ஒரு அங்குல காணி கூட சீனாவுக்கு வழங்கப்படாது – அரசு திட்டவட்டம்
சீனாவுக்கு ஒரு அங்குல காணியேனும் உரிமையாக வழங்கப்படாது என்றும், இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் உள்ளிட்ட சீனாவின் திட்டங்கள் அனைத்தும் மீள ஆரம்பிக்கப்படும் என்றும் சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் செய்தியாளர் சந்திப்பில், இலங்கை அரசாங்கத்தின் இந்த நிலைப்பாட்டை, அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் ராஜித சேனாரத்ன வெளியிட்டார்.
“கொழும்பு துறைமுக நகரத் திட்டம் உள்ளிட்ட,சீனாவுடன் உடன்பாடு செய்து கொள்ளப்பட்ட எந்தவொரு திட்டமும் நிறுத்தப்படாது. அவை அனைத்தும் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்.
கொழும்பு துறைமுக நகரத் திட்டம் வரும் ஜனவரியில் மீளவும் ஆரம்பிக்கப்படும். ஆனாலும்,ஒரு அங்குலக் காணி கூட, சீனாவுக்கு சொந்தமாக வழங்கப்படாது. 99 ஆண்டு குத்தகைக்கே காணிகள் வழங்கப்படும். நாட்டின் ஒரு பகுதியை சீனாவுக்கு வழங்காத வகையில் புதிய திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.” என்றும் அவர் தெரிவித்தார்.