பயங்கரவாத தடைச் சட்டத்தைக்கொண்டு கைதிகளின் விடுதலையை கையாள்வது வேதனைக்குரியது
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதாக சர்வதேசத்திற்கு உறுதியளித்த அரசாங்கம் இன்று அந்தச் சட்டத்தை பயன்படுத்தி தமிழ் கைதிகளின் விடுதலை விடயத்தை கையாள்வது கைதிகளின் விடுதலையை எவ்வாறு துரிதப்படுத்தும் என நேற்று சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. எம்.ஏ.சுமந்திரன் கேள்வி எழுப்பினார்.
கடந்த ஆட்சி மீது தமிழ் மக்கள் நம்பிக்கை வைக்கவில்லை. ஆனால் இந்த அரசில் தமிழ் மக்கள் நம்பிக்கை வைத்திருக்கின்றனர். எனவே, உறுதிமொழிகள் நிறைவேறுவது காலதாமதமாகும் போது எமது மக்களின் நம்பிக்கை
மெல்ல மெல்ல சாகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வரவு செலவுத் திட்டத்தின் வெளிவிவகார அமைச்சு மற்றும் வெளிநாட்டு தொழில்வாய்ப்பு அமைச்சுக்களின் குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே சுமந்திரன் எம்.பி. இவ்வாறு தெரிவித்தார்.
சபையில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
அரசாங்கம் வலி வடக்கில் 1000 ஏக்கர் காணிகளை விடுவித்தது அதேபோன்று சம்பூரிலும் காணிகள் விடுவிக்கப்பட்டன. ஆனால் மேலும் பல ஏக்கர் காணிகள் இன்றும் விடுவிக்கப்படாதுள்ளன.
வடக்கில் பெரும்பாலான காணிகளை இன்னமும் இராணுவம் தன் வசப்படுத்தியுள்ளது. இன்றும் மக்கள் தமது சொந்தக் காணிகளில் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஜெனீவா தீர்மானத்தில் காணிகள் விடுவிப்பு தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு அரசு இணக்கமும் தெரிவித்துள்ளது.
அதேவேளை பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படும். அதற்கு பதிலாக சர்வதேசத் தரத்திலான சட்டம் ஏற்படுத்தப்படுமென்றும் அரசாங்கம் சர்வதேசத்திற்கு உறுதிமொழி வழங்கியது. அதேபோன்று மக்கள் பாதுகாப்பு சட்டம் மீளாய்வு செய்யப்படும் என்றும் அரசு உறுதி வழங்கியது. ஆனால் இன்று சர்வதேசத்திற்கு உறுதிமொழி வழங்கியது போன்று பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படவில்லை. அச் சட்டம் அமுலில் இருக்கும் போதே தமிழ் கைதிகளை விடுதலை செய்யும் நடவடிக்கைகளை அரசு முன்னெடுக்கிறது. இவ்வாறான நடவடிக்கைகளால் எவ்வாறு தமிழ் கைதிகளின் விடுதலையை துரிதப்படுத்த முடியும். என நான் இங்கு கேட்க விரும்புகிறேன்.
நீங்கள் எமக்கு வழங்கிய உறுதி மொழிகள் மற்றும் அதற்கான கால அட்டவணைக்கமைய இது முன்னெடுக்கப்படவில்லை. அனைத்தும் கால தாமதமாகின்றன. எமது மக்கள் கடந்த ஆட்சியின் மீது எதுவிதமான நம்பிக்கையும் வைத்திருக்கவில்லை. அவர்களுக்கு எதிர்பார்ப்பும் இருக்கவில்லை.
ஆனால் புதிய ஆட்சி வழங்கிய உறுதிமொழிகள் மீதும் அரசாங்கம் மீது தமிழ் மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். எனவே அரசு வழங்கிய உறுதிமொழிகள் நிறைவேறுவது காலதாமதமாகும் போது எமது மக்கள் மத்தியில் நம்பிக்கையில்லாமை தலைதூக்கியுள்ளது.
இதனை நீக்குவதற்கு அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அரசாங்கம் சரியான நேரத்தில் சரியான தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்பதே எமது வேண்டுகோளாகும். அரசை குறை கூறுவது எனது நோக்கமல்ல. பல்வேறு அரசியல் சவால்களுக்கு மத்தியிலேயே அரசு நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றது. அதனை ஏற்றுக்கொள்கின்றோம்.
ஆனால் நாம் கேட்பது எமது மக்களின் நம்பிக்கையை எதிர்பார்ப்பை உறுதிமொழிகளுக்கமைய சரியான நேரத்தில் நிறைவேற்ற வேண்டும் என்பதே ஆகும்.
அவ்வாறு அரசு பயணிக்கும் போது எமது முழுமையான ஆதரவை வழங்க நாம் தயாராகவே உள்ளோம்.
அரசு உறுதியளித்தது போன்று கைதிகளின் விடுதலை இடம்பெறவில்லை. மொத்தமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் 217 இவர்களில் 39 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 20 பேர் சிறு குற்றங்கள் செய்தவர்கள். அவர்கள் புனர்வாழ்வுக்கு தயார் என விருப்பம் தெரிவித்திருந்தனர்.
ஆனால் அவர்களில் இருவர் மட்டுமே விடுதலை செய்யப்பட்டனர். கடுமையான குற்றங்களை புரிந்து தண்டனை விதிக்கப்பட்டவர்கள் மட்டுமே விடுதலை செய்யப்படமாட்டார்கள் எனக் கூறப்பட்டது. ஆனால் இன்று சிறு சிறு குற்றங்கள் புரிந்து புனர்வாழ்வுக்கு இனங்கியவர்களும் விடுதலை செய்யப்படாமல் இருக்கின்றனர்.
பயங்கரவாத தடைச்சட்டம் அமுலில் இருக்கும் போதே கைதிகளின் விடுதலை தொடர்பாகவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் இது கைதிகளின் விடுதலையை துரிதப்படுத்தப் போவதில்லை. விடுதலை செய்யப்பட்டவர்கள் பிணையிலேயே விடுதலை செய்ய்ப்பட்டுள்ளனர்.
அதேவேளை சர்வதேச நீதிமன்றம் அமைப்பதற்கும் வெளிநாட்டு நீதிபதிகளை நியமிப்பதற்கும் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இவை எவ்வாறு நிறைவேற்றப்படும் என்பது தெரியவில்லை என்றும் சுமந்திரன் எம்.பி. தெரிவித்தார். இவ் உரையின் போது குறுக்கிட்ட நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக் ஷ.
பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட்ட பின்னரே விடுதலை புலி சந்தேக நபர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என நாம் சர்வதேசத்திற்கு உறுதிமொழி வழங்கவில்லை என்றார்.
இதன்போது சுமந்திரன் எம்.பி. குறிப்பிடுகையில்உங்கள் மீது நம்பிக்கை உள்ளது ஆனால் உண்மையை சரிவரச் செய்யுங்கள். அதனை சரியான நேரத்தில் செய்யுங்கள் என்றார்.சர்வதேசத்திற்கு நீங்கள் வழங்கிய உறுதிமொழிகளை அதற்குரிய கால அட்டவணைக்கமைய நிறைவேற்றுங்கள்.பரணகம ஆணைக்குழுவின் அறிக்கைகளும் வெளியிடப்பட வேண்டும் என்றும் சுமந்திரன் எம்.பி. தெரிவித்தார்.