Breaking News

அரசியல் தீர்வுத் திட்டத்தை தயாரிக்கும் உபகுழுவில் இடம்பெற்றுள்ள 15 பேர் விபரம்

தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான அரசியல் தீர்வுத் திட்ட
ஆவணத்தை தயாரிக்க 15 பேர் கொண்ட உபகுழுவொன்றை தமிழ் மக்கள் பேரவை நியமித்துள்ளது.

யாழ்.பொதுநூலக கேட்போர் கூடத்தில் நேற்றுக்காலை நடந்த பேரவையின் இரண்டாவது கூட்டத்தின் பின்னர், நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில், இணைத் தலைவர்களில் ஒருவரான மருத்துவர் பி.லக்ஸ்மன் இதனை அறிவித்தார்.

”அரசியல் தீர்வு சம்பந்தமாக விஞ்ஞான பூர்வமான ஆவணமொன்றை முன்வைப்பதற்காக 15 பேர் கொண்ட உப குழுவொன்று உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகிக்கும் கட்சிகள் சார்பில் தலா இரண்டு பேரை முன்மொழிந்துள்ளன. முதலமைச்சர் சார்பிலும் இரண்டுபேர் நியமிக்கப்படுவர். மேலும், சிவில் சமூக அமைப்புகளின் சார்பில் 5 பேர் நியமிக்கப்படுவர் என்று அவர் குறிப்பிட்டார்.

இதன்படி, தமிழ் அரசுக் கட்சி சார்பில் பேராசிரியர் சி.க.சிற்றம்பலம், சட்டவாளர் காண்டீபன், புளொட் சார்பில் ரி.பரந்தாமன், ஈபிஆர்எல்எவ் சார்பில் சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் அவரது சகோதரர் கலாநிதி சர்வேஸ்வரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சட்டவாளர் வீ.மணிவண்ணன், தமிழ் மக்கள் பேரவை சார்பில், சட்டவாளர்கள் குருபரன் குமாரவடிவேல், புவிதரன், சேவியர் விஜயகுமார் மற்றும் கலாநிதி கே.ரி.கணேசலிங்கம் ஆகியோர் இந்த உபகுழுவில் இடம்பெற்றுள்ளனர்.

முதலமைச்சர் சார்பில் நியமிக்கப்படும் இருவர், புளொட் சார்பில் ஒருவர், சிவில் சமூகம் சார்பில் ஒருவர் என நான்கு பேர் மட்டும் இன்னமும் முடிவு செய்யப்படவில்லை.

அதேவேளை, “ இந்த நிபுணர் குழுவுக்கு ஆலோசனைகளை வழங்குவதற்காக வெளிநாடுகளில் உள்ள அரசியலமைப்பு உருவாக்கத்தில் தேர்ச்சியுள்ள, 5 ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து நிபுணர்குழு ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளும்.

தமிழ் மக்களுடைய சுய ம் அல்லது அடையாளத்தைப் பாதுகாக்கின்ற வகையில், எமது தீர்வுத் திட்டம் தயாரிக்கப்படும்.

அரசியல் தீர்வானது எவ்வாறு அமைய வேண்டும். எவ்வாறான விடயங்கள் உள்வாங்கப்பட வேண்டும் போன்றவற்றை ஆராய்ந்து மக்களுடைய பங்களிப்புடன் தீர்வு விடயத்தை முன்வைப்பதே இந்த உபகுழுவின் நோக்கம்.

இத்தீர்வுத் திட்டம் அடிமட்டத்திலிருந்து மேலெழுந்து வந்து சகல மக்களினதும் அபிலாசைகளைப் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும் என்பதே எல்லோருடைய ஆவலாகும்.

அதன்பிரகாரம் நிபுணர் குழு அமைக்கப்பட்டு அரசியல் தீர்வுத் திட்டத்திலுள்ள முக்கியமான விடயங்கள் ஆராயப்பட்டு அறிக்கைகள் முன்வைக்கப்படும்.

அது பேரவையில் ஏற்றுக் கொள்ளப்பட்டபின்னர் மக்கள் மத்தியில் முன்வைக்கப்படும். அதன் பின்னர் மூன்று அல்லது நான்கு மாதங்களில் தமது இறுதியான தீர்வு திட்ட வரைபை அல்லது முன்மொழிவை நிபுணர்குழு உருவாக்கும் என நினைக்கிறோம்.

இதேபோன்று நிபுணர்குழு உருவாக்கும் தீர்வு திட்டம் தொடர்பா க நாங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புடனும் பேசவேண்டிய தேவை இருக்கிறது.

இது தொடர்பில் மக்கள் பேரவையில் அங்கம் வகித்துக் கொண்டிருக்கும் முதலமைச்சர் அல்லது கூட்டமைப்பின் அங்கத்துவக்கட்சிகளின் தலைவர்கள் ஊடாக கூட்டமைப்புடன் இந்த விடயம் தொடர்பாக நாங்கள் நிச்சயமாக பேசுவோம்.

தமிழ் மக்கள் பேரவை பல சிவில் அமைப்புக்களை உள்வாங்கி உருவாக்கப்பட்டுள்ள ஒரு அமைப்பாகும். இது எந்தச் சந்தர்ப்பத்திலும் அரசியல் கட்சியாக மாற்றமடையாது.

இதில் உள்ளவர்களும் பல்வேறு சமூக அமைப்புக்களையும் மத அமைப்புக்களையும் சார்ந்தவர்களே உள்ளனர். எனவே அவர்கள் எந்தச் சந்தர்ப்பத்திலும் அரசியல் கட்சி என்ற நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்படப் போவதில்லை.

தமிழ் மக்களுக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு ஒன்று பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும். இந்தப் பொறுப்பை அரசியல் கட்சிகளிடம் மாத்திரம் விட்டுவிடக்கூடாது.ஏனெனில் பாதிக்கப்பட்டவர்கள் மக்களே. கடந்த காலங்களில் ஏற்பட்ட பெருமளவான உயிரிழப்புக்கள் சொத்து இழப்புக்கள் தியாகங்கள் அனைத்திற்கும் ஓர் சரியான தீர்வு எட்டப்படவேண்டும்.

அதற்காக உழைக்க வேண்டியது ஒவ்வொருவரினது கடமையாகும். அக்கடமையைச் செய்யவே நாம் முயற்சித்துள்ளோம்.” ” என்றும் மருத்துவர் லக்ஸ்மன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

01.தமிழ் அரசுக் கட்சிக்கு அழைப்பு இல்லை – நிபுணர் குழுவில் இடம்பெற்றது எப்படி?

02.தமிழ் மக்கள் பேரவை எதனுடைய தொடக்கம் - நிலாந்தன்

03.அனைத்து ஐயங்களுக்கும் விளக்கமளித்தார் விக்கினேஸ்வரன்(காணொளி)

04.தமிழரசுக் கட்சி தவிர்ந்த ஏனைய மூன்று கட்சிகளையும் தமிழ் மக்கள் பேரவையுடன் சேர்ந்துத் கொள்ள தீர்மானம்