மாற்றுத் தலைமை குறித்து இந்தியாவும் பதறுகிறது
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றீடாக புதிய ஒரு கட்சி உருவெடுத்து விடுமோ என்ற ஏக்கம் இந் தியாவையும் தொட்டு விட்டமை தெரிகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை என்பது இந்தியாவின் கட்டுப்பாட்டுடன் இயங்கி வருகின் றமை தெரிந்ததே.
இனப்பிரச்சினைக்கான தீர்வில் இந்தியாவின் பங்களிப்பில்லாமல் எதுவும் செய்ய முடியாதென்ற முடிவில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் மிகவும் உறுதியாக உள்ளார்.
அதாவது, இந்தியாவை மீறி எந்த நாட்டாலும் இலங்கைத் தமிழர்களுக்கு உதவி செய்துவிட முடியாது என்பதில் இரா.சம்பந்தர் கொண்டுள்ள உறுதிப்பாட்டில் நியாயம் இல்லாமலும் இல்லை. அதற்காக எங்களின் பிரச்சினைக்கான தீர்வு என்பது இந்தியா சொல்வதாகவே இருக்கும் என்ற கருத்தை எச் சந்தர்ப்பத்திலும் ஏற்றுவிட முடியாது.
ஆக, எங்களுக்கான தீர்வு எது என்பதை நாமே தீர்மானித்துக் கொள்ள வேண்டும். இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு இந்தியாவின் உதவியைப் பெற்றுக் கொள்வது பொருத்துடையது. அதேசமயம் இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது நடைமுறைக்குச் சாத்தியமாக அமைவது அவசியம் என்பதையும் எவரும் மறந்துவிடலாகாது. இந்நிலையில் தமிழர்களின் உரிமை என்ற விடயத்தில் இந்தியாவின் வகிபங்கு தமிழ் மக்களுக்கு சாதகமாக அமையாது என்று வாதிடுவோரும் உளர்.
எதுவாயினும் இந்தியாவின் ஒத்துழைப்புடனும் ஆசியுடனும் இனப்பிரச்சினைக்கான தீர்வை அடைய நினைப்பதே ஒரேவழி என்ற நிலைமை தவிர்க்க முடியாததாகி உள்ளது.
அதற்காக எங்களுக்கு எந்த வகையிலும் உதவாத தீர்வுகளை ஏற்றுக் கொள்ளுவதென்பது, நோய் தீர்க்காத மருந்தை தொடர்ந்து உட்கொள்வதற்கு சமனானதாகும் என்பதையும் கூறித்தானாக வேண்டும் இவை ஒருபுறம் இருக்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் ஏற்பட்டுள்ள ஒற்றுமையீனங்கள் உடனடியாக சரிப்படுத்தப்பட வேண்டும் என்பதில் இந்தியா மிகத் தீவிரமாக இருப்பது தெரிகிறது.
இலங்கைக்கான இந்தியத் தூதுவர் வை.கே. சிங்கா அவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பாக யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்து வடக்கின் முதல் வர் விக்னேஸ்வரன் அவர்களைச் சந்தித்தார்.இச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமை என்பதை அவர் வலியுறுத்தியிருந்தமை தெரிந்ததே.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமை என்பதற்கு ஊடாக வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ் வரன் அவர்களையும் கூட்டமைப்பின் தலைமையையும் ஒரு சமரசத்துக்குக் கொண்டு வருவது சிங்காவின் யாழ்ப்பாண விஜயத்துக்கான நோக்கத்தில் ஒன்று எனக் கூறிக் கொள்ளலாம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் வடக்கின் முதல்வருக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் இருக்கும் போது, இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ற விடயம் இந்தியாவின் கட்டுப்பாட்டை மீறி புதியதொரு பரிமாணத்தை பெற்றுக் கொள்ளலாம்.
இத்தகையதொரு சந்தர்ப்பம் 13ஆவது திருத்தச் சட்டமூலத்தை அமுல்படுத்துதல் என்ற இந்தியாவின் நினைப்பை பாதிக்கும் என்று இந்திய இராஜதந்திரம் கருதுகின்றது.இந்நிலையிலேயே இலங்கைக்கான இந்தியத் தூதுவர் வை.கே.சிங்கா வடக்கின் முதல்வரைச் சந்தித்து கூட்டமைப்புக்குள் ஒற்றுமையை ஏற்படுத்த முற்பட்டார் என்று கூறிக்கொள்ளலாம்.
வலம்புரி ஆசிரியர் தலையங்கம்