Breaking News

இலங்கையில் சுமுகமான அதிகார மாற்றம் – 2015இன் சாதனை என்கிறார் பான் கீ மூன்

இலங்கையில் கடினமான சூழ்நிலைகளின் மத்தியிலும், சுமுகமான அதிகாரக் கைமாற்றமும் அரசியல் முன்னேற்றங்களும் ஏற்பட்டது ஊக்கமளிப்பதாக உள்ளது என்று ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.

இன்னும் இரண்டு வாரங்களில் 2016ஆம் ஆண்டு பிறக்கவுள்ள நிலையில், கடந்து செல்லும் இந்த ஆண்டின் உலக நிகழ்வுகள் குறித்தும், புதிய ஆண்டை எதிர்கொள்வது குறித்தும், ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், 2015 ஆம் ஆண்டை ‘முக்கியத்துவமான ஆண்டு’ (pivotal year) என்று சுட்டிக்காட்டியுள்ள அதேவேளை, ‘திருப்புமுனைகளும் திகிலும் நிறைந்த ஆண்டு’ (year of breakthrough and horror) என்றும் வர்ணித்துள்ளார்.

2016ஆம் ஆண்டில் சவால்களையும் நெருக்கடிகளையும் எதிர்கொள்ள கூட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

உலகின் பல்வேறு நாடுகளின் நிகழ்வுகளைப் பட்டியலிட்டுள்ள ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், 2015ஆம் ஆண்டில், கடினமான சூழ்நிலைகளின் மத்தியிலும், இலங்கையிலும், நைஜீரியாவிலும் சுமுகமான அதிகார கைமாற்றமும், அரசியல் முன்னேற்றங்களும் ஏற்பட்டிருப்பது உற்சாகம் அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.