பணிந்தது இலங்கை அரசு – குரோதப் பேச்சு சட்டமூலத்தை விலக்கிக் கொண்டது
குரோதத்தைத் தூண்டும் வகையில் கருத்து வெளியிடுவதை தடை செய்யும், வகையில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட சட்டமூலத்தை விலக்கிக் கொள்வதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
இனவாதம், மதவாதத்தை தூண்டும் வகையில் குரோதக் கருத்துக்களை வெளியிடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அனுமதிக்கும் வகையில், குற்றவியல் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டு வரும் சட்டமூலத்தை அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தது.
இந்த திருத்தச் சட்ட மூலம் கருத்துச் சுதந்திரத்தை பாதிக்கும் என்றும், அடிப்படைச் சுதந்திரத்தைப் பறிக்கும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடும் எதிர்ப்பைத் தெரிவித்திருந்தது.
இந்தச் சட்டமூலத்தை உடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கை அரசாங்கத்தைக் கேட்டிருந்தது.இந்த நிலையில், இந்தச் சட்டமூலத்தை விலக்கிக் கொள்ள அரசாங்கம் முடிவெடுத்துள்ளதாக, அவைத்தலைவர் லக்ஸ்மன் கிரியெல்ல நாடாளுமன்றத்தில் இன்று அறிவித்துள்ளார்.