தமிழர்களின் பிரச்சினையை உதாசீனம் செய்யமாட்டோம் - மங்கள தெரிவிப்பு
முன்னைய ஆட்சியாளர்கள் தமிழ் மக்களை புறக்கணித்த நிலையில் நாம் அவர்களை ஆதரித்து செயற்படுவதே இனவாதிகளுக்கு முக்கிய பிரச்சினையாக தெரிகின்றது. நாட்டின் தேசிய பாதுகாப்பு விடயத்தில் முன்னைய ஆட்சியாளர்களை விடவும் நாம் அதிக அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றோம். அதேபோல் நாம் தமிழர்களை ஒருபோதும் கைவிடப்போவதும் இல்லை என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
மக்களின் விருப்பம் இன்றி இந்த ஆட்சியை எந்த சக்திகளினாலும் வீழ்த்த முடியாது. தமிழ் மக்களின் மீது நாம் அக்கறையுடனும் அவர்களின் பிரச்சினையை தீர்ப்பதில் பொறுப்புடனும் செயற்பட்டு வருகின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டின் தேசிய பாதுகாப்பு விடயத்தில் அரசாங்கம் பலவீனமாக செயற்படுவதாக பொது எதிரணியினர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில் அது தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த போதே மங்கள சமரவீர மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்
இன்று நாடு சரியான திசையில் பயணிக்கின்றது. இதுவரை காலமும் எம்மீது சர்வதேச நாடுகள் முன்வைத்த விமர்சனங்கள் அனைத்தும் இன்று நிறுத்தப்பட்டு அனைத்து நாடுகளினதும் உதவியுடன் நாம் நாட்டை முன்கொண்டு செல்கின்றோம். இந்த நாட்டில் ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டு ஒருவருடம் பூர்த்தியாகின்றது. இந்த ஒருவருட காலத்தில் நாட்டில் எவ்வாறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதை இன்று மக்கள் உணரக்கூடியதாக உள்ளது. எனினும் நாம் முழுமையாக நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்திவிட்டோம் என கூறவில்லை. இந்த ஆட்சியிலும் குறைபாடுகள் உள்ளன. ஆனால் அவை அனைத்தும் சரிசெய்யக்கூடியவையேயாகும். . இந்த பிரச்சினைகளை நிவர்த்தி செய்ய எமக்கு கால அவகாசமும் உள்ளது.
எனினும் கடந்த காலத்தில் நாட்டில் காணப்பட்ட ஊழல்,மோசடிகள் மற்றும் கொலை, கொள்ளை, வெள்ளைவேன் கடத்தல் என்ற அனைத்தையும் நாம் முடிவுக்கு கொண்டுவந்துள்ளோம். குற்றவாளிகள் தொடர்பில் கடினமான வகையில் செயற்பட்டு வருகின்றோம். குற்றவாளிகளை தண்டிக்கும் வகையில் அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றது. அதேபோல் நாட்டில் நல்லிணக்கம் ஒன்றை நோக்கிய பயணத்தை நாம் ஆரம்பித்துள்ளோம். தமிழ் மக்களின் மீது நாம் அக்கறையுடனும் அவர்களின் பிரச்சினையை தீர்ப்பதில் பொறுப்புடனும் செயற்பட்டு வருகின்றோம்.
எனினும் கடந்த காலங்களில் அரசாங்கம் தமிழர்களின் பிரச்சினைகளை மூன்றாம் தரப்பு பிரச்சினையாகவே கருதியது. முக்கியமான தருணங்களில் தமிழ் மக்களை ஒன்றிணைத்து பயணிப்பதில் மஹிந்த தரப்பினர் பின்வாங்கினர். அப்போதும் அரசாங்கத்தில் பலர் இனவாத கருத்துக்களை பரப்பி புலிகளை தமிழர்களுடன் ஒன்றிணைத்து கருத்துக்களை வெளியிட்டனர். அவ்வாறான நிலையில் எமது ஆட்சியில் தமிழ் மக்களின் நியாயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வடக்கு கிழக்கு பகுதிகளை மீளவும் அவர்களின் கைகளில் ஒப்படைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். அதை பொறுத்துக்கொள்ள முடியாது இன்றும் அதே இனவாதிகள் புலிக் கதைகளை கூறி நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.
ஆயினும் இந்த விடயங்களை நாம் கவனத்தில் கொள்ளவேண்டிய தேவை இல்லை. நாட்டின் தேசிய பாதுகாப்பு விடயத்தில் முன்னைய ஆட்சியாளர்களை விடவும் நாம் அதிக அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றோம். இதில் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. அதேபோல் நாம் தமிழர்களை ஒருபோதும் கைவிடப்போவதும் இல்லை.
மேலும் இந்த அரசாங்கம் மக்களின் பூரண விருப்பத்துடன் ஆட்சியை நடத்தி வருகின்றது. அதேபோல் பிரதான இரண்டு கட்சிகளும் நாட்டில் தலைமைத்துவத்தை ஏற்று ஆட்சியை நடத்துகின்றன. அவ்வாறன நிலையில் மக்களின் விருப்பம் இன்றி இந்த ஆட்சியை எந்த சக்திகளினாலும் வீழ்த்த முடியாது. இன்று ஒரு அணியில் இருந்து எதிர்ப்பு குரல் எழுப்பும் நபர்களும் இன்னும் பல ஆண்டுகளுக்கு இவ்வாறே இருக்கவேண்டிய நிலைமை ஏற்படும் என்றார்.