கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் – சீனாவுக்கு இலங்கை நிபந்தனை
கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு இலங்கை அரசாங்கம், சீனாவிடம் சில நிபந்தனைகளை முன்வைத் துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கமைய, 1.4 பில்லியன் டொலர் செலவில், கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு, ஏற்கனவே செய்து கொள்ளப்பட்ட உடன்பாட்டில் சில திருத்தங்களை செய்ய இணங்க வேண்டும் என்று இலங்கை அரசாங்கம் கோரியுள்ளது.
புதிதாக உருவாக்கப்படும் நிலப்பரப்பில், 20 ஹெக்ரெயர் பிரதேசம் சீன நிறுவனத்துக்குச் சொந்தமாக்கப்படும் என்று ஏற்கனவே உடன்பாடு செய்யப்பட்ட போதிலும், அவ்வாறு நிலப்பரப்புக்கு உரிமை கோர முடியாது என்று தற்போதைய அரசாங்கம் நிபந்தனை விதித்துள்ளது.
இல்ங்கை அரசாங்கத்தின் இந்த திட்டம் குறித்து சீனாவின் தொடர்பாடல் கட்டுமான நிறுவனம் தீவிரமாக ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக வரும் புதன்கிழமை இலங்கை அரசாங்க அதிகாரிகளை சீன முதலீட்டாளர் சந்தித்துக் கலந்துரையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் போது உடன்பாட்டு மூலத்தில் திருத்தங்களைச் செய்வது குறித்து ஆராயப்படவுள்ளது.சுற்றாடல் ஆய்வு மற்றும் நிலத்தின் உரிமை ஆகிய இரண்டு பிரிவுகளே உடன்பாட்டின் முக்கியமான திருத்தப்பட வேண்டிய விடயங்கள் என்று இலங்கை பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.