முற்றுகிறது முறுகல் – சிறப்புத் தூதுவரை கொழும்புக்கு அனுப்புகிறது இந்தியா
பாகிஸ்தானிடம் இருந்து போர் விமானங்களைக் கொள்வனவு செய்ய இலங்கை திட்டமிட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் இலங்கை பயணத்துக்கு முன்னதாக, சிறப்புத் தூதுவர் ஒருவரை கொழும்புக்கு அனுப்பி வைக்க இந்தியா திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று வெளியிட்டுள்ள தகவல்கள் வருமாறு-பாகிஸ்தானிடம் இருந்து ஜேஎவ்-17 ரகத்தைச் சேர்ந்த 10 போர் விமானங்களை வாங்கும் இலங்கை அரசாங்கத்தின் திட்டத்துக்கு இந்தியா எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, இந்தியாவின் கரிசனையை, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், ஏற்கனவே இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு தனிப்பட்ட முறையில் தொலைபேசி மூலம் அறிவித்திருந்தார்.
இந்தநிலையில், கொழும்புக்கான இந்தியத் தூதுவர் வை.கே. சின்ஹா, இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவைச் சந்தித்து, இந்த விமானக் கொள்வனவு தொடர்பான இந்தியாவின் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, வரும் ஜனவரி மாதம் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளும் போது, இந்தப் போர் விமானக் கொள்வனவு உடன்பாட்டை அறிவிக்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது. இந்தநிலையில்,இந்த விவகாரம் தொடர்பாக பேச்சு நடத்த சிறப்புத் தூதுவர் ஒருவரை கொழும்புக்கு அனுப்ப புதுடெல்லி திட்டமிட்டுள்ளது.
வரும், அடுத்த ஆண்டு துவக்கத்தில் புதுடெல்லியின் சிறப்புத் தூதுவர் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னர் முக்கியமான விவகாரங்கள் குறித்துப் பேசுவதற்காக, சிறப்புத் தூதுவர்களை இலங்கைக்கு இந்தியா அனுப்பி வைத்திருக்கிறது.
2009 ஆம் ஆண்டு மே மாதம் இலங்கையில் போர் முடிவுக்கு வந்த பின்னர், இலங்கைக்கான சிறப்புத் தூதுவராக அப்போதைய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனனை, நியமித்திருந்தார் அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங்.
அவர், போருக்குப் பிந்திய மீள்குடியமர்வு, புனர்வாழ்வு தொடர்பாக இலங்கைஅரசாங்கத்துடன் பேச்சுக்களை நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.