உகண்டா, சீஷெல்சில் உள்ள தூதரகங்களை மூடுகிறது இலங்கை
உகண்டாவிலும்,சீஷெல்சிலும் உள்ள இலங்கை தூதரகங்களை மூடி விட, புதிய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இந்த இரண்டு தூதரகங்களும் அமைக்கப்பட்டதற்கான தேவைப்பாடுகள் குறித்து தற்போது கேள்வி எழுந்துள்ளது.ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் உகண்டாவின் ஆதரவைப் பெறுதற்காகவே கம்பாலாவில் தூதரகம் ஒன்றை இலங்கை அமைத்திருந்தது.
அதுபோன்று முன்னைய ஆட்சியின் உயர்மட்டப் பிரமுகர்களின் இரகசிய செயற்பாடுகளுக்காகவே, சீஷெல்சில் இலங்கை தூதரகம் அமைக்கப்பட்டது. 2013ஆம் ஆண்டில் மகிந்த ராஜபக்சவின் இந்த நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருந்த போது இந்த தூதரகங்கள் நிறுவப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
வெளிவிவகார அமைச்சின் செலவுகளைக் குறைப்பதற்காக, வெளிநாடுகளில் உள்ள தூதரகங்களில் சிலவற்றை மூடிவிடவும், வதிவிடமற்ற தூதுவர்களை நியமிக்கும் நடைமுறையை கொண்டுவரவும் உத்தேசித்துள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
இலங்கைக்கு தற்போது வெளிநாடுகளில், 68 தூதரகங்கள் மற்றும் துணைத் தூதரகங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.