இன்று சர்வதேச எயிட்ஸ் தினம் - யாழில் 14 பேர் பாதிப்பு
உலகளாவிய ரீதியில் இன்று (01) சர்வதேச எயிட்ஸ் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. உலக எயிட்ஸ் தினம் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் முதலாம் திகதி கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.
ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு கருப்பொருளின் அடிப்படையில் நிகழ்வுகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.
அவ்வகையில் இம்முறைக்கான கருப்பொருளாக "செயற்பாடுகளுக்கான நேரம் தற்பொழுது ஆரம்பம்" (The Time to Act Is Now) அமுல்படுத்தப்பட்டுள்ளது. எயிட்ஸ் நோய் மற்றும் அதன் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டே இந்நாள் உலகளாவிய ரீதியில் அனைவராலும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
எயிட்ஸ் தினம் பற்றிய எண்ணக்கரு முதலாவதாக 1988 ஆம் ஆண்டு நடைபெற்ற, எயிட்ஸ் பற்றிய உலக சுகாதார அமைச்சர் மாநாட்டில் உருவானது.
அதன் பிறகு அரசுகளும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இந்நாளை உலகம் முழுவதும் நடைமுறைப்படுத்தி வருகின்றன.
Acquired Immune Deficiency Syndrome என்ற சொற்றொடரின் சுருக்கமே AIDS – எயிட்ஸ் என்பதாகும். அதாவது பெறப்பட்ட நோய்த் தடுப்பாற்றல் குறைபாடுகளின் நோய்க்கூட்டறிகுறி அல்லது பெறப்பட்ட மனித நோய் எதிர்ப்புத் திறன் குறைபாட்டு நோய்க்கூட்டறி குறி என்பது கருத்தாகும்.
மேலும் விரிவாகச் சொல்வதென்றால் எமது உடலில் தொற்றுகின்ற நோய்க் கிருமிகளை எதிர்த்துப் போராடி அக் கிருமிகளை அழித்து அல்லது கட்டுப்படுத்தி நோய்களில் இருந்து எமது உடலை பாதுகாப்பதற்காகப் போராடுகின்ற அமைப்பு நிர்ப்பீடணம் அல்லது நோய்த் தடுப்பாற்றல் நோய் எதிர்ப்பு சக்தி என அழைக்கப்படுகிறது.
இந்த சிறப்பு பாதுகாப்புக்குரிய அமைப்புக்கள் – கலங்கள் அழிக்கப்படுவதன் விளைவே எயிட்ஸ் நோய் நிலைமை ஆகும். எனவே இது ஒரு தனி நோய் அல்ல. ஆனால் தடிமன் போன்ற சாதாரண தொற்று நோய் ஒன்றின் மூலமே மரணம் சம்பவிக்கலாம்.
காரணம் அந்த நோய்க் கிருமியை எதிர்த்து போராடக் கூடிய ஆற்றலை உடல் இழந்துள்ளமையாகும். HIV எனப்படும் வைரசு வகையைச் சேர்ந்த நுண்ணங்கியினால் – நோய்க் கிருமியினால் இது எற்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதேவேளை, 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் 14 பேர் எய்ட்ஸ் நோய்க்குள்ளாக்கப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை எய்ட்ஸ் நோய்ச் கிசிச்சைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில், எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் நோய்க்குள்ளானவர்கள் என கடந்த வருடம் 13 பேர் இணங்காணப்பட்டுள்ளதாகவும், 2015ஆம் ஆண்டு இதுவரையில் 01 இணங்காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
22 வயதிலிருந்து 40 வயதுக்குட்பட்டவர்களே எய்ட்ஸ் மற்றும் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளாக்கப்பட்டுள்ளதாகவும், 2 மாதத்திற்குள் வைத்தியசாலையில் எச்.ஐ.வி பரிசோதனை மேற்கொண்டால், சிகிச்சையின் மூலம் கட்டுப்படுத்திக் கொள்ள முடியுமென்றும் தெரிவித்தனர்.
பலருக்கு எச்.ஐ.வி தொற்று இருக்கலாம் என சந்தேகம் இருப்பதாகவும், உரியவர்கள் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளாக்கப்பட்டுள்ளார்கள் என சந்தேகம் இருந்தால், யாழ். போதனா வைத்தியசாலை 33 ஆம் இலக்க அறையில் பரிசோதனை மேற்கொள்ள முடியுமென்றும், பரிசோதனை மேற்கொள்பவர்களின் விபரங்கள் மற்றவர்களுக்கு தெரியப்படுத்தப்பட மாட்டாது என்றும் பூரண நம்பகத் தன்மையுடன் விபரங்கள் பேணப்படுமென்றும் யாழ். போதனா வைத்தியசாலை எய்ட்ஸ் நோய்ச் கிசிச்சைப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.