முஜிபுர் ரஹ்மானுக்கு மரண அச்சுறுத்தல் - விசாரணைக்கு உத்தரவிட்டார் சபாநாயகர்
ரக்பி வீரர் வசீம் தாஜுடீன் கொலை தொடர்பில் கருத்து வெளியிட்ட தனக்கு சில நாடாளுமன்ற உறுப்பினர்களால் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் விசாரணை நடத்தி தனக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்குமாறும் அவர் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் நேற்று சனிக்கிழமை நாடாளுமன்றில் உரையாற்றுகையில் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நடைபெறும் விவாதத்தில் பங்கேற்று கருத்து வெளியிடும் சுதந்திரம் உறுப்பினர் ஒருவருக்கு இருப்பதாகவும், அது அவரது சிறப்புரிமை எனவும் முஜிபுர் ரஹ்மான் சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்தவகையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற வெளிவிவவகார அமைச்சின் குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய தான் தாஜுடீன் படுகொலை தொடர்பில் கருத்து வெளியிடுகையில் தன்மீது தாக்குதல் நடத்துவதற்கு முயற்சிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, சனத் நிஷாந்த, மற்றும் இந்திக அனுருத்த ஆகியோரே இவ்வாறு தாக்க முற்பட்டதாகவும், பேராசிரியர் மாரசிங்க, நவவி ஆகியோர் இதற்கு சாட்சிகளாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் மரண அச்சுறுத்தலும் விடுக்கப்பட்டமையானது தனது சிறப்புரிமையை மீறும் செயல் எனவும், இதுபற்றி விசாரணை நடத்தி நீதியை பெற்றுத்தருமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதேவேளை, இந்த முறைப்பாட்டை சிறப்புரிமைக் குழுவுக்கு தான் ஆற்றுப்படுத்துவதாகவும், விசாரணை அறிக்கையைச் குறித்த குழு 2016 ஜனவரி முற்பகுதிக்குள் வெளியிட வேண்டுமெனவும் சபாநாயகர் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.