தேர்தலில் தோல்வி அடைந்த சிலர் என்னை வீழ்த்துவதற்காக அங்கும் இங்கும் சுற்றித் திரிகின்றனர்
தேர்தலில் தோல்வி அடைந்த சிலர் என்னை வீழ்த்துவதற்காக எனது ஜாதகத்தை எடுத்துக்கொண்டு அங்கும் இங்கும் சுற்றித் திரிகின்றனர். என்னுடைய உயிர் எப்போது பிரியும் என்பதை என்னுடைய ஜாதகத்திலிருந்து ஆராய்ந்து தேடும் அளவிற்கு சதிகாரர்களின் நிலைமை மாறியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
தற்போதைய அரசாங்கத்தை எவ்வாறு கவிழ்ப்பது என்று சிலர் கணக்கு போடு கின்றனர். மேலும் சிலர் மனதிலும் எண்ணுவதுடன், பரப்புரையும் செய்கின்றனர். எமக்கு எதிராக செயற்படுபவர்களை எண்ணி அரசியல் ரீதியாக அவர்களுக்கு அனுதாபம் தெரிவிக்கின்றேன். அடுத்த ஐந்து வருடம் வரைக்கும் எமது அரசாங்கத்துக்கு கால அவகாசம் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கை மின்சார சபை ஊழியர்கள் 2300 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கும் வைபவம் நேற்று முன்தினம் பத்தரமுல்லை பி.எச் புத்ததாஸ விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் உரையாற்றுகையில்,
ஒரு வருடத்திற்கு முன்னர் நிரந்தர நியமனத்தை வழங்குமாறு கோரி மின்சார சபை ஊழியர்கள் அனைவரும் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டபோது உங்களுடைய பிரச்சினை
தீர்ப்பேன் என்று
பொது வேட்பாளராக நான் அன்று வாக்குறுதி வழங்கினேன்.
இந்நிலையில் தேர்தலின் போது வாக்குறுதி வழங்கிவிட்டு அதனை மீறும் வகையில் அரசாங்கங்கள் செயற்படுவது குறித்து அவதானத்துள்ளோம். இருந்தபோதிலும் எங்களது புதிய அரசாங்கம் ஒரு வருடம் கூட பூர்த்தியாகாத அரசாங்கமாகும். ஆகஸ்ட 17 ஆம் திகதி ஆட்சி பீடமேறி இதுவரைக்கும் குறைந்தது ஒரு வருடம் கூட நான்கு மாதங்களே ஆகின்றன. எனினும் அரசியல் மேடைகளிலும் பாராளுமன்றத்திலும் ஊடகங்களிலும் பலவாறு விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.
இந்த அரசாங்கம் நீண்டகாலம் நிலைத்து நிற்க முடியாது என்றெல்லாம் எதிரணியினர் கூறுகின்றனர். தற்போதைய அரசாங்கம் கவிழ்க்கப்படுவதாக மனதில் எண்ணுவோரையும் பரப்புரை செய்வோரையும் எண்ணி அரசியல் ரீதியாக அவர்களுக்கு கவலை தெரிவிக்கின்றேன்.
தற்போதைய அரசாங்கத்தை எவ்வாறு கவிழ்ப்பது என்று சிலர் கணக்கு போட்டு பார்க்கின்றனர். மேலும் சிலர் மனதிலும் எண்ணுகின்றனர். அரசியல் மேடைகள் வாயிலாக பரப்புரையும் செயகின்றனர். எமக்கு எதிராக செயற்படுபர்களை எண்ணி அரசியல் ரீதியாக அவர்களுக்கு அனுதாபம் தெரிவிக்கின்றேன்.
அதுமாத்திரமின்றி தேர்தலில் தோல்வி அடைந்த சிலர் என்னை வீழ்த்துவதற்காக எனது ஜாதகத்தை ஆராயத் தொடங்கியுள்ளனர். எனது ஜாதகத்தை எடுத்துக்கொண்டு அங்கும் இங்கும் சுற்றி திரிகின்றனர். எப்போது என்னுடைய உயிர் பிரியும் என எனது ஜாதகத்தை ஆராய்ந்து தேடும் அளவுக்கு சதிக்காரர்களின் நிலைமை மாறியுள்ளது. இத்தகைய நபர்கள் அரசியல் ரீதியாக கீழ் நிலைக்கு தள்ளப்பட்டவர்களாகும்.
ஜனவரி எட்டாம் ஆம் திகதி ஆட்சி மாற்றத்திற்கு ஒன்று சேரும் போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியிடம் 47 உறுப்பினர்கள் மாத்திரமே இருந்தனர். மேலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிடம் 142 ஆசனங்கள் காணப்பட்டன. இந்தகைய நிலைமையிலேயே 100 நாள் அரசாங்கத்தை நாம் ஏற்றுக்கொண்டு சர்வதேச அரசியல் வரலாற்றில் சிறுபான்மை பலம் கொண்ட அரசாங்கத்தை வைத்துக்கொண்டு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையின் அதிகாரங்களை குறைக்கும் 19 ஆவது திருத்தச்சட்டத்தை நிறைவேற்றினோம். இது போன்று பல வேலைத்திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றினோம்.
பொது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை சரியான முறையிலும் ஒழுங்கான முறையிலும் நிறைவேற்று காட்டினோம். ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலின் பின்னர் எமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்து நான்கு மாதங்களே பூர்த்தியாகின்றன. இந்த தருவாயில் நாட்டின் நலன் சார்ந்த வேலைத்திட்டங்களை ஒழுங்கு முறைப்படி செய்ய வேண்டியுள்ளது. அரசாங்கத்தை கவிழ்க்க திட்டமிட்டுள்ளவர்கள் மக்களின் கவனத்தை திசைத்திருப்பும் வகையில் தொடர்ந்து செயற்பட்ட வண்ணம் உள்ளனர் என்றார்.