இராணுவம் அறிவித்த ஊரடங்கு நேரத்திலேயே பலர் கைதாகி காணாமல் போனார்கள் - பெருமளவானோர் சாட்சியம்
இராணுவம் ஊரடங்கு அறிவித்தலை விடுத்துவிட்டு மேற்கொண்ட சுற்றிவளைப்புகளிலேயே பலர் கைது செய்யப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்டார்கள் என்று ஜனாதிபதி ஆணைக்குழு முன் அதிகளவானவர்கள் சாட்சியமளித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் விசாரணைகளை ஆரம்பித்துள்ள காணாமல் போனவர்களை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழு இரண்டாவது நாளாக நேற்று சனிக்கிழமை யாழ்.பிரதேச செயலர் பிரிவிலிருந்து கிடைத்த முறைப்பாடுகள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டிருந்தது.
இவ்விசாரணையின் போது சாட்சியமளிக்க வந்தவர்களில் பலர் தமது உறவுகள் இராணுவத்தினால் ஊரடங்கு அறிவிப்பு விடுக்கப்பட்ட பின்னர் நடத்தப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது கைது செய்யப்பட்டே பின்னர் காணாமல் போனதாக சாட்சியங்களை பதிவு செய்துள்ளனர்.
குறிப்பாக மண்கும்பான், கொட்டடி, நாவாந்துறை, கொழும்புத்துறை, குருநகர், இராசாவின் தோட்டம், பாசையூர் போன்ற பகுதிகளில் 1990, 2006, 2007, 2008, 2009 ஆம் ஆண்டுகளில் திடீர் திடீரென இராணுவம் ஊரடங்கு உத்தரவுகளை பிறப்பித்திருந்தது.
இவ்வாறு ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்ட சந்தர்ப்பங்களில் இராணுவம் ஒவ்வொரு பிரதேசங்களாக சுற்றிவளைப்பினை நடத்தியிருந்தது. இதன் போது தலையாட்டிகளை வைத்தும், விசாரணைகள் என்ற போர்வையிலும் இராணுவம் பலரைக் கைது செய்து சென்றது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் எவரும் இதுவரை விடுதலை செய்யப்படவில்லை. அவர்கள் எங்கிருக்கின்றார்கள் என்ற பதில் கூட இதுவரையில் தெரியவரவில்லை. அந்தக் காலங்களில் எமக்குத் தேவையானவற்றினைக் கூட பெற்றுக் கொள்ள முடியாத நிலை. இதனால் கைது செய்த இராணுவத்தின் தகவலை கூட அறிய முடியாத சூழ்நிலை காணப்பட்டது.
கண்முன்னே எமது உறவுகளை இராணுவம் கைது செய்து சென்றது. மறுநாள் போய் இராணுவ முகாமில் கேட்டால், அவ்வாறு ஒருவரையும் நாங்கள் கைது செய்யவில்லை என்று இராணுவத்தினர் கூறுவர். அவ்வாறு கைது செய்திருந்தால் விசாரணையின் பின்னர் விடுவிப்போம் என்று கூறுவார்கள்.
இராணுவம் சொல்வதைக் கேட்க வேண்டிய நிலையில் அப்போது இருந்தோம். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்வதைத்தவிர வேறு எதனையும் எங்களால் முன்னெடுக்க முடியவில்லை. இதுமட்டுமல்லாமல் பொலிஸார் கூட முறைப்பாடுகளை ஏற்றுக் கொள்ள மறுத்தார்கள் என்றும் அதிகமானவர்கள் தமது சாட்சியங்களில் தெரிவித்திருந்தனர்.