பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கி புலிகளின் ஆக்கிரமிப்பை பலப்படுத்துவதற்கு முயற்சி
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி நாட்டில் மீண்டும் புலிகளின் ஆக்கிரமிப்பை பலப்படுத்தவே அரசாங்கம் முயற்சிக்கின்றது. சர்வதேச பிரதிநிதிகளின் தொடர் இலங்கை விஜயத்தின் காரணமும் இதுவென மஹிந்த ஆதரவு அணியினர் தெரிவித்தனர்.
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி புலிகளின் அனைத்து குற்றச்சாட்டுகளையும் நியாயப்படுத்த முயற்சிப்பதாகவும் குற்றம் சுமத்தினர். மஹிந்த ஆதரவு அணியினர் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போதே அவ்வணியின் உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
இலங்கையில் புலிகளின் பயங்கரவாத செயற்பாடுகள் அழிக்கப்பட்டுள்ளன. எமது இராணுவம் இந்த நாட்டை பாதுகாத்து மக்களிடம் ஒப்படைத்துள்ளது. ஆனால் இன்று நாடு பாதுகாப்பான நிலையில் உள்ளதென கூற முடியாது. இன்று நாட்டில் தேசிய பாதுகாப்பு பலமான நிலையில் இல்லை. மிகவும் மோசமான நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் கையாளப்படுகின்றன. கடந்த காலத்தில் இலங்கையில் பாதுகாப்பை பலப்படுத்தி வடக்கு, கிழக்கை பாதுகாப்பு கட்டமைப்பின் கீழ் வைத்திருந்தோம்.
அதே நிலையில் பொதுமக்களையும் பாதுகாக்க முடிந்தது. அதேபோல் விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் இலங்கையில் முடிவுக்கு கொண்டுவரப்பட்டவுடன் நாடு காப்பாற்றப்பட்டுவிட்டது என கூற முடியாது. அவர்களின் அரசியல் மற்றும் சர்வதேச செயற்பாடுகள் மிகவும் பலமான நிலையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
புலம்பெயர் அமைப்புகளின் செயற்பாடுகள் பலமானதாக உள்ள நிலையில் நாம் அவர்களை அடையாளம் கண்டு அந்த அமைப்புகளை இலங்கையில் செயற்பட தடை விதித்திருந்தோம். ஆனால் இன்று புலிகளின் புலம்பெயர் அமைப்புகள் அனைத்தின் தடைகளையும் நீக்கி இலங்கையில் அவர்களின் செயற்பாடுகளை பலப்படுதியுள்ளனர். அதேபோல் தடுப்பில் உள்ள புலிகளை விடுவிக்கும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. நாம் யாரை அச்சுறுத்தலாக கருதி அவர்களின் குற்றங்களை ஆதாரபூர்வமாக நிரூபித்து சிறையில் போட்டோமோ அவர்களை விடுவித்து நாட்டில் மீண்டும் குழப்பங்களை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சிக்கின்றது.
மேலும் பயங்கரவாத தடைச்சட்டம் இருப்பதன் காரணத்தினால் தான் புலிகளின் செயற்பாடுகள் தொடர்பில் பலமான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியுமாக உள்ளன. ஆனால் அதையும் நீக்கி முழுமையாக புலிகளின் ஆக்கிரமிப்பில் நாட்டை கூறுபோடும் சூழலை இந்த கூட்டு அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. கடந்த ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் இலங்கைக்கு விஜயம் செய்த வெளிநாட்டு இராஜதந்திரிகளின் பட்டியலில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பினர்களும் அமெரிக்க இராஜதந்திரிகளுமே அதிகமாக உள்ளனர். .
அவர்களின் தொடர் விஜயம் நாட்டை புலிகளுக்கு ஒப்படைக்கும் ஒரு நோக்கமாக உள்ளது. இவர்களின் அழுத்தம் காரணமாக இலங்கையின் சட்டங்களில் கூட மாற்றங்கள் ஏற்படப்போகின்றன. அதேபோல் எதிர்வரும் ஜெனிவா கூட்டத் தொடரின்போதும் இலங்கையை மேலும் நெருக்கடிக்குள் உள்ளாக்கி நாட்டில் நிரந்தர பிரிவினையை மேற்கொள்ளவே இவர்கள் முயற்சிக்கின்றனர் என்றார்.