Breaking News

தமிழர் அரசியல் சரித்திரத்தில் 2016 அதிமுக்கியம் வய்ந்தது - சம்பந்தன்

தமிழ் மக்களின் அரசியல் சரித்திரத்தில், எதிர்வரும் 2016ஆம் ஆண்டு அதிமுக்கியம் வாயந்ததாக, பல முக்கிய செயற்பாடுகள் இடம்பெறும் வருடமாக அமையுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற அகில இலங்கை இந்து மாமன்றத்தின் 60 ஆண்டுகள் பூர்த்தி விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த நாட்டில் நீண்டகாலமாக நடைபெறாத பல செயற்பாடுகள் நடைபெறக்கூடிய காலம் தற்போது உருவாகியுள்ளதாக குறிப்பிட்ட அவர், தமிழர்களின் பிரச்சினை இன்று முன்னொரு போதும் இல்லாத அளவு சர்வதேச மயப்படுத்தப்பட்டுள்ளதென குறிப்பிட்டார்.

குறிப்பாக இலங்கையில் நிரந்தரமான சமாதானம் ஏற்படுத்தப்பட வேண்டுமென ஐ.நா மனித உரிமைகள் அமைப்பு உட்பட பல நாடுகள் செயற்படுவதை சுட்டிக்காட்டியதோடு, தமிழர் பிரச்சினைகளின் உண்மை நிலை தற்போது உணரப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு பரிகாரம் வழங்கப்பட வேண்டுமெனவும், இவ்வாறான சம்பவங்கள் இனி ஒருபோதும் நடைபெறக்கூடாது என்பது தொடர்பிலும் சர்வதேசம் உறுதியாகவுள்ள நிலையில், அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டுமென இதன்போது வலியுறுத்தினார்.