இலங்கை இராணுவத்துக்கு உதவி – பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு
போர்க்குற்றம்சாட்டப்பட்டுள்ள இலங்கை இராணுவத்தை மறுசீரமைப்பதற்கு பிரித்தானிய அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதற்கு, அந்த நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பாக தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழு, பிரித்தானிய வெளிவிவகாரப் பணியக மற்றும் கொமன்வெல்த் விவகார இணை அமைச்சர் ஹியூகோ ஸ்வயருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவின் மூத்த உதவித் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் சியோபெய்ன் மக்டொனா எழுதியுள்ள இந்தக் கடிதத்தில், இலங்கைக்கு 6.6 பில்லியன் பவுண்டுகளை இலங்கையில் எப்படிச் செலவிட பிரித்தானிய அரசாங்கம் வழங்கியுள்ளது என்று விளக்கம் கோரியுள்ளார்.
போர்க்குற்றம்சாட்டப்பட்டுள்ள இலங்கை இராணுவத்தை மறசீரமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறித்து ஆழ்ந்த கவலையையும் அவர் அந்தக் கடிதத்தில் வெளியிட்டுள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் முழுமையாக நடைமுறைப்படுத்தத் தவறியுள்ளது குறித்தும், தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழு அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
இந்தக் கடிதத்தில், பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களாக ஜோன் ரயன், ஜோன் மான், ஸ்டீபன் பவுண்ட், ஸ்டீவ் ரீட், வெஸ் ஸ்றீட்டிங், ஸ்டீபன் ரிம்ஸ் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.