Breaking News

வெள்ளத்தால் மின்வெட்டு - சென்னை தனியார் மருத்துவமனையில் 18 பேர் பலி

சென்னையில் 18 நோயாளிகளின் சடலங்கள், ஒரு தனியார் மருத்துவமனையிலிருந்து, ராயப்பேட்டை அரச மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைகளுக்காக கொண்டு வரப்பட்டுள்ளதாக இந்திய செய்தி ஊடகங்கள் கூறுகின்றன.

கடும் வெள்ளம் காரணமாக மருத்துவமனையில் உள்ள அவசர பிரிவுக்கு மின்சார விநியோகம் இல்லாத காரணத்தினாலேயே, தீவிர சிகிச்சை பிரிவிலிருந்த சிலர் இறந்துவிட்டதாக, இறந்தவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னை மியாட் மருத்துவமனையிலிருந்து அந்த சடலங்கள் கொண்டுவரப்பட்டதாக செய்தி அறிக்கைகள் கூறுகின்றன. ஆனால் மியாட் மருத்துவமனையின் அதிகாரிகள் இது தொடர்பில் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

துர்கா பிரசாத் என்ற சென்னையை சேர்ந்தவரின் தாய் பரஞ்சோதி மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும், அங்கு மின் விநியோகம் இல்லாத காரணத்தினால் வெண்டிலேட்டர் போன்ற முக்கிய கருவிகள் செயலிழந்துபோனதாலேயே இறந்துவிட்டதாகவும், துர்கா பிரசாத் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தனது தாய் இறந்த தகவலை மருத்துவமனை தன்னிடம் தெரிவிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ள துர்கா பிரசாத், செய்தி ஊடகங்களை பார்த்தப்பின்னர், தான் ராயப்பேட்டா மருத்துவமனை வந்த பிறகே தனது தாய் இறந்தது தெரியவந்ததாகவும் தெரிவித்துள்ளார்.