Breaking News

வட மாகாண சபையின் வரவு செலவு திட்டம் ஏகமனதாக நிறைவேற்றம்

வடமாகாணசபையின் 2016ம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டம் எதிர்ப்புகள் எதுவும் இல்லாத நிலையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. வட மாகாண சபையின் வரவுசெலவு திட்டமானது கடந்த 15ம் திகதி மாகாணசபையில் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனால் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து பிரதம செயலாளர் அலுவலகம், ஆளுநர் செயலகம் மற்றும் 5 அமைச்சுக்களின் நிதி ஒதுக்கீடுகள் மீதான விவாதங்கள் கடந்த 4 நாட்களாக இடம்பெற்று வந்தன.

இந்நிலையில் நேற்று(வெள்ளிக்கிழமை) மாகாண சுகாதார அமைச்சு மற்றும் மாகாண மீன்பிடி அமைச்சு ஆகியவற்றிற்கான ஒதுக்கீடுகள் மீதான விவாதம் இறுதியாக நடைபெற்று சபையில் அங்கீகரிக்கப்பட்ட நிலையில் 2016ம் ஆண்டு வரவுசெலவு திட்டத்தை சபை அங்கீகரிப்பதற்காக மாகாண கல்வியமைச்சரும், பதில் முதலமைச்சருமான த.குருகுலராஜா சபையில் முன்மொழிந்தார்.

இதனை மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் வழிமொழிந்த நிலையில், இதற்கு எதிர்கட்சி தலைவர் சி.தவராசா எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து 2016ம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டம் சபையில் எவ்விதமான எதிர்ப்புக்களுமின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.