இழப்பீட்டுத் தொகை, மரணச்சான்றிதழை பெற்றாலும் விசாரணைகள் தொடரும் - பரணகம அறிவிப்பு
காணாமல்போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு வழங்கும் இழப்பீட்டுத் தொகை மற்றும் மரணசான்றிதழ் ஆகியவற்றை பெற்றுக்கொண்டாலும் காணாமல்போனோர் தொடர்பான விசாரணைகள் நிறுத்தப்படமாட்டாது. விசாரணைகள் தொடர்ந்தும் நடத்தப்படும் என ஆணைக்குழுவின் தலைவர் மெக் ஷ்வெல் பரணகம தெரிவித்தார்.
ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வுகள் நேற்றைய தினம் பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றபோது சாட்சியாளர் முன்னிலையில் கருத்து வெளியிடுகையிலேயே மக்ஸ்வெல்பரணகம மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது சாட்சியமளிப்பதற்காக கரவெட்டி மற்றும் மருதங்கேணி பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.
அமர்வில் சாட்சியமளித்த பலர் தமது உறவுகள் காணாமல்போய் நீண்டகாலமாகின்றது அவர்களுக்கு என்ன நடந்தது என்பது குறித்து எமக்கு கூறுங்கள் அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா இல்லையா என்பது கூட தெரியாது. நாம் அனைத்து இடங்களிலும் தேடி அலைந்து வருகின்றோம். எமது குடும்பங்களில் பொறுப்புக்களைச் சுமந்த அவர்கள் இன்று எம்முடன் இல்லாதிருப்பதன் காரணமாக நாம் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்து வருகின்றோம். குறிப்பாக அன்றாட வாழ்க்கையை கொண்டுநடத்த முடியாது வறுமையான நிலைமைக்குள் தள்ளப்பட்டுள்ளோம். என பலர் தமது சாட்சியங்களில் குறிப்பிட்டனர்.
இதன்போது ஆணைக்குழுவின் தலைவர் நீங்கள் இழப்பீட்டுத் தொகையை எதிர்பார்க்கிறீர்களா என கேள்வி எழுப்பியதோடு மரண சான்றிதழைப் பெறுமிடத்து உங்களுக்கான இழப்பீட்டுத் தொகை வழங்குவதற்கு பரிந்துரைகளைச் செய்வோம் என குறிப்பிட்டார். அத்துடன் இது தொடர்பாக பொறுமையாக ஆராய்ந்து தமக்கு அறிவிக்குமாறும் பரணகம கூறினார்.
இதன்போது எமது உறவுகள் இன்றும் உயிருடன் இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் நாம் வாழ்ந்து வருகின்றோம். மரணச்சான்றிதழைப் பெற்றால் அவர்கள் உயிருடன் இல்லை என்றாகிவிடும். இதனால் அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை எங்களால் அறியமுடியாது போய்விடும். வறுமையில் வாடினாலும் எமக்கு எமது உறவுகளே முக்கியம் என உறுதிபட காணாமல் போனோரின் உறவுகள் ஆணையாளரிடத்தில் தெரிவித்தனர்.
இதனையடுத்து நீங்கள் அவ்வாறு அச்சம் கொள்ளத் தேவையில்லை. மரணச்சான்றிதழைப் பெற்று இழப்பீட்டுத் தொகையை ஏற்றுக்கொண்டாலும் உங்களது உறவுகள் உயிருடன் இருக்கிறார்கள் என்று நம்பிக்கை கொண்டிருப்பீர்களாயின் நாம் அவர்கள் தொடர்பில் கவனம் செலுத்தி எமது விசேட விசாரணைக்குழு ஊடாக விசாரணைகளை தொடர்ந்தும் முன்னெடுப்போம் என்றார்.