ஒடுக்கும் இனம் ஒருபோதும் நின்மதியாக வாழமுடியாது-சிறப்புரை
தீவின் ஒட்டுமொத்த மனித உரிமைச் சூழலானது ஒப்பீட்டளவில் தேறி வருகிறது. தமிழ் மக்களைப் பொறுத்தவரை இம்மாற்றங்களில் அதிகமானவை மேலோட்டமானவையே.
(கடந்த வியாழக்கிழமை யாழ்ப்பாணம் முத்தவெளி அரங்கில் நிகழ்ந்த மனித உரிமைகள் தினக்கூட்டத்தில் ஆற்றிய உரையின் சுருக்கம்)
முன்னைய கட்டுரைகள்
ஆனால் சிங்கள முஸ்லிம் மக்களைப் பொறுத்தவரை குறிப்பிடத் தக்களவுக்கு மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. ஜனவரி 08 இற்குப் முன்பிருந்த நிலைமைகளோடு ஒப்பிடுகையில் கடந்த பத்து மாதங்களாக தென்னிலங்கையில் மனித உரிமைச் சூழலானது ஒப்பீட்டளவில் மேம்பாடடைந்து வருகின்றது.
இந்த வளர்ச்சியை சிங்கள மக்கள் மட்டும் போராடிப் பெறவில்லை. தமிழர்களும் முஸ்லிம்களும் சிங்களவர்களும் சேர்ந்து பெற்ற வெற்றி இது. தமிழ் வாக்குகள் இல்லை என்றால் மாற்றம் நிகழ்ந்திருக்காது. அதாவது தமிழ் மக்கள் வாக்களித்திருக்காவிட்டால் சிங்கள மக்கள் இப்பொழுது அனுபவித்துக் கொண்டிருக்கும் மனித உரிமைச் சூழல் கிடைத்திருக்காது.
2009 மே மாதத்தோடு தமிழர்களுடைய ஆயுதப் போராட்டத்தை தோற்கடித்த பின்னரும் சிங்கள மக்களுக்கு முழுஅளவு மனித உரிமைச் சூழல் கிடைக்கவில்லை.
நந்திக்கடற்கரையில் தோற்கடிக்கப்பட்டது தமிழர்களுடைய ஆயுதப் போராட்டம் மட்டுமல்ல. இலங்கைத்தீவு முழுவதிலும் அரசாங்சாங்கத்துக்கு எதிராகப் போராடலாம் என்ற நம்பிக்கையும் தோற்கடிக்கப்பட்டுவிட்டது. இதனால் அதிலிருந்து தொடங்கி இவ்வாண்டு ஜனவரி 08 வரையிலும் சிங்கள மக்களின் மனித உரிமைச் சூழலும் உட்பட முழு இலங்கைத் தீவினதும் மனித உரிமைச் சூழலானது பின்தங்கிய நிலையிலேயே காணப்பட்டது. அதாவது தமிழர்களைத் தோற்கடித்ததன் மூலம் சிங்கள மக்களுடைய மனித உரிமைச் சூழலை மேம்படுத்த முடியாது என்பதே வெற்றிவாதத்தின் கீழான அந்த ஆறாண்டுகால அனுபவத்திலிருந்து பெற்ற படிப்பினையாகும்.
தமிழர்களை தோல்வியுற்ற தரப்பாகப் பேணிக்கொண்டு சிங்கள மக்களால் மனித உரிமைகளை அனுபவிக்க முடியவில்லை. ஆனால் வெற்றி வாதத்திற்கு எதிராக தமிழர்களையும் அரவணைக்கும் ஒரு நிலை வந்த பொழுது சிங்கள மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் மனித உரிமைச் சூழல் மேம்பாடடையத் தொடங்கியது. எனவே இலங்கைத்தீவின் மனித உரிமைச் சூழலை தனித்தனிய சிங்களவர்களாலும் கட்டி எழுப்ப முடியாது தமிழர்களாலும் கட்டி எழுப்ப முடியாது முஸ்லிம்களாலும் கட்டி எழுப்ப முடியாது என்பதே ஆயுதமோதல்களின் போதும் ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்தபின்னருமாகிய இருவேறு காலங்களில் இருந்தும் பெற்றுக்கொண்ட படிப்பினையாகும்.
அதை பின்னவருமாறு பிழிவாகக் கூறலாம். தமிழ் மக்களுக்கு மனித உரிமைகள் இல்லை என்றால் அது சிங்கள மக்களுக்கும் இல்லை.
இப்பொழுது, ஆட்சி மாற்றம் நிகழ்ந்து பத்து மாதங்களின் பின் எல்லாமும் வழமைக்குத் திரும்பிவிட்டது என்று மாற்றத்தின் காவலாளிகள் கூறுகிறார்கள். கடந்த பத்து மாதங்களாக படிப்படியாக விருத்தியுற்று வரும் தமிழ் சிவில் வெளியையும் நாடு முழுவதிலும் நிலவி வரும் அசுவாசச் சூழலையும் சுட்டிக்காட்டி, இப்பொழுது எல்லாமும் வழமைக்குத் திரும்பிவிட்டன என்றும் அவர்கள் கூறப்பார்க்கிறார்கள்.
தமிழர்கள் நாட்டின் எந்தப் பாகத்திலும் சென்று குடியேறலாம் எங்கேயும் காணி வாங்கலாம், கடை திறக்கலாம் அப்படியே சிங்கள மக்களும் வடக்குக் கிழக்கிற்குச் சென்று காணி வாங்கலாம், கடை வைக்கலாம் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
தமிழ் மக்கள் தென்னிலங்கையில் காணி வாங்குவதும் கடை வைப்பதும் தனிநபர் உரிமைகளின்பாற்பட்டவைகளே (Individual rites). சிங்கள மக்கள் யாழ்ப்பாணத்தில் காணி வாங்குவதும் கடை வைப்பதும் தனிநபர் உரிமைகளின்பாற்பட்டவைகளே.
ஆனால் அரசாங்கத்தின் பின்பலத்தோடு நாவற்குழியில் ஒரு தொகையாக வந்து குடியேறுவது தனிநபர் உரிமையின் பாற்பட்டது அல்ல. அது கூட்டுரிமையின் பாற்பட்டது (collective rights). அல்லது அரசியலுரிமைகளின்பாற்பட்டது (political rights).
பயங்கரவாத தடைச் சட்டம் எனப்படுவது தமிழ் மக்களுடைய அரசியல் உரிமைகளுக்கு எதிரானது. உயர்பாதுகாப்பு வலயங்களுக்காக தமிழ் மக்களுடைய காணிகளைப் பிடித்து வைத்திருப்பது தமிழ் மக்களுடைய காணி உரிமைகளுக்கு எதிரானது.
இறந்து போனவர்களையும் காணாமல் போனவர்களையும் தமிழ் மக்களால் கணக்கெடுக்க முடியவில்லை என்பது அவர்களின் கூட்டுரிமைகள் மற்றும் அரசியலுரிமையிற்பாற்பட்டது. இறந்தவர்களை நினைவு கூர முடியவில்லை என்பதும் தமிழர்களின் கூட்டுரிமை மற்றும் அரசியலுரிமையின்பாற்பட்டது. மேற்கண்ட எல்லாவற்றையும் பின்வருமாறு தொகுத்துச் சொல்லலாம். தமிழ் மக்களுக்குரிய தன்னாட்சி அலகு எது என்பது பற்றிய விவாதம் முழுக்க முழுக்க அவர்களுடைய கூட்டுரிமைகள் மற்றும் அரசியலுரிமைகளின் பாற்பட்டது.
தமிழ் மக்கள் போராடியது தனிநபர் உரிமைகளுக்காக மட்டும் அல்ல. தமது இனம் மொழி நிலம் போன்ற பொது அடையாளங்களின் பாற்பட்ட கூட்டுரிமைகள் மற்றும் அரசியல் உரிமைகள் எல்லாவற்றிற்குமாகவே தமிழ் மக்கள் போடினார்கள்.
எனவே, தமிழ் மக்களின் கூட்டுரிமைகளையும், அரசியலுரிமைகளையும் அங்கீகரித்துப் பாதுகாக்கும் ஓர் அரசியல் தீர்வைக் கண்டுபிடிக்காதவரை தமிழ் மக்களின் மனித உரிமைச் சூழலை முழு அளவுக்கு மேம்படுத்த முடியாது.
இதை மறுவளமாக சொன்னால் தமிழ் மக்களுடைய மனித உரிமைச் சூழலை முழுமையாகப் பாதுகாப்பது என்றால் அவர்களுடைய தனிநபர் உரிமைகளும் உட்பட கூட்டுரிமைகளையும் அரசியல் உரிமைகளையும் அங்கீகரித்து பாதுகாக்கின்ற ஒரு தீர்வு கண்டு பிடிக்கப்பட வேண்டும். தமிழ் மக்களுடைய கூட்டுரிமை மற்றும் அரசியலுரிமைகளை அங்கீகரிப்பது என்பது அதன் முழுமையான பொருளில் தமிழ் மக்களின் தேசிய இருப்பை அங்கீகரிப்பதுதான் அதாவது தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாக அங்கீகரிப்பதுதான்.
தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாக அங்கீகரித்தால் ஒற்றையாட்சி முறைமைக்குள் நின்று தீர்வைத் தேட முடியாது. மாறாக ஒற்றையாட்சிக்கு வெளியே சென்று தீர்வைத் தேட வேண்டியிருக்கும். ஒரு தேசிய இனம் என்ற ரீதியில் தமிழ் மக்களின் கூட்டு இருப்பில் இருந்து பிரிக்கப்படவியலாத கூட்டுரிமைகளையும் அரசியல் உரிமைகளையும் அங்கீகரித்தால்தான் தமிழ் மக்களுடைய மனித உரிமைச் சூழலை முழுமையாக மேம்பாடடையச் செய்யலாம். தமிழ் மக்கள் மனித உரிமைகளை முழுமையாக அனுபவிக்கும் ஒரு நிலை வரும் பொழுதே சிங்கள மக்களும் மனித உரிமைகளை முழுமையாக அனுபவிக்கலாம்.
அண்மையில் யாழ். YMCA மண்டபத்தில் நிகழ்ந்த சிவில் சமூகங்களுக்கிடையிலான ஒன்று கூடலின் போது மன்னாரைச் சேர்ந்த ஒரு சிவில் சமூகப் பிரதிநிதியான ஒரு பெண் சிங்கள சிவில் சமூகப் பிரதிநிகளை நோக்கி ஒரு கேள்வி கேட்டார். “சமஸ்டி தீர்வைப் பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்” என்று. இக்கேள்விக்கு காலியைச் சேர்ந்த ‘பிரஜைகள் சக்தி’ (பிரஜா பலய) என்ற அமைப்பின் உறுப்பினரான ஒரு முதியவர் பின்வரும் தொனிப்பட பதிலளித்தார்.
“சமஸ்டி என்ற சொல் சிங்கள மக்களுக்கு முழுமையாக விளங்கவில்லை. அது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. சமஸ்டி தீர்வு என்பதை அவர்கள் பிரிவினையாகவே விளங்கி வைத்திருக்கிறார்கள்.” என்று.
இதுதான் யதார்த்தம். சிங்கள மக்கள் மத்தியில் மிகவும் தவறாகப் புரிந்துகொளளப்பட்ட ஒரு சொல் சமஸ்டி எனலாம். ஆனால் இலங்கைத்தீவின் நவீன அரசியலில் சமஸ்டிக் கோரிக்கைகளின் முன்னோடிகளில் ஒருவராகப் பண்டாரநாயக்காவே காணப்படுகின்றார் என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.
ஒற்றையாட்சிக்கு வெளியே சென்று தீர்வைத் தேடுவது என்பது அதாவது தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்கக் கோருவது என்பது பிரிவினைக் கோரிக்கை அல்ல என்று இரண்டு பெரிய தமிழ்தேசியக் கட்சிகளும் ஏற்கனவே கூறிவிட்டன. “ஒரு நாடு இரு தேசம்” என்ற கொள்கையை முன்வைக்கும்; தமிழ்த்தேசிய மக்கள முன்னணி பல தடவைகள் இதைத் தெளிவாக எடுத்துக் கூறியிருக்கிறது. மேற்சொன்ன YMCA மண்டபத்தில் நிகழ்ந்த சந்திப்பின் போதும் உரையாற்றிய கூட்டமைப்பின் பிரதிநிதியும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பிரதிநிதியும் அவ்வாறே தெரிவித்திருந்தார்கள்.
ஒரு மக்கள் கூட்டத்தை தேசிய இனமாக அங்கீகரிப்பது என்பது அதன் கோட்பாட்டு விளக்கங்களின்படி அந்த மக்கள் கூட்டத்திற்குரிய பிரிந்து செல்லும் உரிமையை அங்கீகரிப்பதும்தான். ஆனால் கெடுபிடிப் போருக்குப் பின்னரான உலகச் சூழலில் இவ்வாறான பிரிந்துசெல்லும் உரிமைகள் பிரயோகிக்கப்பட்ட நாடுகளை சிங்கள மக்கள் உற்றுக் பார்க்க வேண்டும். எங்கெல்லாம் மக்கள் பிரிவினைக்கு ஆதரவாக வாக்களித்திருக்கிறார்கள்? அல்லது எதிராக வாக்களித்திருக்கிறார்கள்? எங்கெல்லாம் மனித உரிமைச் சூழலும் ஜனநாயக் சூழலும் சிவில் வெளியும் செழிப்பாகக் காணப்படுகின்றனவோ அங்கெல்லாம் மக்கள் பிரிவினைக்கு எதிராகவே வாக்களித்திருக்கிறார்கள். உதாரணம்- கியூபெக், ஸ்கொட்லாண்ட்.
அதே சமயம் எங்கெல்லாம் மனித உரிமைச் சூழலும் ஜனநாயகச் சூழலும் பின்தங்கிக் காணப்படுகின்றனவோ அங்கெல்லாம் மக்கள் பிரிவினைக்கு ஆதரவாகவே வாக்களித்திருக்கிறார்கள். உதாரணம் தென் சூடான், கிழக்குத்தீமோர். இவ் உதாரணங்களில் இருந்து சிங்களத் தலைவர்களும் மகா சங்கமும்,சிங்கள புத்தி ஜீவிகளும் சிங்களச் சிவில் சமூகங்களும் ஊடகங்களும் கற்றுக் கொள்ள வேண்டிய முக்கிய பாடம் ஒன்று இருக்கின்றது.
அதே சமயம் எங்கெல்லாம் மனித உரிமைச் சூழலும் ஜனநாயகச் சூழலும் பின்தங்கிக் காணப்படுகின்றனவோ அங்கெல்லாம் மக்கள் பிரிவினைக்கு ஆதரவாகவே வாக்களித்திருக்கிறார்கள். உதாரணம் தென் சூடான், கிழக்குத்தீமோர். இவ் உதாரணங்களில் இருந்து சிங்களத் தலைவர்களும் மகா சங்கமும்,சிங்கள புத்தி ஜீவிகளும் சிங்களச் சிவில் சமூகங்களும் ஊடகங்களும் கற்றுக் கொள்ள வேண்டிய முக்கிய பாடம் ஒன்று இருக்கின்றது.
எவ்வளவுக்கெவ்வளவு ஒரு நாட்டில் மனித உரிமைச் சூழலும் பொருளாதார வளர்ச்சியும் செழிப்பாகக் காணப்படுகின்றனவோ அங்கெல்லாம் மக்கள் பிரிந்துபோக விரும்புவதில்லை. எனவே தமிழ் மக்களுக்குரிய முழு அளவு மனித உரிமைச் சூழலை பாதுகாப்பதுதான் அதாவது அவர்களுடைய கூட்டு உரிமைகளையும் அரசியல் உரிமைகளையும் ஆகக் கூடிய பட்சம் அங்கீகரிப்பதுதான் பிரிவினைக் கோரிக்கையல்லாத வேறு கோரிக்கைகளை நோக்கித் தமிழர்களை சிந்திக்கத்தூண்டும்.
தமிழ் மக்களின் ஆயுத எதிர்ப்பு அடக்கப்பட்டு ஏறக்குறைய ஆறே முக்கால் ஆண்டுகளாகிவிட்டன. தமிழ் மக்களை தோற்கடிக்க முற்பட்ட எல்லாக் காலகட்டங்களிலும் இலங்கைத்தீவானது அதன் இறையாண்மையை இழக்க நேரிட்டிருக்கிறது. சிங்கள மக்களும் முஸ்லிம் மக்களும் தங்களுடைய மனித உரிமைகளையும் இழக்க நேரிட்டிருக்கிறது. 1987இல் ஒப்பரேசன் லிபரேசனின் போது இந்தியப் படைகள் நாட்டுக்குள் வந்தன. 2002 இல் ஸ்கன்டினேவிய போர்நிறுத்த கண்காணிப்பாளர்கள் நாட்டுக்குள் வந்தனர்.
ஆயுதப்போராட்டத்தை தேரற்கடித்த பின் இலங்கைத் தீவானது அனைத்துலக அரங்கில் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டது. இப்பொழுதும் நிறுத்தப்பட்டுள்ளது. தமிழர்களைத் தோற்கடிக்க முற்பட்டதன் விளைவாக சிங்கள மக்கள் வெளியாரை நம்ப வேண்டியிருந்திருக்கிறது. அல்லது வெளியாரின் படைகளை அல்லது வெளிக்கண்காணிப்பாளர்களை நாட்டுக்குள் கொண்டுவர வேண்டியிருந்திருக்கிறது. இப்பொழுது வெளியாருக்கு பதில் சொல்லவும் பொறுப்புக் கூறவும் வேண்டியிருக்கிறது.
தமிழர்களைத் தோற்கடிக்க முற்பட்ட வேளைகளிலும் அல்லது தமிழர்களை தோற்கடிக்கப்பட்ட . ஒரு தரப்பாக தொடந்தும் பேண முற்பட்ட வேளையிலும் சிங்கள மக்களும் தமது இறையாண்மையை இழக்க நேரிட்டது. மார்க்சிய மூலவர்கள் கூறுவது போல ஒடுக்கும் இனம் ஒரு போதும் நிம்மதியாக இருக்க முடியாது. எனவே தமிழ் மக்களின் தேசிய இருப்பை ஏற்றுக் கொண்டால்தான் முழு இலங்கைத் தீவும் அதன் முழுமையான பொருளில் மனித உரிமைகளை அனுபவிக்க முடியும்.
முன்னைய கட்டுரைகள்