Breaking News

நிதியமைச்சரின் ஊடக செயலாளர் ஹெரோயின் சர்ச்சையில்

ராஜபக்ச அரசாங்கத்தின் காலத்தில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி ஹெரோயின் போதைப் பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கொள்கலன் பெட்டியை சுங்க பணிமனையில் இருந்து விடுவிக்க நடவடிக்கை எடுத்த முன்னாள் பிரதமர் டி.எம். ஜயரத்னவின் இணைப்புச் செயலாளரான சிசிர விஜேசிங்க என்ற நபர் தற்போது நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, அவரிடம் பனி செய்ய வைத்து கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதுகுறித்து சிங்கள இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது, அந்தச் செய்தியையும். குறித்த இணையத்தளம் வெளியிட்டுள்ள புகைப்படத்தையும் இங்கே தருகிறோம்.

நிதியமைச்சரின் ஊடக செயலாளராக இந்த சிசிர விஜேசிங்க கடமையாற்றி வருகிறார். ஹெரோயின் கொள்கலன் தொடர்பான சம்பவத்தின் போது அவர் முன்னாள் பிரதமர் டி.எம். ஜயரத்னவின் இணைப்புச் செயலாளராக கடமையாற்றினார்.

ஹெரோயின் போதைப் பொருள் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கொள்கலனை விடுவிக்கும் கடிதங்களை தயார் செய்தார் என்ற குற்றச்சாட்டில் பணியில் இருந்து நீக்கப்பட்ட இந்த நபர், அமெரிக்காவுக்கு தப்பிச் சென்றார்.

தேர்தலுக்கு பின்னர் மீண்டும் இலங்கை திரும்பிய இந்த நபர் அமைச்சர் ரவி கருணாநாயக்கவுடன் இணைந்து கொண்டு, வழமையான தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆங்கிலம், சிங்களம் ஆகிய இரண்டு மொழிகளில் ஓரளவு பணியாற்ற கூடியவர்களே சாதாரணமாக அமைச்சுக்களின் ஊடக செயலாளர்களாக நியமிக்கப்படுவார். எனினும் சிசிர விஜேசிங்க என்ற இந்த நபருக்கு போதிய ஆங்கில அறிவு இல்லை எனக் கூறப்படுகிறது.

மேலும் இந்த நபர் முன்னாள் ஜனாதிபதியின் சகோதரர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோருடன் நெருக்கமானவர் எனவும் பேசப்படுகிறது.

ராஜபக்ச அரசாங்கத்துடன் சம்பந்தப்பட்டு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த பலர் தற்போது புதிய அரசாங்கத்துடன் இணைந்துள்ளதுடன் மேலும் பலர் இணைந்து கொள்ள தருணம் பார்த்துள்ளனர்.

ராஜபக்சவினர் இந்த நபர்களை பயன்படுத்தி தாம் செய்த ஊழல், மோசடிகளை மறைக்க முயற்சித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.