Breaking News

வரணியில் சித்திரவதை முகாம் - அம்பலப்படுத்தினார் சுரேஸ் (படங்கள் இணைப்பு)

யாழ்ப்பாணம் – வரணி பகுதியில் இராணுவத்தின் 526ஆவது படையணி நிலைகொண்டிருந்த வரணி படைமுகாமில் சித்திரவதைகள் இடம்பெற்றுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தனது முகப்புத்தகத்திலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்த தனியார் காணிகளை விடுவித்தல் எனும் செயற்பாட்டில் தனியாருக்குச் சொந்தமான காணியில் அமைந்திருந்த வரணி படைமுகாமை, இராணுவத்தினர் கடந்த 2014 ஆம் ஆண்டு மே மாத நடுப்பகுதியில் விட்டு வெளியேறியதாக சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தற்பொழுது குறித்த முகாம் A-9 வீதிக்கு அருகில் ஆசைப்பிள்ளை ஏற்றத்தில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த முகாம் வரணியில் அமைக்கப்பட்டிருந்த போது விசாரணைக்கு என அழைத்து வரப்பட்ட மக்கள் குறித்த முகாமில் வைத்து பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளானதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் இராணுவத்தினரின் சித்திரவதைகளை வெளிக்கொணரும் வகையில் குறித்த முகாம் விடுவிக்கப்பட்டபொழுது அங்கிருந்த சித்திரவதைக் கூடம் ஒன்றைக் காணமுடிந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.