Breaking News

தாஜுதீன் கொலை விவகாரம் - மகிந்தவின் சாரதி கைதாகிறார்

 ரக்பி அணியின் முன்னாள் தலைவர் வசீம் தாஜுதீன் கொலை வழக்கில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சாரதி ஒருவர் கைது செய்யப்படவுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரித்து வரும் குற்றப்புலனாய்வுத் துறையினர், மகிந்த ராஜபக்சவின் சாரதியாக இருந்த இராணுவ அதிகாரி ஒருவரை இந்த வாரம் கைது செய்து விசாரிக்கவுள்ளனர்.

மேலும் பலரும் இவருடன் கைது செய்யப்படவுள்ளதாக குற்றப்புலனாய்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.மகிந்த ராஜபக்சவின் சாரதியாக பணியாற்றிய இராணுவ அதிகாரி, தற்போது மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு அணியில் இருந்து நீக்கப்பட்டு, திருகோணமலையில் உள்ள இராணுவ முகாமில் பணியாற்றி வருகிறார்.

தாஜுதீன் கொலை செய்யப்படுவதற்கு முன்னர் வாகனத் தரிப்பிடம் ஒன்றில் பதிவு செய்யப்பட்ட சிசிரிவி காணாளிப் பதிவை வைத்து விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.அங்கிருந்த வாகனங்களையும் நபர்களையும் அடையாளம் காண்பதற்காக இந்த காணொளிப் பதிவு கொழும்பு பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது .

தேவைப்பட்டால் இதனை வெளிநாட்டுக்கு அனுப்பி ஆய்வு செய்யவும் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

அதேவேளை, இந்தக் கொலை தொடர்பாக, பொய்யான தகவல்களை வழங்கியது தொடர்பாக, முன்னாள் பிரதி காவல்துறை மா அதிபர் அனுர சேனநாயக்க, மற்றும் முன்னாள் சட்ட மருத்துவ அதிகாரி ஆனந்த சமரசேகர ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.