Breaking News

மாற்றுத் தலைமையை உருவாக்கும் கூட்டம் அல்ல – விக்கி மறுப்பு

யாழ்ப்பாணத்தில், நடத்தப்பட்ட இரகசியக் கூட்டத்தில் உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவை ஒரு அரசியற் கட்சியோ, மாற்றுத் தலைமையை ஏற்படுத்துதற்கான ஆரம்பக் கூட்டமோ அல்ல என்று,  வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில், நேற்றுமுன்தினம் மாலை நடத்தப்பட்ட இரகசியக் கூட்டத்தில், தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டது தொடர்பாக ஊடகங்களில் பரவலாக சர்ச்சைக்குரிய கருத்துக்கள் வெளியான நிலையில், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிப்பது போன்று நேற்று அறிக்கை ஒன்றை வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது-

கேள்வி – மிகவும் அந்தரங்கமாக தமிழ் மக்கள் பேரவை கூட்டத்திற்குப் போய் விட்டு வெளியில் வந்து “நான் ஊமை” என்று கூறியிருக்கின்றீர்கள். நீங்கள் வேறொரு கட்சியைத் தொடக்கி வைத்துள்ளீர்கள் என்று கூறப்படுகிறது. அது உண்மை தானா? தேர்தலில் தோற்ற பலரும் கூட்டத்திற்கு வந்தார்களாமே?

பதில் – தமிழ் மக்கள் பேரவை ஒரு மக்கள் இயக்கம். பலவிதமான மக்கள் குழுக்களும், ஒன்றியங்களும், கட்சிகளும் சேர்ந்து நல்லை ஆதீனம் போன்ற மதாச்சாரியார்கள் உள்ளடங்கலாகத் தொடங்கியுள்ள ஒரு மக்கள் இயக்கம் அது.

இதற்கு தலைமை வகிக்க ஏற்பாட்டாளர்கள் குழு என்னை அழைத்தார்கள். உண்மையில் இணைத்தலைவராகத் தான் என்னை அழைத்தார்கள். வைத்திய கலாநிதி லக்ஷ்மனும் மட்டக்களப்பு மக்கள் ஒன்றியத் செயலாளர் திரு.வசந்தராஜா அவர்களும் என்னுடன் இணைத்தலைவர்களாக இருக்கிறார்கள். இது ஒரு அரசியல் கட்சி அல்ல. அரசியலில் குதிக்கும் எண்ணம் கூட அதற்கு இருக்கமாட்டாது

இதுவரை காலமும் நாங்கள் அரசியல் தீர்வு பற்றி பேசி வருகின்றோம். எப்பேர்ப்பட்ட தீர்வை தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றார்கள் என்பதை இதுவரையில் எவருமே வெளிப்படுத்தவில்லை.

அடுத்து சமூகப் பிரச்சனைகள் பலவுண்டு. அவை பற்றி நாங்கள் விஞ்ஞான ரீதியாக முறையாக ஆராய முற்படவில்லை. எனவே தான் இப்பேர்ப்பட்ட மக்கள் குழுவொன்று பல நல்ல காரியங்களில் இறங்குகின்றது என்று அறிந்த போது நான் அதில் பங்குபற்ற இசைந்தேன்.

அரசியல் கட்சிகளையும் அழைத்ததாகக் கூறினார்கள். கௌரவ சித்தார்த்தன் வருவதாகக் கூறியிருந்தார்கள். திரு.கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் வந்திருந்தார். அரசியல் ரீதியான விடயங்களை ஆராய இருப்பதால் அரசியல்வாதிகள் அதில் பங்கேற்பதில் என்ன பிழையிருக்கின்றது?

எமது மாகாணசபை எதிர்கட்சித் தலைவர் திரு.தவராசா அவர்களுடன் மிக சுமூகமான உறவையே நாம் பேணிவருகின்றோம். அதற்காக நாங்கள் சேர்ந்துவிட்டோம் என்று அர்த்தமில்லை.

திரு.கஜேந்திரகுமார் முன்னர் திரு.சம்பந்தன் அவர்களின் வலது கையாகச் செயற்பட்டவர். அவருடன் ஒரு கூட்டத்தில் நான் காணப்பட்டால் நான் புதிய கட்சியொன்றை உருவாக்க முனைந்துள்ளேன் என்று அர்த்தமா?

நான் ஊமை” என்று கூறியதன் காரணம் ஏற்பாட்டாளர்கள் அறிக்கை ஒன்றினை தாங்களே கொடுப்பதாக கூறியமையினால். அவர்கள் அறிக்கையைத் தரும் போது நான் இன்னுமொரு அறிக்கையை தருவது முறையன்று. எனவே தான் அவ்வாறு கூறினேன்.

இந்தப் பேரவை அரசியற் கட்சியல்ல. மாற்றுத் தலைமையினை ஏற்படுத்துதற்கான ஆரம்பக் கூட்டமும் அல்ல. இது அரசியல் தீர்வினை முன்வைப்பதற்கும் போருக்குப் பிந்திய எமது தமிழ் சமூகத்தை கட்டியெழுப்புவதற்கும் தொடர்பிலான சிவில் சமூகப் பிரதிநிதிகளுடனான ஓர் உறுதியான செயற்றிட்ட முன்னெடுப்பேயாகும்.

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்,
முதலமைச்சர்,
வடமாகாணம்.