Breaking News

நிபுணர்களால் நிர்க்கதியான தமிழ் மக்கள் - யாழ் குடிநீர் பிரச்சனை தொடர்பான பதிவு

யாழ் தண்ணீர் பிரச்சனை மக்களுக்கு மறைக்கப்படுகின்ற
விடயங்கள் தொடர்பாக அமைகின்ற இக்கட்டுரை க.செந்தூரன் என்பவரால் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் உள்ள விடயங்கள் பற்றிய வடமாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசனுக்கு தெரியப்படுத்தி அவருடைய கருத்துக்களை பெற்றுள்ளோம். அவர்களின் கருத்து இக்கட்டுரையின் இறுதியில் இணைத்துள்ளோம்.

'வெற்றுக் கண்களால் எண்ணெயைக் கண்ட மக்களும் கைகளால் அதனை உணர்ந்த மக்களும் செய்வதறியாது அதிர்ச்சியடைந்தார்கள். போராட்டங்களின் பயனாக தமக்குக் கிடைக்கப்பெற்ற நீர் விநியோகம் நிறுத்தப்படும் என அஞ்சினார்கள். எவரிடம் முறையிடுவது என்று தெரியாது நிர்க்கதியானார்கள்' 

அறிமுகம்

குடாநாட்டு மக்களின் குடிநீர்ப் பிரச்சினையானது அவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினையாகும். நீண்ட கால அடிப்படையில் அது அவர்களின் சுகாதாரத்தில் மட்டுமல்லாது சமூக, பொருளாதார மற்றும் கலாச்சார விடயங்களிலும் செல்வாக்குச் செலுத்தக்கூடும் என்பது ஏற்றுக் கொள்ளக்கூடிய உண்மையாகும். 

சில வருடங்களாகவே சுன்னாகம் பகுதியில் வதியும் சிலரால் முறையிடப்பட்ட குடிநீருடன் எண்ணெய் கலப்பது என்ற விடயமானது 2014ம் ஆண்டின் இறுதிப்பகுதியிலும் 2015ம் ஆண்டிலும் பாரிய பிரச்சினையாக உருவெடுத்து இலங்கையின் வடபகுதியின் யாழ் குடாநாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வதியும் மக்களின் முக்கிய பிரச்சினையாக மாற்றமடைந்தது. இந்த நிலையில் தெல்லிப்பழைப் பகுதி சுகாதாரத் துறையினராலும் சில வழக்கறிஞர்களாலும் கிடைக்கப்பெற்ற ஆதாரங்களை அடிப்படையாக வைத்து மல்லாகம் நீதிமன்றில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது.

வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் எண்ணெய்க் கலப்பிற்கு காரணமானது என சந்தேகிக்கப்பட்ட மின்னிலையம் ஒன்று தற்காலிகமாக மூடப்பட்டது. சமகாலப்பகுதியில் பல்வேறு தரப்பினர்களாலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு அவை விரிவுபடுத்தப்பட்டன. தொடர்ச்சியாக நடைபெற்ற போராட்டங்களினாலும் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் ஏற்படுத்தப்பட்ட அழுத்தங்களினாலும் வடக்கு மாகாண சபையினரால் நிபுணர் குழு என்ற போர்வையில் பக்கச்சார்பான அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டது.

நீண்ட காலமாக இழுத்தடித்த அவர்களின் முடிவுகளை திரிபுபடுத்தி இறுதியாக குடாநாட்டு நீரில் எண்ணெய்க் கலப்பு இல்லை என்று முடிவை வெளியிட்டார்கள். வெற்றுக் கண்களால் எண்ணெயைக் கண்ட மக்களும் கைகளால் அதனை உணர்ந்த மக்களும் செய்வதறியாது அதிர்ச்சியடைந்தார்கள். போராட்டங்களின் பயனாக தமக்குக் கிடைக்கப்பெற்ற நீர் விநியோகம் நிறுத்தப்படும் என அஞ்சினார்கள். எவரிடம் முறையிடுவது என்று தெரியாது நிர்க்கதியானார்கள். 

ஆரம்பகாலப் பரிசோதனைகள்

தேசிய நீர்வழங்கல் அதிகார சபையினரால் 2013ம் ஆண்டு காலப்பகுதியில் நடாத்தப்பட்ட விரிவான ஆராய்ச்சியின் முடிவுகள் பல திடுக்கிடும் தகவல்களைக் கொண்டிருந்தன. பல்வேறு அழுத்தங்களினாலும் காரணங்களினாலும் இந்த முடிவுகள் வெளியிடப்படாமல் மூடி மறைக்கப்பட்டன. நீதிமன்ற உத்தரவின்பேரில் பல்வேறு தடைகளையும் தாண்டி இந்த முடிவுகள் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டன. அதன் பிரகாரம் சுன்னாகம் பகுதியில் பல்வேறு கிணறுகளில் குறிப்பிடத்தக்களவு எண்ணெய் மாசு கலந்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டதுடன் சில கிணறுகளில் தீங்கு பயக்கும் பாரஉலோகங்கள் கலந்திருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இவ்வாராய்ச்சிகளை நடாத்தியவர்களே அழுத்தங்கள் காரணமாக தமது முடிவுகள் பொய்யானவை என பின்னர் கூறியிருந்தமை இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது. 

தொடர் பரிசோதனைகள்

பொதுமக்களின் கிணறுகளில் எண்ணெய்ப்படலமானது மிதப்பது மிகத் தெளிவாகத் தெரியத் தொடங்கிய நிலையில் ஏராளமான மக்கள் தாமாகவே தமது கிணற்று நீர் மாதிரிகளைப் பரிசோதிக்கத் தொடங்கினார்கள். பெரும்பாலான முடிவுகள் அதிகளவு எண்ணெய் அல்லது கிறீஸ் குடிநீரில் கலந்திருப்பதாகவே கிடைக்கப்பெற்றன. ஆனால் துர்அதிஷ்டவசமாக சில காலங்களின் பின்னர் மேலிடத்தின் உத்தரவிற்கு அமைவாக பொதுமக்களின் நீர்ப்பரிசோதனைகள் யாவும் நிறுத்தப்பட்டன அல்லது எண்ணெய்க் கலப்பு இல்லை என அறிக்கை வழங்கப்பட்டன.

இந்நிலையில் நலன்விரும்பிகள் சிலரால் நிதி சேகரிக்கப்பட்டு கொழும்பில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பரிசோதனைகள் நடாத்தப்பட்ட போதிலும் ஆச்சரியப்படத்தக்க வகையில் அனைத்து முடிவுகளும் குடிநீரில் எண்ணெய்க் கலப்பு இல்லை என வெளிவந்தன. பணமானது நடுநிலையான முடிவுகளை மாற்றியிருந்தமை சில காலங்களின் பின்னரே எமக்குத் தெரியவந்தது. பின்னர் மத்திய சுகாதார அமைச்சினால் அனுப்பப்பட்ட விசேட குழுவினர் 30 கிணறுகளில் நீர்மாதிரிகளைச் சேகரித்து இலங்கையின் அதிஉயர் தொழிநுட்ப நிறுவனத்தில் நடாத்திய பரிசோதனை முடிவுகளில் 100 வீதமான கிணறுகளில் அதிகளவிலான எண்ணெய் அல்லது கிறீஸ் கலந்திருப்பது உறுதிசெய்யப்பட்டது. 

போராட்டங்கள்

குடாநாட்டின் நீர்ப்பிரச்சினையை மக்கள் மயப்படுத்தும் நோக்கோடு பல்வேறு போராட்டங்கள் நடாத்தப்பட்டன. ஆரம்பத்தில் சுன்னாகம் பகுதியின் ஒரு பிரிவு மக்களால் தூய நீருக்கான பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்றியம் என்ற அமைப்பு ஆரம்பிக்கப்பட்டு அடையாளமான போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இப்போராட்டத்தில் மாகாண விவசாய அமைச்சர் உட்பட ஏனைய அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதன் போது குறிப்பிட்ட அரசியல்வாதிகளால் நன்னீருடன் எண்ணெய் கலப்பது தொடர்பாக கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தமை பிற்காலத்தில் அனைவரையும் நகைப்பில் ஆழ்த்தியது. 

இதன் பின்னராக சில வைத்தியர்களால் உண்ணாவிரதப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டதுடன் அதன் தொடர்ச்சியாக பாடசாலை மாணவர்களாலும் ஆசிரியர் சங்கத்தினாலும் மற்றும் பல்கலைக்கழக ஊழியர்களாலும் சில போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. ஒரு கட்டத்தில் நன்கு ஒருங்கிணைக்கப்படட முறையில் தலைநகர் கொழும்பில் இளைஞர்களினால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இப்போராட்டத்தில் இன மற்றும் மொழி வேறுபாடுகள் இன்றி அனைவரும் கலந்து கொண்டிருந்தனர். 

இறுதியாக பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் குடிநீர் தொடர்பாகப் போராடும் அனைவராலும் இறுதிப் போராட்டம் எனக் கூறப்பட்டு பாரிய அளவில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று நல்லூர் கந்தசாமி கோவில் முன்றலில் நடாத்தப்பட்டது. இதன் போது முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பல்வேறு உறுதிமொழிகளை வழங்கியிருந்த போதிலும் அவை எவையும் நிறைவேற்றப்படவில்லை என்பது அனைவரும் அறிந்ததே. சில போராட்டங்கள் சிலரால் தமது அற்ப நலன்களுக்காகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராகவும் பாவிக்கப்பட்டதானால் பொதுமக்களும் சில வைத்தியர்களும் தொடர்ந்து போராடப் பின்னடித்தார்கள். 

போராட்டங்களின் தோல்வி

தொடர் போராட்டங்கள் தோல்வி அடைந்தமைக்கும் பொது மக்களின் பங்களிப்புக் குறைவடைந்தமைக்கும் பல்வேறு காரணங்கள் உள்ளன. நன்னீருக்காகப் போராடுபவர்கள் அனைவரும் தமிழ்த் தேசியத்திற்கு எதிரானவர்கள் என வேகமாகப் பிரச்சாரம் செய்யப்பட்டது. எதையும் சந்தேகக் கண்களுடன் நோக்கும் தமிழ் மக்களில் பலரும் இதை நம்பினார்கள். ஆரம்பத்தில் இணைந்திருந்த பெரும் புள்ளிகள் பலரும் விலகிக் கொண்டார்கள். சில வைத்தியர்கள் உட்பட சிலர் தமது தனிப்பட்ட பகை உணர்வு காரணமாகப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தினார்கள். சில வைத்திய நிபுணர்கள் இப்பிரச்சினையில் தவறிழைத்து அகப்பட்டுக் கொண்ட தமது நெருங்கிய உறவினர்களைக் காப்பதற்காக எண்ணை கலந்த நீரினை அருந்துவது அவ்வளவு பிரச்சினை இல்லை என்று கூடக் கூறித்திரிந்தார்கள். 

பாராளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதன் போது நீரிற்காகப் போராடிய பலர் தேர்தலில் சிலரை ஆதரித்தார்கள். வழக்கறிஞர்கள் பலர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரை ஆதரித்தார்கள். தூய நீருக்கான மக்கள் ஒன்றியத்தை உருவாக்கிப் போராடிய வைத்தியர் சிவசங்கர் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆசனத்தில் யாழ்ப்பாணத்தில் போட்டியிட்டார். இவ்வாறான நடவடிக்கைகள் பொய்ப் பிரச்சாரங்களை மக்கள் முன் உண்மைகளாகக் காட்டி நின்றன. இதனால் நடுநிலையான முறையில் போராடியவர்கள் மனச் சோர்வடைந்தார்கள். தண்ணீர்ப் பிரச்சினை மெல்ல மெல்ல கைவிடப்பட்டது. 

சந்திப்புகள்

தண்ணீருக்கான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருந்த சமகாலத்தில் ராஜதந்திர நகர்வுகளாகப் பல்வேறு சந்திப்புக்கள் நடாத்தப்பட்டன. முதற்கட்டமாக மாகாண விவசாய அமைச்சர் அவர்களுடனான சந்திப்புக்கள் நடாத்தப்பட்டன. இதன் தொடர்ச்சியாக மேலும் சில சந்திப்புகள் நடாத்தப்பட்டன. பல்வேறு தரப்பினராலும் கொடுக்கப்பட்ட அழுத்தங்களின் காரணமாக மாவட்ட மட்டத்தில் பல்வேறு கூட்டங்கள் ஒழுங்கு செய்ய்ப்பட்டன. இவை எவற்றிலும் எது வித முன்னேற்றங்களும் ஏற்படாத நிலையில் மாவட்ட மட்ட கூட்டங்களில் கலந்து கொண்ட, நியாயம் கேட்ட சில வைத்தியர்கள் அடுத்த கூட்டத்திற்கு வருவது தடுக்கப்பட்டது.

ஏதோ ஒரு காரணத்திற்காக மாகாண அமைச்சர் இப்பிரச்சினையை மூடி மறைப்பது தெளிவாகத் தெரிந்தது. இதனை நம்ப மற்றவர்கள் மறுத்தார்கள். இவற்றை நம்ப மறுத்த விசேட வைத்திய நிபுணர்களின் குழு ஒன்று இதன் பின்னர் விவசாய அமைச்சரைச் சந்தித்தார்கள். அவர்களுக்கு இப்பிரச்சினையை இப்படியே கைவிடும் படியும் எண்ணெய்ப் பிரச்சினையை மக்கள் காலப்போக்கில் தாமாகவே மறந்து விடுவார்கள் எனக் கூறினார் சுற்றுச் சூழுல் மற்றும் விவசாய அமைச்சர். 

இதன் பின்னர் பல்வேறு தடவைகள் மருத்துவ பீட பீடாதிபதி மற்றும் விரிவுரையாளர்கள் மற்றும் வைத்தியர்கள் முதலமைச்சர் அவர்களைச் சந்தித்து கல்ந்துரையாடினார்கள். தாம் தமிழ்த் தேசியத்திற்கு எதிரானவர்கள் அல்லர் என்பதைத் தெளிவாகத் தெரிவித்தார்கள். தண்ணீரில் எண்ணெய் கலந்தமை தொடர்பாக பல்வேறு சான்றுகளும் ஆவணங்களும் அவரிடம் கையளிக்கப்பட்டன. இதன் பின்னர் இவை அனைத்தும் உண்மை தானா என அவர் விவசாய அமைச்சரிடம் கேட்க அவர் 'இவங்கள் சும்மா' எனக் கூற எதுவித முன்னேற்றமும் இன்றி எமது சந்திப்புக்கள் நகர்ந்தன. எம்மால் தெரிவு செய்யப்பட்ட அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர் மீதிருந்த நம்பிக்கைகள் அனைத்தும் கேள்விக்குறியான போது எண்ணெய்ப் பிரச்சினையை விடவும் தமிழ் மக்களின் எதிரிகாலத்தை எண்ணி நாம் அனைவரும் மிகவும் கவலை அடைந்தோம்.

இவை தவிரவும் வழக்கறிஞர் ஒருவரின் தலைமையில் ஒரு குழுவினர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் முக்கிய அமைச்சர்களையும் சந்தித்தார்கள். இதன் போது அளிக்கப்பட்ட உறுதிமொழிகள் எவையும் இன்று வரை நிறைவேற்றப்படவில்லை என்பது பலர் அறியாத உண்மை. பல்வேறு தூதரக அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகளுடன் சந்திப்புகள் நாடாத்தப்பட்டன. சுவிஸ் மற்றும் நோர்வே பிரதிநிதிகளுக்கு தனியான ஆவணங்கள் வழங்கப்பட்டு விளக்கமளிக்கப்பட்டன. இந்திய உயர்ஸ்தானிக அதிகாரிக்கு தனிப்பட்ட முறையில் விளக்கம் அளிக்கப்;பட்டது. ஒரு குழுவினர் யாழ்ப்;பாணத்திற்கு வருகைதந்திருந்த அமெரிக்க அரசின் விசேட பிரதிநிதிகளைச் சந்தித்து இப்பிரச்சினையின் பாரதூரத்தினை விளக்கிய போதும் அவர்கள் அதனைப் பெரிதாக எடுக்கவில்லை. அன்றைய சம்பாசணையின் ஒரு கட்டத்தில் குறித்த மின்னிலையத்தில் சீனர்கள் ஒரு வருட காலம் பணியாற்றினார்கள் என்று கூறியவுடன் குறிப்பிட்ட அதிகாரி நுனிக் கதிரைக்கு வந்து அவதானமாக உரையாடலைச் செவிமடுத்ததுடன் குறிப்புகளும் எடுத்துக் கொண்டார். அப்போது தான் விளங்கியது எமது பிரச்சினைகளை நாம் தான் தீர்க்க வேண்டும் என்று. 

பிரச்சாரப் பணிகள்

பல்வேறு போராட்டங்களின் போதும் பல்வேறு தரப்பினரினதும் போராட்டங்கள் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் பிரச்சாரப்படுத்தப்பட்டன. இதற்காக அதிகளவில் சமூக வதை;தளங்களும் இணையத்தளங்களும் உபயோகப் படுத்தப்பட்டன. உள்ளுர் பத்திரிகைகள் குறிப்பிட்ட அமைச்சர்களின் அழுத்தம் காரணமாக இது தொடர்பான செய்திகளைப் பிரசுரம் செய்வதற்குத் தயங்கின. பல்வேறு துண்டு;ப் பிரசுரங்கள், பொது மக்களை அறிவூட்டும் செய்திகள் கிராம மட்டங்களில் முன்னெடுக்கப்பட்டன.

வெளிநாடுகளில் இருந்து இயங்கும் பல்வேறு இணையத்தளங்கள் தார்மீகப் பொறுப்புடன் இச்செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள். கனேடிய வானொலி, அவுஸ்திரேலிய வானொலி போன்ற செய்திச்சேவைகள் இது தொடர்பாக விசேட நிகழ்ச்சிகளையே நடாத்தினார்கள். இவை தவிரவும் இலங்கையின் ஆங்கிலப் பத்திரிகைகளும் லங்காதீப போன்ற சிங்களப் பத்திரிகைகளும் இச்செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பிரசுரித்தன. உள்ளுர்ப் பத்திரிகையில் தினக்குரல் பத்திரிகையானது இது தொடர்பான உண்மை விடயங்கள் மக்களைச் சென்றடைவதற்கு அழுத்தங்களின் மத்தியிலும் தன்னாலான முயற்சிகளைச் செய்தது.

அரசியல் பின்னணி

குறிப்பிட்ட இப்பிரச்சினையானது மகிந்த ராஜபக்ஷ அவர்கள் ஆட்சியில் இருந்த போது முதலில் முறையிடப்பட்டதுடன் மல்லாகம் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கும் இக்கால கட்டத்திலேயே நடாத்தப்பட்டது. குறிப்பிட்ட அனல் மின் நிலையத்தினை உருவாக்குவதில் முன்னைய ஆட்சியாளர்களின் நேரடிப் பங்கு இருந்தமையால் மக்கள் இது பற்றிப் பேசுவதற்கு அஞ்சினார்கள். 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போதிலும் குறிப்பிட்ட இப்பிரச்சினை தொடர்பாக எந்த அரசும் பெரிதாக அக்கறை காட்டவில்லை.

தற்போதைய பிரதம மந்திரி திரு. ரணில் விக்கிரமசிங்க அவர்கள் இது தொடர்பாக விசேட கவனம் எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்த போதிலும் இது வரை எந்தவித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. ஜே.வி.பி கட்சியினர் இது தொடர்பாக நாடாளுமன்றில் விசேட விவாதங்களை ஆரம்பிப்பதாக தகவல்களைப் பெற்ற போதிலும் இது வரை அக்கறை காட்டவில்லை. அதிரடியாக ரவூப் ஹக்கீம் அவர்கள் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனக் கூறியிருந்தார்.

ஆனால் இது சிறுபான்மையான தமிழர்களின் பிரச்சினை என்ற காரணத்தினாலோ என்னவோ எந்தவொரு அரசியல் கட்சியினராலும் ஆக்கபூர்வமான எந்தவொரு நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். இதுவே இப்பிரச்சினையை மூடிமறைக்க நினைத்த சிலரிற்கு வாய்ப்பாக அமைந்தது. 

நீதித்துறையின் பங்கு

நீதித் துறையானது இவ்விடயத்தில் மக்களின் பிரச்சினையைக் கருத்தில் கொண்டு சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வந்துள்ளது. கடமையைச் சரிவரச் செய்யாத அதிகாரிகள் மீது இன்னும் சில வழக்குகள் நிலுவையில் உள்ளன. முன்னைய ஆட்சிக் காலத்தில் நீதித் துறையினரை இந்த் விடயத்தியல் தலையிடுவதை நிறுத்துமாறு கூறப்பட்டதாகவும் இதன் உச்சக்கட்டமாக நீதித்துறையின் உயர்பீடத்திற்கு பாதுகாப்புத் தலைமையகத்தின் உயர் பீடத்தில் இருந்து நேரடியாகவே மிரட்டல் விடப்பட்டதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் உள்ளன. 

திணைக்களங்களின் பங்கு

இவ்வாறான இக்கட்டான கால கட்டத்தில் மக்கள் நலன் காக்க வேண்டிய திணைக்களங்கள் என்ன என்ன செய்தார்கள் என்று கூறினால் வியப்பும் நகைப்பும் ஏற்படுவதைத் தடுக்க முடியாது. குறிப்பிட்ட பிரதேசத்தைச் சார்ந்த பிரதேச சபைகள் இவ்விடயத்தை மூடி மறைப்பதில் முன்னின்று உழைத்தார்கள். குறிப்பாக மக்களுக்கு நீர்விநியோகத்தில் குளறுபடி செய்தார்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டு வலி வடக்கு பிரதேசசபைத் தலைவர் நீதிமன்றினால் அழைக்கப்பட்டு எச்சரிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

சுகாதாரத் திணைக்கள அதிகாரிகள் இவ்விடயம் பெரிதாகாமல் அவதானமாகப் பார்த்துக்கொண்டார்கள். மக்களுக்கு சுகாதாரக் கல்வி அறிவூட்டல் நிகழ்ச்சிகள் யாவும் அனுமதி பெறப்பட்டே நடாத்தப்பட வேண்டும் என்ற போர்வையில் ஒரு சுகாதார அறிவூட்டல் நிகழ்ச்சியாவது இன்று வரை நடாத்தப்படுவது தடுக்கப்பட்டது. அமைச்சரின் கோபத்திற்கு ஆழாக நேரிடலாம் என்று கீழிருந்த அதிகாரிகள் அனைவரும் பக்குவமாகச் செயற்பட்டார்கள். தமது பதவிகளைத் தக்கவைத்துக் கொண்டார்கள். சில சுகாதார வைத்திய அதிகாரிகளை இவ்விடயத்தில் கட்டுப்படுத்தத் தவறியதாக அக்காலத்தில் பணியாற்றிய பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் முதலமைச்சரின் அனுமதியுடன் உடனடியாக மாற்றப்பட்டு டம்மியாக ஒருவர் அமர்த்தப்பட்டார். 

தேசிய நீர்வழங்கல் அதிகார சபையினர் தம்மிடம் நீர் பரிசோதனை செய்ய வருபவர்களிடம் மிக நீண்ட காலமாக இரசாயணப் பதார்த்தங்கள் முடிவடைந்து விட்டன எனக் கூறித் திருப்பி அனுப்பினார்கள். சில முக்கிய பிரதேசங்களில் வெற்றுக் கண்களுக்கு எண்ணெய் தெரியும் நிலையில் பரிசோதனை செய்து நீரில் எண்ணெய் சிறிதளவேனும் இல்லை என அறிக்கை வழங்கினார்கள். 

மாகாணக் கல்வி அமைச்சு இவ்விடயம் தொடர்பாக ஆர்ப்பாட்டங்கள் செய்வது அனைத்துப் பாடசாலைகளிலும் தடைசெய்யப்பட்டுள்ளது என சுற்று நிருபம் அனுப்பினார்கள். பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட பாடசாலை அதிபர்கள் அழைக்கப்பட்டுக் கண்டிக்கப்பட்டார்கள். பாடசாலைகளுக்கு வழங்கப்பட்ட நீர்விநியோகத்தில் பல்வேறு குழறுபடிகள் காணப்பட்டன. அவற்றைக் கண்டும் காணாமல் விட்டார்கள் உயர் அதிகாரிகள். 

சுற்றாடல் அதிகார சபை அதிகாரியும் அனர்த்த முகாமைத்துவ அதிகாரியும் எதிர் மறையான கருத்துக்களைத் தெரிவித்து பிரச்சாரங்களில் ஈடுபட்டார்கள். நீதி மன்றில் விசாரிக்கப்பட்ட சுற்றாடல் அதிகார சபை அதிகாரி எவ்வாறு குறித்த மின்னிலையத்திற்கு குடிமனைகளின் நடுவில் அனுமதி வழங்கப்பட்டது என்ற விடயத்திற்கு விடை இல்லாமல் இன்று வரை வழக்கு நடைபெற்று வருகின்றது.

முதலமைச்சரின் பங்கு

தமிழ் மக்களின் பூரண ஆதரவோடு முதலமைச்சராக்கப்பட்டவர் இவ்விடயத்தில் நடந்து கொண்ட விதம் அனைவரையும் கவலையடைய வைத்துள்ளது. இவ்விடயத்தில் இன்று வரை அவர் அருகிலுள்ளவர்களின் பொய்யான தகவல்களை நம்புகின்றார் என்பதுவே நிஜம். பல்வேறு தடவைகள் சந்தித்து விளக்கமளித்த பின்னரும் இறுதியான நல்லூர் முன்றல் உண்ணாவிரதப் போராட்டத்தின் போது இவ்வாறு அதிகளவில் எண்ணெய் இருப்பதான முடிவுகளை ஏன் என்னிடம் கூறவில்லை எனக் கேட்டு அனைவரையும் சங்கடத்தில் ஆழ்த்தினார்.

முதலமைச்சர் நேரடியாக இவ்விடயத்தில் தலையிட்டு, பக்கச் சார்பற்ற நிபுணர் குழு ஒன்றின் மூலமும் மக்களின் நலன் காக்கும் அமைப்புக்கள் அனைத்தையும் ஒன்றிணைத்து மிகுந்த வெளிப்படைத் தன்மையுடன் இலகுவாக இப்பிரச்சினையைத் தீர்த்து வைத்திருக்க முடியும். பணப்பரிமாற்றம் நடைபெற்றமையை மிகத் தெளிவாக அவரிற்கு எடுத்துக் கூறியதன் பின்னரும் இவ்விடயத்தைக் கண்டும் காணாமல் இருப்பதானது எமக்கு அவர் மீதிருந்த மதிப்பையும் மரியாதையையும் கேள்விக்குறியாக்கி விட்டது. 

உளவுத்துறைகளின் பங்கு

இவ்விடயத்தில் பல்வேறு நாடுகளின் உளவுத்துறைகள் அக்கறை காட்டியமை பல காலத்தின் பின்னரே அறியக்கூடியதாவிருந்தது. வழக்குத் தொடுநர்களும் சாட்சிகளும் அரச புலனாய்வாளர்களால் வீடுகளில் வைத்து மிரட்டப்பட்டார்கள். இந்தியத் தரப்பினர் ஆரம்பத்தில் நியாயமான அக்கறை கொண்டிருந்தாலும் பின்னைய நாட்களில் மாகாண மட்ட எம்மவர் சிலரின் அறிவுறுத்தலின் பின்னர் கண்டும் காணாமல் இருந்தார்களோ தெரியவில்லை. அமெரிக்கத் தரப்பினரால் வழக்கம் போலவே இரகசியக் கேபிள் என்ற போர்வையில் தகவல்கள் திரட்டப்பட்டு அனுப்பப்பட்டன.

இந்த விடயத்தினால் வடக்கு மாகாண சபைக்கு எதிரான மக்கள் அலைகள் வருவதை இந்தக் காலகட்டத்தில் அவர்கள் முற்றாக விரும்பவில்லை. அனல் மின்னிலையம் ஆரம்பிக்கப்பட்ட காலப்பகுதியில் ஏறத்தாழ ஒரு வருட காலத்திற்கு சீனர்கள் அங்கு தங்கி இருந்ததாகவும் அயல் கிராமங்களில் பாம்புகளை அவர்கள் நல்ல விலை கொடுத்து வாங்கியதாகவும் பொதுமக்கள் சில கதைகளைச் சொல்லுவார்கள். இது தவிரவும் அக்குறிப்பிட்ட காலப் பகுதிகளில் அங்கு அனல் மின் உற்பத்தி தவிர்ந்த வேறு சில நடவடிக்கைகளும் நடைபெற்றிருக்கலாம் என்ற ஊகக் கதைகளும் அப்பகுதி மக்களால் தெரிவிக்கப்படுவதுண்டு. எவ்வாறெனினும் பல்வேறு நாடுகள் தமது நலனுக்காகச் சிந்திக்கையில் நாம் எமது பிரதேசத்திற்காகச் சிந்திக்காமல் இருந்தது வெட்கக் கேடான விடயமாகும். 

புலம் பெயர் தமிழர்களின் பங்கு

பெரும்பாலான புலம்பெயர் தமிழர்கள் தமது உறவுகளுக்கு இழைக்கப்டும் அநீதி கண்டு கவலையடைந்தார்கள். சில ஐரோப்பிய நாடுகளில் இப்பிரச்சினை தொடர்பான அடையாளப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அவுஸ்திரேலியா போன்ற சில நாடுகளில் உள்ள சிலர் மாகாணத்தின் சில அமைச்சர்களின் பொய்ப் பிரச்சாரத்தினை நம்பி போராட்டத்தினைக் கொச்சைப்படுத்தினார்கள். விடுமுறை காலத்தில் யாழ்ப்பாணம் வந்த சிலர் தமது வீடுகளையும் பார்வையிட்டு உறவினர்களையும் பார்வையிட்டு விட்டு தண்ணீர்ப்பிரச்சினைக்காக வந்ததாகக் கதைவிட்டார்கள். இவர்கள் சிலரால் மிகச் சில டொலர் பணத்திற்கு வாங்கப்பட்ட Frog 4000 எனும் சிறிய ரக நடமாடும் இயந்திரம் மூலமே தற்போதைய பரிசோதனைகள் யாவும் நடாத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

பணப்பரிமாற்றமும் மிரட்டல்களும்

இவ் அனல் மின்னிலையம் குறிப்பிட்ட இடத்தில் அமைப்பதற்கான அனுமதிக்கான சிபாரிசினை தமிழ் கூட்டமைப்பின் மூத்த உறுப்பினர் ஒருவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் பெற்றுக் கொடுத்ததாகவும் இத்தகவல் பின்னர் விவசாய அமைச்சருடனான சந்திப்பின் போது ஒரு கட்டத்தில் அவராலேயே ஏற்றுக் கொள்ளப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இது தவிரவும் பல்வேறு தரிப்பினர்கள் பணத்தினால் வாங்கப்பட்டிருக்கலாம் என்பது உறுதிசெய்யப்படாத தகவல்கள். 

இவ்விடயம் தொடர்பான முக்கிய வழக்கின் விசாரணையின் முதல் நாள் இரவு குறிப்பிட்ட வைத்தியரின் வீட்டில் திருடன் என்ற போர்வையில் ஒருவர் நுழைந்ததும் பின்னர் எதுவுமே திருடப்படாமையும் மறைமுகமான மிரட்டலாகக் கருத இடமுண்டு. இது தவிரவும் தண்ணீர்ப்பிரச்சினை தொடர்பாக தொடர்ச்சியான செய்திகளை வெளியிட்டு வந்த கொழும்பில் இருந்து வெளிவரும் பிரபல ஆங்கிலப் பத்திரிகையின் நிருபர் மிகக் கடுமையானமுறையில் அவரது அலுவலத்தில் வைத்தே மிரட்டப்பட்டார் என்பதுவும் குறிப்பிடத்தக்கது. 

நிபுணர்கள் குழு

பல்வேறு போராட்டங்களினால் ஏற்பட்ட அழுத்தங்களினால் அவசர அவசரமாக நிபுணர்கள் குழுவினர் அமைக்கப்பட்டார்கள். இதில் உள்ள வேடிக்கை என்னவென்றால் நிலத்தடி நீர் தொடர்பாக நிபுணத்துவம் உள்ள எவருமே இக்குழுவில் இருக்கவில்லை. இவர்கள் பக்கச்சார்பான முறையில் மாகாண விவசாய அமைச்சர் அவர்களால் அவருடன் நன்கு பரீடசயமானவர்கள் மட்டுமே தெரிவுசெய்யப்பட்டார்கள். மாதிரிகள் யாவும் நன்கு திட்டமிடப்பட்டு எண்ணெய் ஆகக் குறைந்தளவு பரவலடைந்ததாகக் காணப்படும் இடங்களில் இருந்தே தெரிவுசெய்யப்பட்டன. மற்றும் இவர்கள் மாதிரிகள் தெரிவு செய்ததிலோ, முடிவுகள் வெளியிட்டதிலோ எந்தவொரு வெளிப்படைத்தன்மையும் இருக்கவில்லை.

இவர்களால் குசழப 4000 எனும் தரக்குறைவான, சிறிய ரக இயந்திரம் பாவிக்கப்பட்டது. இவர்களால் ராடார் ஒன்று பாவிக்கப்பட்ட போதிலும் அது முழுமையான ஆழத்திற்கு ஊடுருவமுடியாத வகையானது என்பது அவர்களாலேயே ஒப்புக்கொள்ளப்பட்டது. ராடார் பதிவுகளில் தெளிவான எண்ணெய்ப்படலங்கள் தெரிவதாக ஆரம்பத்தில் பேசப்பட்டாலும் தற்போது அது தொடர்பாக எந்த விடயமும் தெரிவிக்கப்படவில்லை. இது தவிரவும் இக்குழுவில் உள்ள சிலருக்கு ஏற்கனவே நீர் விநியோகம், நன்னீர் உற்பத்தித் திட்டம் போன்றவற்றில் அதிக அக்கறை இருப்பதனால் இம்முடிவுகளை நடுநிலைமையான முடிவுகளாக எடுக்க முடியாது. முடிவாக நிபுணர் குழுவில் நிபுணர்கள் இல்லை என்பதுவும் இது பொது மக்களை ஏமாற்றும் ஒரு பொய் நடவடிக்கையே என்பதுவும் தெளிவாகத் தெரிகின்றது. நிபுணர் குழுவில் அங்கம் வகிக்கும் சிலருடன் தனிப்பட்ட முறையில் உரையாடியதில் குறிப்பிட்ட மின்னிலையத்தினுள் மிக ஆழமான, கழிவு எண்ணெய் உட்செலுத்துவதற்கான துளைகள் காணப்பட்டதாகவும் மேலும் அந்நிறுவனத்திடம் மின்னுற்பத்தியின் போது உருவாகிய பல்லாயிரக்கணக்கான லீற்றர் கழிவு எண்ணெயை கழிவகற்றுவதற்கான பொறிமுறை எதுவும் காணப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. 

நிபுணர் குழுவினர் எண்ணெய் மாசு இல்லை என்கிறார்கள். ஏற்கனவே நடாத்தப்பட்ட முறையான ஆய்வுகளில் அதிகளவிலான எண்ணெய் கலந்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது தவிரவும் அனைவராலும் வெற்றுக் கண்களால் கண்ட எண்ணெய், கைகளில் பிசு பிசுத்த எண்ணெய் என்பவற்றிற்கான விளக்கங்களைத் தெளிவாகத் தெரிவிக்காமல் அவர்களின் முடிவுகளை மக்கள் ஏற்கவேண்டும் என்பது நியாயமற்ற ஒரு விடயமாகும். 

முடிவாக இந்த விரிவான கட்டுரை மூலம் குடாநாட்டின் நீர்ப் பிரச்சினை தொடர்பான வெளிவராத சில உண்மைகளை வெளிக்கொணர முயற்சி செய்கின்றோம். தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்ற, சுயமாக சிந்தனை செய்யும் சக்தியற்ற எமது மக்களை நினைத்து மனம் வெதும்பியபடி...... 

- வைத்தியர். க. செந்தூரன்-


விவசாய அமைச்சரின் பதில்-

விவசாய அமைச்சர் அவர்களை தொடர்புகொண்டு மேற்படி விடயம் தொடர்பாக வினவியபோது இப்பதிவு ஆதாரமற்ற விடயங்களை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டுள்ளது. அமைச்சு பதவிகளுக்காக உண்மைகளை மறைத்து தாம் ஒருபோதும் அரசியல் செய்யப்போவதில்லை என்றும் ஏதோ சிலர் வடமாகாண முதலமைச்சர் மற்றும் அமைச்சுக்கள்மீது எதிரான பிரச்சாரங்களை செய்துவருவதாகவும் தெரிவித்திருந்தார். 

ஆசிரியர் கருத்து-

இந்த கட்டுரை மேற்குறித்த நபரால் எமக்கு பிரத்தியேகமாக அனுப்பப்பட்டதென்பதோடு இதில் தெரிவிக்கப்பட்டிருக்கும் கருத்துக்களை முழுமையாக எம்மால் உடனடியாக சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பு வாதங்களையும் இணைக்கமுடியவில்லை என்பதோடு தொடர்ந்து சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் அவர்களின் கருத்துக்களும் இணைப்பதற்கு முயன்று வருகின்றோம் என்பதோடு அடுத்தவாரம் இதுதொடர்பான சம்பந்தப்பட்ட தரப்புக்களின் கருத்துக்களை உள்ளடக்கிய ஆதாரங்களுடனான விரிவான பார்வை ஒன்று வாசகர்களை நாடி வரும் என்பதை அன்போடு அறியத்தருவதோடு இதுதொடர்பான சகல தரப்பினரது கருத்துக்கழையும் வரவேற்று அவைகளை எமது வாசகர்களுக்கு கொண்டு செல்வதற்கு நாம் மிக ஆவலாக உள்ளோம் என்பதையும் அறியத்தருவதோடு உங்கள் கருத்துக்களை அனுப்பிவைக்குமாறும் கேட்டுக்கொள்ளுகின்றோம்.