்வதை மட்டும் பதிவு செய்யாது அவற்றின் உண்மைத் தன்மைகளைக் கண்டறியக் கூடிய வகையில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்.
அத்துடன் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மீது சேறுபூசும் வகையில் ஆணைக்குழுவில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினைகளுக்கு அரசாங்கமே தீர்வு காண வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் முன்னாள் அமைச்சர் மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான நடராஜா ரவிராஜ், ஜோசப் பரராஜசிங்கம் ஆகியோரது படுகொலைகள் தொடர்பில் எம்மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
எனினும் குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பான உண்மைகள் தற்போது வெளிவருகின்றன என அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அமர்வுகளின் போது ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியினால் தமது மகன் கடத்திச் செல்லப்பட்டதாக தாய் ஒருவர் சாட்சியமளித்தமை குறிப்பிடத்தக்கது.