சித்திரவதை முகாம்கள் - மங்களவின் கருத்துக்கு சுரேஸ் பதில்
யாழ்ப்பாணத்திலும் திருகோணமலையிலும் சித்திரவதை முகாம்கள் இருந்தது. அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமென்றே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரி வருகின்றது. அவ்வாறான வதை முகாம்கள் தொடர்பில் விசாரணை செய்ய வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு இருக்கின்றது.
இந் நிலையில் சித்திரவதை முகாம்கள் எவையும் தற்போது இல்லை என்றும் இருந்தால் தெரியப்படுத்துமாறும் கேட்பதென்பது அரசாங்கம் அதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கு முற்படுகின்றதென்பது புலப்படுகின்றது. அந்த வகையிலேயே அமைச்சர் மங்கள சமரவீரவின் கருத்தும் அமைந்திருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் வரணியில் இராணுத்தின் 526 ஆவது படைப்பிரிவினர் நிலைகொண்டிருந்த பகுதியில் சித்திரவதை முகாமொன்று இருந்ததாக புகைப்படங்களுடன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாரர்ளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் பரபரப்புத் தகவல் வெளியிட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் பேசிய அமைச்சர் மங்கள சமரவீர தற்போது வதை முகாம்கள் இல்லை என்றும் இருந்தால் தெரியப்படுத்துமாறும் கோரியிருக்கின்றார்.
இந் நிலையில் அமைச்சர் மங்கள சமரவீரவின் கருத்துத் தொடர்பில் சுரேஸ் பிரேமச்சந்திரனிடம் ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மங்கள சமரவீர பாராளுமன்றத்தில் சித்திரவதை முகாம் தொடர்பில் குறிப்பிடும் பொழுது இப்பொது எங்கேயாவது வதை முகாம்கள் இருந்தால் உடனடியாக அறிவிக்கும்படியும் தான் அது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமென்றும் கூறியிருக்கின்றார். ஆனால் நாங்கள் குறிப்பிட்ட விடயம் 2014 ஆம் ஆண்டிற்கு முன்பாக அல்லது 2014 ஆம் ஆண்டு இராணுவம் வரணியில் இருந்த காலம் வரையில் அங்கு ஒரு வதை முகாம் இருந்தது என்பதையே நாங்கள் கூறியிருக்கின்றோம்.
அதுமாத்திரம் அல்லாமல் அந்த வதை முகாம் தொடர்பான படங்களை நாங்கள் ஊடகங்களிற்கு வெளியிட்டிருக்கின்றோம். ஆகவே அந்த வகையில் அன்று அந்த வதை முகாம் இருந்ததா இல்லையா என்பதை ஆராய வேண்டிய பொறுப்பும் கடமையும் அரசாங்கத்திற்குரியது. ஆகவே மங்கள சமரவீர் அவர்களும் சரி இராணுவப் பேச்சாளரும் சரி அங்கு வதைமுகாம் இருந்தது என்பதை மறுக்க முடியாது. ஏனெனில் அதற்கு ஆதாரமாக அங்கு எடுத்த புகைப்படப் பிரதிகள் ஊடகங்களுக்கு விநியோகிக்கப்பட்டு இருக்கின்றன.
ஆகவே இதற்கு முன்பு அங்கு இருந்ததா அல்லது இல்லையா என்பதை விசாரித்து அங்கு எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள் எத்தனை பேர் கைது செய்யப்பட்டு வைத்திருந்தார்கள் என்பது குறித்ததான விடயங்களை அறிவிக்க வேண்டுமே தவிர இப்பொழுது இருந்தால் சொல்லுங்கள் என்று கேட்பது ஒரு தவறான விடயமாகும்.
இதைத் தான் திருகோணமலையிலும் செய்தார்கள். அதாவது திருகோணமலையில் வதை முகாம்கள் இருப்பதாக நாங்கள் அன்று கூறிய போது இப்பொழுது இல்லை என்று கூறினார்களே தவிர ஏற்கனவே அங்கு இருந்தது என்பது இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது.
அதே போல் வரணியிலும் இருந்ததென்பது நாங்கள் நேரடியாகப் பார்த்திருக்கும் புகைப்படங்களுடன் அதனை ஊடகங்களுக்கும் தெரியப்படுத்தியிருக்கின்றோம். இப்பொழுது இருக்கிறதென்பதனை விடுத்து ஏற்கனவே உள்ளதனை விசாரிக்கும்படியே நாங்கள் கேட்டிருக்கின்றோம். அதனையே இந்த அரசாங்கம் மேற்கொள்ள வேண்டுமென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.