Breaking News

கூட்டமைப்பை பிளவுபடுத்துமா வடக்கு முதல்வரின் புதிய அமைப்பு?

தமிழ் மக்கள் பேரவை எனும் பெயரில் வட மாகாண முதல்வர் சீ.வீ.விக்னேஸ்வரன் ஆரம்பித்துள்ள புதிய அமைப்பானது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஏற்பட்டுள்ள முதலாவது பிளவு என இந்திய நாளிதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அரசியல் ஆய்வாளர்களை மேற்கோள் காட்டி குறித்த நாளிதழ் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

நேற்று முன்தினம் சனிக்கிழமை இந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்ட நிலையில், அன்றைய தினம் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் பங்கேற்கவில்லை. எனினும், கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ஈ.பி.ஆர்.எல்.எப்.பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் இதில் பங்கேற்றிருந்தார். அன்றைய தினம் மூடிய அறைக்குள் இரகசிய கலந்துரையாடலொன்றும் இடம்பெற்றது.

இதனையடுத்து கருத்துத் தெரிவித்த வடக்கு முதல்வர், ‘இது அரசியல் சார்ந்த அமைப்பல்ல. மாற்றுத் தலைமையினை ஏற்படுத்துதற்கான ஆரம்பக் கூட்டமும் அல்ல. இது அரசியல் தீர்வினை முன்வைப்பதற்கும் போருக்குப் பிந்திய எமது தமிழ் சமூகத்தை கட்டியெழுப்புவதற்கும் சிவில் சமூகப் பிரதிநிதிகளுடனான ஓர் உறுதியான செயற்றிட்ட முன்னெடுப்பே ஆகும் என குறிப்பிட்டார்.

ஆனால், அரசியல் கட்சிகள் மீது நம்பிக்கை அற்றுப்போயுள்ள காரணத்தாலேயே இந்த அமைப்பை உருவாக்கியதாக சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

ஏற்கனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் விக்னேஸ்வரனுக்கும் இடையில் கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த புதிய அமைப்பை உருவாக்கியுள்ளமையானது மேலும் பல முரண்பாடுகளை தோற்றுவிக்குமென அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.