சம்பந்தன் மௌனம் கலைக்க வேண்டும் - சிவசக்தி ஆனந்தன்
சம்பந்தன் ஐயா தனது மௌனத்தைக் கலைக்க வேண்டும். நிஷ்டையிலிருந்து சிவனின் நிஷ்டையைக் கலைக்க, தேவர்களும் முனிவர்களும் ஆவல்பட்டார்களோ. அதே போன்றதொரு நிலையே இன்றைய அரசியல் போக்கில் காணப்படுகின்றது என்று வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.
வவுனியா அரசாங்க அதிபர் நியமனம் தொடர்பில் வன்னிமாவட்ட கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் அதிருப்தி சம்பந்தமாக கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும்போதே சிவசக்தி ஆனந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில் புதிய அரசாங்கம் ஏமாற்றிக் கொண்டிருக்கின்றது என்பது அறியப்பட்ட விடயம் சம்பந்தன் ஐயா தொடர்ந்தும் மௌனம் காப்பதைத் தவிர்த்து பொறுமை நிலையிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும். அவர் தனது நிஷ்டையைக் கலைப்பாராக இருந்தால் எல்லாமே சரியாகி விடும். அரசாங்கமும் எச்சரிக்கைப்பட்டுக் கொள்ளும்.
புதிய அரசாங்கம் தமிழர்களுக்கு ஏதாவது செய்யும் என்று நம்பி வாக்களித்த மக்கள் இன்று ஏமாற்றமடைந்து காணப்படுகின்றார்கள். இவ்வாறானதொரு சூழ்நிலையில் நாங்கள் தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டும்.
ஜனநாயக ரீதியான போராட்டத்தை நடத்த வேண்டுமா? இல்லை ராஜதந்திர வட்டாரங்களை நாட வேண்டுமா என்பதை தீர்மானிக்க வேண்டும். ஏனென்றால் கொழும்பிலுள்ள ராஜதந்திர வட்டாரங்கள் கூறின. ஆட்சி மாற்றமொன்று இலங்கையில் கொண்டுவரப்பட வேண்டுமென்று. இக்கருத்துக் கொண்டவர்களாக அமெரிக்கா, இந்தியா பக்கபலமாக நின்றார்கள். ஜனாதிபதித் தேர்தலின் போது சுரேஷ்பிரேமச்சந்திரன் வலியுறுத்தினார். நாங்கள் ஒரு இரகசிய உடன்படிக்கையை செய்வோம். அந்த உடன்படிக்கையை இரகசியமாக வைத்திருப்போம். எத்தகைய தீர்வை தருவீர்கள் அன்றாட பிரச்சினைகளை எப்படித் தீர்ப்பீர்கள் என ஒரு உடன்படிக்கையைச் செய்வோமெனக் கூறியிருந்தார். அந்த உடன் படிக்கையை அரசாங்கத்தை மாற்ற எண்ணம் கொண்டிருக்கும் இந்தியா அமெரிக்காவின் முன்னிலையில் செய்வோம். ஆட்சிக்குவந்த பின் அவர்கள் செய்யவில்லையாயின் முன்னின்ற நாடுகளைக் கேட்போமென சுரேஷ் பிரேமச்சந்திரன் கடுமையாக வலியுறுத்தினார்.
ஆனால் அது ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அவ்வாறு செய்தால் தேர்தல் முடிவுகள் வேறாக வந்துவிடுமென்ற காரணத்தினால் அது நிராகரிக்கப்பட்டது. வெள்ளைக் கடுதாசியில் கையெழுத்து இட்டது போல் ஆட்சி மாற்றத்துக்கு ஆதரவு அளித்தோம். ஆனால் நாம் எதிர் பார்த்ததற்கு மாறாகவே எல்லாம் நடக்கிறது.
கூட்டமைப்பு ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தை விரைவில் கூட்டி எதிர்காலத்தில் எவ்வாறான போக்கை கடைப்பிடிக்க வேண்டுமென்ற முடிவை எடுக்க வேண்டிய தேவையிருக்கிறது. கட்சி மட்டத்தில் ஆக்கபூர்வமாகப் பேசி தீர்மானம் எடுக்க வேண்டுமென்ற முடிவுடன் காத்துக் கொண்டிருக்கிறோம். தலைவர் சம்பந்தன் ஐயாவைப் பொறுத்தவரை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு கடுமையான அழுத்தத்தைக் கொடுக்க வேண்டுமென்று எதிர்பார்க்கின்றோம்.
இன்னும் பொறுமை காக்கவேண்டும் அமைதி பேணவேண்டுமென்று இருப்போமானால் எல்லாவற்றையுமே இழந்து போய்விடுவோம். எவ்வளவு காலத்துக்குத்தான் பொறுமையைக் காக்கமுடியும். அரசியல் தீர்வொன்று கொண்டுவர முயற்சி எடுக்கப்படுகின்றபோது பொறுமையாக இருப்பது என்பது வேறு. எல்லாவற்றுக்கும் பொறுமை காப்பது என்பது வேறு. பிரதமர் நினைத்தால் வவுனியா அரசாங்க அதிபரை ஒரு தொலைபேசி அழைப்பில் மாற்றமுடியும். ஆனால் அவர் செய்யப்போவதில்லை.
ஐயா ! குழப்பாதீர்கள் பொறுமையாக இருங்கள், எல்லாம் நடக்குமென்று எமது உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறார். ஆனால் மக்கள் மத்தியில் நாம் போகமுடியாதவர்களாகவே காணப்படுகின்றோம். பிரசித்திபெற்ற கூட்டமைப்பின் தலைவரை மஹிந்த ராஜபக் ஷ வின் அரசாங்கம் எவ்வாறு ஏமாற்றியதோ அதேபோல் இந்த அரசாங்கமும் ஏமாற்றிக் கொண்டு இருக்கின்றது.
சம்பந்தர் ஐயாவை ஏமாற்றினால் கூட்டமைப்பை ஏமாற்றுவதற்குச்சரி. கூட்டமைப்பை ஏமாற்றினால் தமிழ் மக்களை ஏமாற்றுவது போன்று தான் அர்த்தம் கொள்ளப்படும். ஐயா காலத்தைக் கடத்தாமல் விரைவில் ஒரு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும். அத்தகையதொரு காலக் கட்டத்துக்கே நாம் வந்தருக்கின்றோமென்பதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த அரசாங்கம் எதையும் செய்யத் தயாராகவில்லையென்றால், வடகிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், சிவில் அமைப்புக்கள், புத்திஜீவிகள் அனைவரையும் அழைத்து ஒருமுடிவை எடுப்போம்.
ஜனாதிபதி தேர்தல் முடிந்தவுடன் நான், எம்.ஏ.சுமந்திரன், க.சித்தார்த்தன், மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் ஜனாதிபதியையும் பிரதமரையும் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தோம்.
வட, கிழக்கு மாகாண ஆளுநர்கள், வடக்கு பிரதம செயலாளர் ஆகியோர் உடனடியாக மாற்றப்படவேண்டும். அரசியல் கைதிகள் கால தாமதமின்றி விடுவிக்கப்பட வேண்டும். திரு கோணமலை, வவுனியா, மன்னார் ஆகிய மூன்று மாவட்டங்களுடைய அரச அதிபர்கள் மாற்றப்பட்டு தமிழர்கள் அரசாங்க அதிபர்களாக நியமிக்கப்பட வேண்டும். கடந்த அரசாங்க காலத்தில் அமைச்சர்களாக இருந்து ஊழல் மோசடிகள் புரிந்தவர்க்கு இந்த அரசாங்கத்தில் அமைச்சர் பதவி வழங்கக்கூடாது, என்ற பல்வேறு நிபந்தனைகளுடன் கூடிய கோரிக்கைகளை அவர்களிடம் முன்வைத்தோம்.
அரசாங்க அதிபர்களாக யார் நியமிக்கப்பட வேண்டுமென்ற பெயர்களை எமக்குத் தாருங்கள், ஆளுநர் விடயங்களை கவனத்தில் எடுத்துக் கொள்கின்றோமென வாக்குறுதியளித்தார்கள், மூன்று மாவட்டத்துக்கும் அரச அதிபர்களாக யார் யார் நியமிக்கப்பட வேண்டும் என்ற விபரங்களை உடனே கையளித்தோம்.
வாக்குவாதம்
இதன் பிறகு அளித்த வாக்குறுதிகளை அரசு நிறைவேற்ற இழுத்தடிப்பு செய்த போது கூட்டமைப்பிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தலைவர் சம்பந்தனுக்கு கொடுத்த அழுத்தம் தாங்கமுடியாமல் அவர் எங்களை அழைத்துக் கொண்டு போய் பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவுடன் கடுமையாக வாக்குவாதப்பட்டார்.
எனது பாராளுமன்ற உறுப்பினர்கள் என்னுடன் கடுமையாக சண்டையிடுகிறார்கள் நீங்கள் எதையும் செய்வதாகவில்லையென பிரதமரின் முகத்துக்கு நேராகவே கடுமை கலந்த தொனியில் சம்பந்தன் வாதாடினார். தாங்கள் உடன் நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் மீண்டும் வாக்குறுதி தந்தார். இப்பொழுது ஆட்சிமாறி 10 மாதங்கள் கடந்து விட்டது. எதுவுமே நடைபெறவில்லை.
கடந்த சனிக்கிழமை (21.11.2015) வன்னிப்பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவை, சுமந்திரன், செல்வம், சித்தார்த்தன் ஆகியோர் பாராளுமன்ற வளாகத்தில் நேரே பிரதமரிடம் சென்றோம். தமிழ் பேசும் நபர்களை மேற்படி மூன்று மாவட்டத்துக்கும் நியமிப்பதாக வாக்குறுதி அளித்தீர்கள். வவுனியா அரச அதிபர் மாறப்போகிறார் நீங்கள் மீண்டும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவரையே நியமிக்கப்போகிறீர்கள். தந்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லையென பிரதமரிடம் கூறினோம்.
ஏமாற்றிவிட்டார்கள்
பிரதமர் பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் அவர்களை தனது காரியாலயத்துக்கு உடனே அழைத்தார். நாங்கள் அவருடன் கதைத்தோம். பொது நிர்வாக அமைச்சர் எம்மிடம் கூறினார் புஸ்பகுமார பதவியேற்றுவிட்டார். எதிர்வரும் திங்கட் கிழமை (23.11.2015) அவரை மாற்றிவிட்டு தமிழர் ஒருவரை நியமிக்கிறோமென பொது நிர்வாக அமைச்சர் வாக்குறுதி அளித்தார். ஆனால் நடந்தது என்னவென்றால் செவ்வாய்க்கிழமையே புஸ்பகுமார தனது கடமையை வவுனியாவில் பொறுப்பேற்கிறார். பிரதமரும் பொதுநிர்வாக அமைச்சரும் எங்களை இந்த விடயத்தில் ஏமாற்றி விட்டார்கள். இது எங்கள் காதில் பூவைத்தது போல் ஆகிவிட்டது.
இவ்வாறு ஏன் ?சிங்கள அரசாங்க அதிபர்களை நியமிக்க அரசாங்கம் ஒற்றைக் காலில் நிற்கிறதென்றால், முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் காலத்தில் குடியேற்றப்பட்ட சிங்களக் குடியேற்றங்கள் முழுமையடையவில்லை. அதை மீண்டும் நிறைவேற்றவே சிங்கள அரச அதிபர்களை வவுனியா, மன்னார், திருகோணமலை போன்ற மாவட்டங்களில் நியமித்து வருகிறார்கள்.
வவுனியா மாவட்டத்தில் 2000 மேற்பட்ட குடும்பங்கள் கடந்த காலங்களில் குடியேற்றப்பட்டுள்ளன. வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபைக்கு உட்பட்ட, கொக்கட்டான் கிராமம், நாமல்புரம், ஹலாபோவஸ்தவேவ என மூன்று நான்குபிரிவுகளாக பிரித்து 3000 குடும்பங்களுக்கு மேல் அம்பாந்தோட்டை, காலி ஆகிய சிங்களப் பிரதேசங்களிலிருந்து கொண்டு வந்து மேற்கூறப்பட்ட கிராமங்களில் குடியேற்றுகிறார்கள்.
இந்த சிங்களக் குடியேற்றங்களுக்கே மாவட்டத்துக்கு வாற முழு நிதிகளும் பயன்படுத்தப்படுகிறது. மேற்படி நிதிகளையே, மின்சாரம், பாதையமைப்பு, குடிநீர்வசதி, பாடசாலை ஆகிய உட்கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்கப்படுகிறது. தமிழர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். இந்த திட்டங்களுக்கே நியமிக்கப்படும் சிங்கள அரசாங்க அதிபர்களும் உதவிபுரிகிறார்கள். உதாரணமாக சிங்கள குடியேற்றப்பகுதிக்கு யானைவேலி நிர்மாணிக்க 25, மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்க்குடும்பங்கள் யானையால் அடிபட்டு சாகிறார்கள்.
இதைச் செய்பவர்கள் யாரென்று பார்பீர்களானால் இராணுவம், புத்தபிக்குமார், சிங்கள அரச அலுவலர்களே முன்னின்று செய்துவருகிறார்கள். மறுபுறம் வனபரிபாலன திணைக்களம் என்ன செய்கின்றதென்றால் 40 வருடங்களுக்கு மேல் குடியிருந்து வரும் தமிழர் பகுதிகளுக்குச் சென்று எல்லைக் கல்லை திட்டமிட்ட முறையில் நடுகிறார்கள். நீங்கள் குடியிருக்கும் இடம் வனபரிபாலனத்துக்குள் வருகிறது. உடனடியாக எழும்பவேண்டுமென கட்டளையிடுவதுடன் பொலிஸ் இராணுவத்தின் துணையோடு சென்று அந்த அப்பாவித் தமிழ் மக்களை விரட்டியடித்து வருகின்றார்கள். இதையும் முன்னின்று செய்பவர்கள் சிங்கள அதிகாரிகளும் அதற்குத்துணைபோகும் அரசியல் வாதிகளும்.
இது பற்றி நாங்கள் அரசாங்க அதிபருக்கு முறையிட்டால் அவர் கூறுகின்றார் தனி நபர் ஒருவருக்கு அரை ஏக்கர் காணி மட்டுமே இருக்க முடியுமென அதற்கு மேல் வைத்திருக்க முடியாது என பயமுறுத்துகிறார்கள். இதற்குப் புறம்பாக தொல்பொருள் ஆராட்சித் திணைக்கள அதிகாரிகள் கொழும்பிலிருந்து வந்து இன்னும் பல தொல்லைகளை தமிழ் மக்களுக்கு மட்டுமே கொடுக்கின்றார்கள்.
100 வருட பழமை வாய்ந்த தமிழர் ஒருவருடைய 10 ஏக்கர் காணியை தொல்பொருள் ஆய்வு செய்ய வெண்டுமெனக் கூறி கையகப்படுத்த முயற்சிக்கின்றார்கள். இந்தக் காணிக்கு அருகில் இராணுவ முகாமொன்று இருப்பதே அதற்கு காரணம்.
மூன்று பெரிய கிணறுகள் இருக்கின்றன. இந்த மூன்று கிணறுகளிலும் இராணுவம் பயிர்செய்கிறார்கள். தொல்பொருள் திணைக்களம் எல்லைக் கல்லு நட்டு விட்டுச் செல்கிறார்கள். அரசாங்க அதிபர் கண்டுங் காணாமல் இருக்கின்றார்.
சிங்களக் குடியேற்றங்கள்
இது போல் மன்னாரில் உள்ள அரசாங்க அதிபர் வந்த காலம் தொட்டு முசலிப்பகுதியில் சிங்கள குடியேற்றமொன்று பெரியளவில் நடக்கிறது. இக்குடியேற்றத்துக்கு நேரடியாக நிதிபெற்று அபிவிருத்தி செய்து கொண்டிருக்கிறார். இந்த அரசாங்க அதிபர் சுயவிருப்பத்தின்பேரில் ஜனவரியில் இடமாறிச் செல்லப் போகிறார் இந்த இடத்துக்கும் பேரினவாத சமூகத்தைச் சேர்ந்த ஒருவன்தான் நியமிக்கப்படவிருப்பதாக அறிகிறோம்.
இது ஒரு புறமிருக்க மன்னார் வவுனியா மாவட்டங்களில் அண்மைக் காலத்தில் அனைத்து திணைக்களங்களிலும் எல்லாப் பதவி நிலை உத்தியோகத்தர்களும் சிங்கள சமூகத்தைச் சேர்ந்தவர்களே நியமிக்கப்படுகிறார்கள். நிரப்பப்படுகிறது. உ+ம் நெடுக்கேணி அலுவலகத்தில் 10 க்கும் மேற்பட்ட சிங்கள அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மஹிந்த ராஜபக் ஷவின் நிகழ்ச்சி நிரல் எவ்வாறு இருந்ததோ அதே நிகழ்ச்சி நிரல் இந்த அரசாங்கத்திலும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. ஜனாதிபதி தேர்தலின் போது சம்பந்தன் ஐயாவிடம் வலியுறுத்தினோம் நிபந்தனைகளை முன்வைத்து ஆதரவு நல்குவோமென்று. எவ்வித நிபந்தனையுமின்றி ஆதாரவு நல்கினோம்.
அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்திலாவது மீள் குடியேற்றம் பற்றி அரசியல் கைதிகள் விடுதலை பற்றி, காணிவிடுவிப்புப்பற்றி, சின்ன சின்ன அளவிலாவது குறிப்பிடும்படி வலியுறுத்துவோமென்று கூறினோம். அவ்வாறு குறிப்பிட்டால் சிங்கள மக்கள் வாக்களிக்காமல் விட்டு விடுவார்கள். த.தே. கூ அமைப்புக்கும் அதன் கோரிக்கைகளுக்கும் உடன்பட்டு ஜனாதிபதி போகின்றார் என சிங்கள மக்கள் நினைத்து வாக்களிக்காமல் விட்டு விடுவார்கள் என மறுத்துவிட்டார்.
ஏலவே 2010 ஆம் ஆண்டு தேர்தலில் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுடன் ஒரு ஒப்பந்தம் செய்ததன் காரணமாகவே அவர் தோற்க வேண்டிவந்தது. எவ்வித ஒப்பந்தமும் நாம் செய்யவேண்டியதில்லை. அவர் மீது ஒரு நம்பிக்கை வைத்து ஆதரவு நல்குவோம். ஜனாதிபதி எல்லாவித பிரச்சினைகளையும் தீர்ப்பார் என்று கூறினார். இன்று அவர் பதவிக்கு வந்து 10 மாதங்கள் ஆகிவிட்டது ஒரு துரும்பையும் எங்களால் நகர்த்த முடியவில்லை.
கடந்த ஆட்சிக்காலத்தில் விடுவிக்கப்படுமென்று உத்தரவாதம் அளிக்கப்பட்ட சம்பூர் மற்றும் வலிகாமம் பகுதிகள் விடுவிக்கப்பட்டிருக்கிறதே தவிர புதிதாக ஒன்றுமே நடக்கவில்லை. சர்வதேச விசாரணைகளை வலியுறுத்தினோம் இறுதியில் உள்ளக விசாரணைக்கு கொண்டு வந்து விட்டிருக்கிறது. மாற்றமுடியாது என்ற மஹிந்தவின் ஆட்சியை மாற்றக் காரணமாக இருந்தவர்கள் தமிழ் மக்கள் இன்று த.தே. கூட்டமைப்பினால் ஒரு சிறிய அரச உத்தியோகத்தரைக் கூட மாற்றமுடியவில்லை.
அரசாங்கம் கூட்டமைப்புக்கு தந்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இப்போது என்ன செய்கின்றாரென்றால் ரிஷாட்பதியுதீன் கூறுவதை வன்னியில் செய்ய முற்படுகிறாரே தவிர கூட்டமைப்பு கூறுவதை அவர் கேட்கவும் தயாரில்லை செய்யவும் விரும்புகின்றாரில்லை.
ஏற்கனவே ஒரு உடன்பாடு கண்டிருந்தோம் த.தே.கூட்டமைப்பு வெற்றி பெற்ற யாழ்பாணம், வன்னி, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களின் அபிவிருத்திக் குழுத்தலைவர்களாக த.தே. கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களே நியமிப்பது என்று உடன்பாடு காணப்பட்டது. வன்னிமாவட்டத்தின் அபிவிருத்திக்குழுத் தலைவராக ரிஷாட் பதியுதின் நியமிக்கப்பட்டிருக்கிறார். ஊழலே இல்லாது ஆக்குவோம். லஞ்சத்தை ஒழிப்போமென்று கர்ச்சிக்கின்ற இந்த அரசாங்கம் இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறது என்று யாருக்கும் புரியவில்லை.
ஆட்சிமாற்றத்துக்கு உதவிய கூட்டமைப்பின் நிலையென்ன? அதற்கு தலைமை தாங்கிவரும் சம்பந்தன் ஐயாவையும் உதாசீனம் செய்து கொண்டே தற்போதைய அரசு நடந்து கொள்கிறது என்பது தெளிவாகவே புரிகிறது. இவ்வாறானதொரு சூழ்நிலையில் கூட்டமைப்பு ஒரு முடிவுக்கு வரவேண்டுமென்ற நிலைப்பாட்டிலேயே நாம் கூடிப்பேசக் காத்திருக்கின்றோம்.