இலங்கை ஊடாக கடத்தலில் ஈடுபட்டவருடன் தொடர்பு - தமிழகத்தில் பொலிஸ் அதிகாரி பணிநீக்கம்
தமிழகத்தில் கஞ்சா கடத்தலில் பிடிபட்ட நபருடன் தொடர்பு வைத்திருந்ததாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து மண்டபம் பொலிஸ் இன்ஸ்பெக்டர் தனபாலனை தாற்காலிக பணி நீக்கம் செய்து இராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி.ஆனந்தகுமார் சோமானி ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டார்.
இராமநாதபுரம் அருகே பட்டினம்காத்தான் சோதனைச் சாவடியில் கேணிக்கரை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் கணேசலிங்க பாண்டியன் தலைமையிலான பொலிஸார் கடந்த 11ம் திகதி வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது இராமேசுவரத்திலிருந்து மதுரைக்கு சென்ற காரில் 5 கிலோ கஞ்சாவைக் கடத்தியதாக இராமேசுவரம் கிழக்குத் தெருவைச் சேர்ந்த செல்வக்குமாரை (32)க் கைது செய்தனர். அவரிடமிருந்து கஞ்சா, 7 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் கார் போன்றன பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையின்போது, மண்டபம் காவல் நிலைய ஆய்வாளரான தனபாலனுக்கும் கஞ்சா கடத்தும் தொழிலில் தொடர்பு இருப்பதாக செல்வக்குமார் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து தனபாலனை பணியிடை நீக்கம் செய்யுமாறு இராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி.ஆனந்தகுமார் சோமானிக்கு எஸ்.பி.மணிவண்ணன் பரிந்துரை செய்திருந்தார். அதன் அடிப்படையில் தனபாலனை தாற்காலிக பணி நீக்கம் செய்து டி.ஐ.ஜி. ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டார் என, தமிழக ஊடகமான தினமணி கூறியுள்ளது.
கஞ்சா கடத்தலில் தொடர்புடையதாக செல்வக்குமார் தெரிவித்த மேலும் சிலரிடமும் பொலிஸார் இரகசிய விசாரணை நடத்தி வருவதாகத் தெரிகிறது.
இதேவேளை கடந்த பல ஆண்டுகளாக கடத்தல் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ள சந்தேகநபராக செல்வக்குமார், தற்போது வரை இலங்கை வழியாக வெளிநாடுகளுக்கு கஞ்சா போன்ற போதைப் பொருட்களை சர்வ சாதாரணமாக கடத்தி வந்துள்ளார் என தெரியவந்துள்ளது.