கிராம இராஜ்ய திட்டத்தை உடன் வாபஸ் பெற வேண்டும் - சபையில் கூட்டமைப்பு கோரிக்கை
அரசியலமைப்புச் சட்டத்தின் 13ஆவது திருத்தத்துக்குட்பட்டவாறு தற்போது மாகாண சபைகளில் இருந்து வருகின்ற குறைந்தளவு அதிகாரங்களையும் பறித்தெடுப்பதாகவே அரசாங்கத்தினால் முன்வைக்கப்படும் கிராம இராஜ்ய திட்டம் உள்ளது.
இதனை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். கிராம இராஜ்ய திட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடுமையாக எதிர்க்கிறது. எனவே அரசாங்கம் இதனை மீளப்பெற்றுக்கொள்ள வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று சபையில் தனது நிலைப்பாட்டை அறிவித்தது.
வடக்கு, -கிழக்கின் யுத்த இழப்புக்களையும் அழிவு களையும் எழுந்துள்ள தேவைகளையும் மதிப்பீடு செய்யாது வடக்கு-, கிழக்கின் அபிவிருத்திக்கென்றும் மீளக்கட்டியெழுப்புதலுக்கென்றும் 2016 இல் இடம் பெறும் உதவி வழங்குநர் மாநாட்டில் எந்த அடிப்படையில் பிரதமர் நிதியைக் கோரப்போகின்றார்? இது பாரிய பிரச்சினைக்குரிய விடயமாக இருக்கின்றது என்றும் அக்கட்சி சுட்டிக்காட்டியது.
இதேவேளை, வடக்கு-, கிழக்கில் இடம்பெறும் மீள் குடியேற்றம், மீளமைப்பு, அபிவிருத்தி ஆகிய அனைத்து விடயங்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் பாராளுமன்ற, மாகாணசபைப் பிரதிநிதிகளையும் இணைத்துக் கொண்டு பணிகளை முன்னெடுக்கும் பட்சத்தில் ஒத்துழைப்புக்களை நல்க தயாராகவே உள்ளோம். வரவு- – செலவுத்
திட்டத்தில் எமக்கு அதிருப்தி நிலையொன்று காணப்பட்டு வருகின்ற போதிலும் பிரச்சினைக்கான தீர்வுஎன்ற பயணத்திற்காக நாம் அரசாங்கத்தோடு முரண்படாது நிதி ஒதுக்கீட்டுச்சட்டத்துக்கு எதிர்ப்பினைக்காட்டாது செயற்பட்டு வருகிறோம் என்றும் கூறியது.
பாராளுமன்றத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற 2016 ஆம் நிதி ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டத்தின் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தகம், நிதி அமைச்சுக்கள் மீதான குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
2015 ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கென 294 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில் 2016ஆம் நிதியாண்டுக்கான வரவு-செலவுத்திட்டத்தில் பாதுகாப்புக்கென மேலதிகமாக 13 பில்லியன் ரூபாவை அதிகரித்து மொத்தமாக 307 பில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளது.
வல்லமை கொண்ட நாடுகளில் கூட பாதுகாப்புக்கான நிதியானது திட்டத்தின் மொத்த ஒதுக்கீட்டில் 4 முதல் 7 வீதமான தொகையினையே ஒதுக்கீடு செய்து வருகின்றது யுத்தம் ஒன்று இல்லாத நிலையில் இங்கு 14 விதமான நிதியை பாதுகாப்புக்கு ஒதுக்கியிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
அதேபோன்று வடக்கு-கிழக்கு மாகாணங்கள் யுத்தத்தில் பாதுகாக்கப்பட்ட மக்களைக் கொண்டிருக்கிறது. எனினும் அந்த மாகாணங்களின் அபிவிருத்திக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியானது மிக அற்பமானதாகவே காணப்படுகிறது.
குறிப்பிட்டுக் கூறுவோமானால், வடக்கின் அபிவிருத்தி கட்டமைப்புக்கென 16 பில்லியன் ரூபாவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் கொழும்பிற்கும் தெற்கிற்கும் என அதிகரித்த நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அதாவது, எம்மிடத்தில் வரியைப் பெறுகின்ற அரசாங்கம் அதனூடாக எமது பகுதிகளுக்கு செலவிடுவதை விடுத்து அந்த நிதியை தெற்கிற்காக ஒதுக்கி கொண்டுள்ளது.
எமது வரிப்பணத்தை தெற்கிற்காக செலவிடுவதற்கு தீர்மானித்துள்ள அரசாங்கம் வடக்கு-கிழக்கின் அபிவிருத்திக்கும் மீள் குடியேற்றம் உள்ளிட்ட மீள்கட்டியெழுப்புதல் நடவடிக்கைகளுக்கும் என 2016 இல் இடம்பெறவுள்ள உதவி வழங்குனர் மாநாட்டில் நிதி உதவியைக்கோரப் போவதாகக் கூறுகின்றது.
இது தொடர்பில் பிரதமர் இன்றும் கூறியுள்ளார்.
யுத்தத்தில் அழிவுக்குள்ளான இழப்புக்களை சந்தித்துள்ள வடக்கு-கிழக்கின் உண்மையான நிலைவரங்களை மதிப்பீடு செய்யாத நிலையில் எந்த அடிப்படையைக்கொண்டு உதவி வழங்குனர் மாநாட்டில் பிரதமர் உதவி கோரப்போகிறார் என்பது புரியவில்லை.
வடக்கு-கிழக்கில் அரசாங்கம் மேற்கொள்கின்ற எந்தவொரு வேலைத்திட்டங்களின் போதும் அதாவது மீள்குடியேற்றம், மீளமைப்பு, அபிவிருத்தி ஆகியவற்றை முன்னெடுக்கும் சந்தர்ப்பத்தில் எமது மக்கள் பிரதிநிதிகளும் இணைத்துக் கொள்ளப்படுதல் முக்கியமானதாகும். எம்மையும் இணைத்து எமது ஆலோசனைகளும் உள்வாங்கப்படல் வேண்டும்.
மேலும் தற்போது கிராம இராஜ்யம் என்றதொரு அறிவிப்பை மாகாண சபைகளுக்கு அதனை நடைமுறைப்படுவத்துவதற்கு முயற்சிக்கப்பட்டு வருகிறது. இது வெறும் அறிக்கை ரீதியிலான அறிவிப்பாகவே இருந்து வருகிறது. இது அரசியலமைப்புச்சட்டத்தின் 13 ஆவது திருத்தச் சட்டத்தினூடாக மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள குறைந்த பட்ச அதிகாரங்களையும் இல்லாதொழிக்கவே செயற்படுத்தப்பட்டிருக்கிறது. எனவே கிராம இராஜ்யம் செயற்றிட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகிய நாம் எதிர்க்கின்றோம்.
அரசாங்கத்தினால் எந்தவொரு திட்டம் முன்வைத்தாலும் அது நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மை பயப்பதாகவே இருந்தாலும் மக்களின் விருப்பத்தை அறியாத எந்தவொரு திட்டமும் வெற்றியளிக்கப்போவதில்லை. இதில் எமது மக்களுக்கு சந்தேகத்துக்கு இடமளிக்க முடியாது. இருக்கும் அதிகாரங்களை குறைக்கும் திட்டத்தை நாம் ஏற்கமாட்டோம்.
தமிழ் மக்கள் எதிர்நோக்கி வருகின்ற தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும். அதிகாரம் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும்.
அதன்பின்னர் வேண்டுமானால் இத்திட்டம் குறித்து பரிசீலிக்கலாம்.
இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் பேரவை தீர்மானித்திருக்கின்ற நிலையில் இதனை சர்வதேசமும் ஏற்றுக்கொண்டுள்ளது. அதன் அடிப்படையில் வரவு-செலவுத்திட்டம் தொடர்பில் எமக்கு அதிருப்தி காணப்பட்டு வருகின்ற போதிலும் கூட தேசிய பிரச்சினைக்கு தீர்வு அதிகார பகிர்வு ஆகியவற்றை இலக்காகக்கொண்டு செயற்பட வேண்டும் என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தீர்மானித்திருக்கின்றது என்றார்.