குடும்பத்துடன் கொழும்பு வந்த நிஷா பிஸ்வால் – அரசியல் வட்டாரங்களில் குழப்பமான தகவல்கள்
அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால், இலங்கைக்கு நேற்று அதிகாலை திடீர் பயணத்தை மேற்கொண்டுள்ள நிலையில், அவரது இந்தப் பயணம் தொடர்பான குழப்பமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் சிறப்பு செய்தி ஒன்றுடன் நிஷா பிஸ்வால், கொழும்பு வந்திருப்பதாகவும், அவர் இலங்கை ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் ஆகியோரைச் சந்திக்கவுள்ளதாகவும், நேற்று தகவல்கள் வெளியாகியிருந்தன.
எனினும், அவர் தனிப்பட்ட பயணமாக- நத்தார் விடுமுறையைக் கழிக்கவே குடும்பத்துடன் கொழும்பு வந்திருப்பதாக, இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கருத்து வெளியிட்ட இலங்கை வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர், மகேஷினி கொலன்ன, “ஒரு சுற்றுலாப் பயணியாக- முற்றிலும் தனிப்பட்ட பயணமாகவே நிஷா பிஸ்வால் கொழும்பு வந்திருக்கிறார். இலங்கை ஜனாதிபதி உள்ளிட்ட எவரையும் அவர் சந்திக்கமாட்டார்.
எல்லா அதிகாரபூர்வ பயணங்கள் தொடர்பாகவும் வெளிவிவகார அமைச்சு தகவல் வெளியிடும்.” என்று தெரிவித்துள்ளார்.
மார்கழி விடுமுறையைக் கழிக்க நிஷா பிஸ்வால் இலங்கையைத் தெரிவு செய்திருப்பதாகவும், அதிகாரபூர்வ பேச்சுக்களில் அவர் ஈடுபட வாய்ப்பில்லை என்றும், சில மரியாதை நிமித்தமான சந்திப்புகள் எதிர்பார்க்கப்படுவதாகவும், இலங்கை வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதேவேளை, உயர்மட்ட அரசியல் தலைவர்களுடன் நிஷா பிஸ்வால் மரியாதை நிமித்தமான சந்திப்புகளை மேற்கொள்வார் என்று கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரக வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், நிஷா பிஸ்வால் இலங்கை வந்திருப்பது இது நான்காவது தடவையாகும். கடந்த ஜனவரி, மே, ஓகஸ்ட் மாதங்களில் அவர் ஏற்கனவே இலங்கை வந்திருந்தார்.
அதேவேளை, அமெரிக்க உயர் மட்ட அதிகாரிகள் அடுத்தடுத்து இலங்கை வருவது குறித்து, கொழும்பு அரசியலில் கேள்விகள் எழுப்பப்படும் நிலையில், நிஷா பிஸ்வாலின் இந்தப் பயணம் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.