இன்று சபையில் தீக்குளிப்பேன் - வடிவேல் சுரேஷ் எச்சரிக்கை
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு நாளைக்குள் (இன்று சனிக்கிழமை) தீர்வு காணாவிட்டால், அதற்கு தடையாக இருப்பவர்களையும் இழுத்துக்கொண்டு சபைக்குள் தீக்குளிக்கப் போவதாக பதுளை மாவட்ட ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் மீண்டும் பாராளுமன்றத்தில் நேற்றுத் தெரிவித்தார்.
சம்பளப் பிரச்சினை தொடர்ந்தும் இழுபறி நிலையில் காணப்படுகிறது. இப்பிரச்சினைக்கு முடிவுகாணாவிட்டால் தீக்குழிப்பேன் என்ற தனது தீர்மானத்தில் மாற்றம் இல்லையென்று குறிப்பிட்ட அவர், நாளைக்குள் (இன்று) முடிவு வழங்கப்படாவிட்டால் தானும், சம்பளப் பிரச்சினைக்குத் தடையாக சபையில் இருப்பவர்களையும் கட்டிப்பிடித்துக்கொண்டு தீக்குளிக்கப்போவதாகக் கூறினார்.
விசேட தெரிவுக்குழுவின் கீழான அமைச்சுக்கள் குறித்த குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். சம்பள விடயம் தொடர்பாக ஆவேசமாகப் பேசியிருந்த அவர், நாளை மாலைக்குள் இப்பிரச்சினைக்கான முடிவு அறிவிக்கப்பட வேண்டும்.
ஒரு வடிவேல் சுரேஷ் மாய்ந்தாலும் ஆயிரம் வடிவேல் சுரேஷ்கள் உருவாவார்கள். ஆனால் தீக்குளிப்பது என்ற முடிவில் எதுவித மாற்றமும் கிடையாது என்றும் தெரிவித்தார். கூட்டு ஒப்பந்தம் தொடர்பான மேசையில் என்ன நடைபெறுகிறது. பின்னணியில் என்ன நடைபெறுகிறது என்பது பற்றி கவலையில்லை.
தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படுவது அவசியமானது என்றும் அவர் மேலும் கூறினார்.இன்று தீர்வு காணாவிட்டால் அதற்கு தடையாக இருப்பவர்களையும் இழுத்துக்கொண்டு சபைக்குள் தீக்குளிப்பேன்.