இராணுவ வசமுள்ள காணிகள் ஜனவரியில் மீளக்கையளிப்பு - சபையில் பிரதமர் தெரிவிப்பு
அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் வடக்கில் இராணுவம் கைப்பற்றியுள்ள பெரும்பாலான காணிகள் மக்களுக்கு மீளக்கையளிக்கப்படும். அதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளவுள்ளது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தெரிவித்தார்.
கடந்த ஆட்சியில் இரத்துச்செய்யப்பட்ட அமெரிக்காவின் மில்லேனியம் சவால் நிதியை மீண்டும் இலங்கைக்கு வழங்க அமெரிக்கா முன்வந்துள்ளது என்றும் அவர் கூறினார்.
பாராளுமன்றத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சு சர்வதேச வர்த்தக அமைச்சு மற்றும் நிதி அமைச்சு மீதான வரவு –செலவு திட்டத்தின் இரண்டாம் குழு நிலை விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.
பிரதமர் சபையில் தொடர்ந்து உரையாற்றுகையில், வடக்கு கிழக்கு மக்கள் வாழ்ந்த காணிகளை மீண்டும் அம் மக்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட வடபகுதி மக்களின் காணிகள் பெரும்பாலானவை அடுத்த வருடம் ஜனவரியில் மீளக்கையளிக்கப்படும்.
இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் அமைச்சர் சுவாமிநாதனுக்கிடையில் பேச்சுவார்த்தைகள் நடாத்தப்பட்டு வருகின்றன. ஜனவரியில் காணிகள் மீளக்கையளிக்கப்படும் அதேவேளை, வடக்கு கிழக்கில் தொடர்புபட்ட பிரதேச செயலாளர் பிரிவுகள் அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.
விசேடமாக வடக்கு, கிழக்கில் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டுள்ளது. அதனை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். அப்பிரதேசங்களில் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதற்கும் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்க பல கட்சிகள், சிவில் அமைப்புக்கள் உட்பட பலர் ஆதரவு வழங்கினர். எனவே, தற்போது இரண்டு பிரதான கட்சிகளாலும் இணைந்து ஏற்படுத்தப்பட்டுள்ள இணக்கப்பாட்டு தேசிய அரசின் வரவு செலவு திட்டம்
முன்வைக்கப்பட்டு குழு நிலை விவாதத்தின் போது எதிர்க்கட்சிகள் வரவு செலவு திட்டத்தில் உள்ளடக்குவதற்கான பல யோசனைகளையும் திருத்தங்களையும் முன் வைத்தனர்.
அதேவேளை, தேசிய அரசில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைச்சர்கள், எம்பிக்கள் என்னை சந்தித்தார்கள். இதன்போது அவர்கள் பல யோசனைகளை முன்வைத்தார்கள். திருத்தங்களை முன்வைத்தார்கள். அத்தோடு தனியார் வங்கிகளின் பிரதிநிதிகள் அரச வங்கிகளின் தலைவர்கள் மற்றும் வங்கி தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன.
இதன்போது பல யோசனைகள் முன்வைக்கப்பட்டன. அவை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்படும்.
அவ்வாறு பல்வேறு திருத்தங்கள் யோசனைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதனால் வருமானம் குறைந்து செலவு அதிகரிக்கும்.எனவே ஜனவரியில் பொருளாதார குழு கூடி இவ்விடயத்தை ஆராயும்.
அத்தோடு புதிய தேர்தல் முறை மாற்றம் தொடர்பிலும் சிந்திக்க வேண்டியுள்ளது. நாட்டில் தற்போது வாகன நெரிசல் அதிகரித்துள்ளது. கொழும்பிலிருந்து பாராளுமன்றம் வரத் தாமதமாகின்றது. அதனை கட்டுப்படுத்த முடியாமல் போனால் அனைவருக்கும் ஹெலிகொப்டர் வழங்க வேண்டிய நிலையே உருவாகும். அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஒரு சிலரோ அரசுக்கு எதிராக கருத்துக்களை வெளியிடுகின்றனர்.
இதேவேளை, அமெரிக்காவின் மில்லேனியம் சவால் நிதியத்தின் மூலம் எமது நாட்டுக்கு 800 மில்லியன் அமெரிக்க டொலர் உதவி கிடைக்கப்பெற்றது.
ஆனால் கடந்த மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் இவ்வுதவி கிடைக்காமல் போனது. தற்போது மீண்டும் எமது நாட்டில் ஜனநாயகம் நிலை நிறுத்தப்பட்டு நல்லாட்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து தேசிய அரசு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவ்விடயத்தில் அமெரிக்காவுக்கு தெளிவு ஏற்பட்டுள்ளது. எனவே எமக்கு மீண்டும் அமெரிக்காவின் நிதி கிடைத்துள்ளது. இதன்மூலம் உயர்கல்வி அபிவிருத்திக்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும். பல்கலைக்கழகங்களின் தரமுயர்த்த திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.