அரசாங்கத்திற்கு பந்தம்பிடிக்கும் செயற்பாட்டில் தமிழ் கூட்டமைப்பு
தேசிய அரசாங்கத்துக்கு பந்தம் பிடிக்கும் செயற்பாடுகளையே எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொண்டுவருகின்றது. மக்களுக்கு எதிரான வரவு செலவுத்திட்டத்தை ஆதரித்ததன் மூலம் எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் ஒரு பகுதியாக மாறியுள்ளது என்று மஹிந்த அணியின் முக்கியஸ்தரும் மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவருமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.
ஆனால் எமது ஒன்றிணைந்த எதிர்க்கட்சியானது உண்மையில் மக்களுக்காக குரல் கொடுத்துவருகின்றது. மக்களுக்கு நன்மையளிக்காத வரவு செலவுத்திட்டத்தை எதிர்த்து குரல் கொடுத்து அதில் பாரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதற்கு வழி வகுத்துள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன மேலும் தெரிவிக்கையில்
மக்களுக்கு நன்மையளிக்காத வரவு செலவுத்திட்டம் அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட நிலையில் எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதற்கு ஆதரவு வழங்கியுள்ளது. அவ்வாறு பார்க்கும்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேசிய அரசாங்கத்துக்கு பந்தம் பிடிக்கும் செயற்பாடுகளை நன்றாகவே மேற்கொண்டுவருகின்றமை புலனாகின்றது.
இந்த வரவு செலவுத்திட்டத்தினால் மக்களுக்கு நன்மையில்லை. வைத்தியர்கள் அரச ஊழியர்கள் விவசாயிகள் என பலதரப்பட்டவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் வைத்தியர்கள் அரச ஊழியர்கள் விவசாயிகள் உள்ளிட்டோரை கவனத்திற்கொள்ளாமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவு செலவுத்திட்டத்துக்கு ஆதரவு வழங்கியுள்ளது.
தற்போதைய நிலைமையில் தேசிய அரசாங்கத்துக்கு பந்தம் பிடிக்காமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் அரசியல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் தான் தேசிய அரசாங்கத்தின் ஒரு பகுதியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாறியுள்ளது. இப்படியொரு தமிழ்க் கூட்டமைப்பை நாங்கள் ஒருபோதும் கண்டதில்லை. சாதாரண மக்கள் குறித்து எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிந்திக்காமல் இருக்கின்றது.
ஆனால் மக்களின் சார்பாக நிற்கும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினராகிய நாங்கள் வரவு செலவுத்திட்டத்தை எதிர்த்தோம். அதுமட்டுமன்றி மக்களுக்கு நன்மையளிக்காத வரவு செலவுத்திட்டத்தை எதிர்த்து குரல் கொடுத்து அதில் பாரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதற்கு வழி வகுத்துள்ளோம்.
எமது எதிர்ப்பு நியாயமானது என்ற காரணத்திற்காகவே வரவு செலவுத்திட்டத்தில் திருத்தங்களை செய்ய அரசாங்கமும் உடன்பட்டது. அந்தவகையில் பார்க்கும்போது மக்களுக்காக குரல் கொடுக்கும் உண்மையான எதிர்க்கட்சியாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியான நாங்களே செயற்பட்டுவருகின்றோம் என்றார்.